செஞ்சியின் ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகுதான் சொரூப்சிங் செஞ்சி வருகின்றார்
எனச் சரித்திரம் கூறுகின்றது. இது நிகழ்ந்தது கி.பி. 1700 என வரலாறு
உறுதிப்படுத்துகின்றது. சொரூப்சிங் 1713இல் இறந்து விடுகின்றார். இவருக்குப்பின்
இந்தூஸ்தானம் பொந்திலிகண்டிலிருந்து வந்த இவர் மகன் தேசிங்கு தன் இருபத்திரண்டாவது
வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றான். எனவே, தேசிங்கு செஞ்சியிலேயே
பிறந்து வளர்ந்தான் என்று கூறும் கதைப்பாடல் செய்தியை விட, தந்தை நோயுற்ற
செய்தி கேட்டு, பொந்திலிகண்டில் வாழ்ந்து கொண்டிருந்த தேசிங்கு இங்கு
வந்தான் எனக் கூறும் சரித்திரம் பொருந்துவதாகத் தெரிகின்றது.
2.6.1
பிறப்பும் வளர்ப்பும்
கதைப்பாடலில்
தேசிங்கு சிறுவனாக இருக்கும்போதே பெற்றோரை இழந்தான் எனவும் அதன்பின்
அவன் சிறிய தந்தை தரணிசிங்கால் வளர்க்கப்பட்டு மணம் செய்விக்கப்படுகிறான்
எனவும் வரும் செய்திகள் ஈண்டு நோக்கத்தக்கன. தேசிங்கு சிறுவனாக இருக்கும்
போதே பெற்றோர்கள் அவனைப் பிரிந்து செஞ்சி வந்தனர் எனவும், அப்போது
பொந்திலிகண்டிலிருந்த அவன் சிறிய தந்தை அவனை வளர்த்து மணமுடித்து வைத்தான்
எனவும், தந்தையின் உடல் நலக் குறைவு பற்றிய செய்தி கிடைத்து தேசிங்கு
செஞ்சி வந்தான் எனவும் இருந்திருக்க வேண்டிய செய்தியே கதைப்பாடலில்
அவ்வாறு திரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. தேசிங்கு இங்கேயே
பிறந்து வளர்ந்தவன் எனக் கூறுவது வாயிலாகக் கேட்பவர்கள் மனத்தில் தேசிங்கு
பற்றிய நெருக்கமான ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கதைப்பாடல் ஆசிரியன்
இவ்வாறு கூறியிருக்கலாம் எனக் கருதலாம்.
·
குதிரையை அடக்குதல்
தேசிங்கு
ராஜன் தன் ஐந்தாவது வயதில் டில்லி சென்று குதிரையை அடக்கி டில்லி பாதுஷாவிடம்
பரிசு பெற்றான் என்று கதைப்பாடலில் கூறப்படும் செய்தி முற்றிலும் கற்பனையாகும்.
குதிரையை அடக்குவது பற்றிய இந்நிகழ்ச்சியை, சரித்திர நிகழ்ச்சி ஒன்றுடன்
ஒப்பிடும்போது இது உண்மையின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்று கருதத்
தூண்டுகிறது. சரித்திர நிகழ்ச்சியாவது: ‘பீதனூர் அரசன் வேண்டுகோளின்படி
அவன் பகைவர்களை ஒடுக்குகின்றான் தேசிங்கு. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டிப்
பீதனூர் அரசன் அவனுக்குப் பன்னீராயிரம் ரூபாய் விலைமதிப்புள்ள குதிரையும்
ஒரு லட்ச ரூபாய் பணமும் பரிசாகத் தருகின்றான். அந்தக் குதிரை பிறர்
ஏறமுடியாத முரட்டுத் தனம் உடையது. ஆயினும் தேசிங்கு அதைப் பழக்கிக்
கொண்டான்!’
இந்நிகழ்ச்சிகளின்
அடிப்படையிலேயே ‘குதிரையை அடக்கித் தந்தையைச் சிறை மீட்டதும் பரிசு
பெற்றதுமான’ கதைப்பாடல் கற்பனைகள் தோன்றியிருக்கலாம்.
·
தேசிங்கின் மனைவி
தேசிங்கின்
மனைவியாகிய இராணியம்மாள் டில்லி பாதுஷாவின் மகள் எனக் கதைப்பாடல் கூறுகிறது.
இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. குதிரையை அடக்குவது என்ற ‘கற்பனையை ஒட்டிய
கற்பனை’ என்று இதனைக் கொள்ளலாம்.
·
தேசிங்கின் ஆட்சிக்காலம்
தேசிங்கு
பட்டம் ஏற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நவாப் சதத்துல்லாகான், லாலா
தோடர்மாலை அனுப்பி வைக்கிறான். தேசிங்கு பணம் கட்ட மறுக்கிறான். லாலா
தோடர்மால் செய்தியைச் சதத்துல்லாகானுக்கு அறிவிக்கிறான். இந்நிகழ்ச்சிகள்
இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் நடந்திருக்கலாம். செய்தி அறிந்த
நவாபு ஒரு மாதத்திற்குள் படையுடன் வருகின்றான். போர் தொடங்குகின்றது.
எனவே, தேசிங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒன்பது அல்லது பத்தாவது மாதத்தில்
வீர மரணம் அடைகின்றான்.
·
தேசிங்கின் முடிவு
எதிரி
யாருமின்மையால் கத்தியை மேலெறிந்து தன் மார்பில் தாங்கிக் கொண்டான்
தேசிங்கு என்று கதைப் பாடல் கூறுகின்றது. சுடப்பட்டு இறந்ததாகச் சரித்திரம்
கூறுகின்றது. தேசிங்கு எதிரிகளால் கொல்லப்பட்டான் என்று கூறுவது அவன்
வீரத்துக்கு இழுக்கு என்பதால், அவன் இறுதிமுடிவு கதைப் பாடலில் இவ்வாறு
திரித்துக் கூறப்பட்டிருக்கின்றது.
2.6.2
தேசிங்கும் மோவுத்துக்காரனும்
தேசிங்கு
கதைப் பாடலில் அதிகமாகப் புகழ்ந்து பேசப்படுபவர்கள் தேசிங்கும் அவன்
உயிர் நண்பன் ஆகிய மோவுத்துக்காரனுமே ஆவர். தேசிங்கு கும்மி, தேசிங்கு
ராசா பாட்டு ஆகிய இரண்டும் தேசிங்கு கதைப் பாடல்களுள் பழமையானவை. ஆயின்
இக்கதைப் பாடல்களில் மோவுத்துக்காரன் என்ற பாத்திரம் இடம் பெறவில்லை.
தேசிங்கு ராஜன் ஆண்ட காலக்கட்டத்தில் இந்து - முசுலீம் உறவுநிலை சிறப்பானதாக
இல்லை. அந்தச் சூழலில் கதைப் பாடகர்கள் முசுலீமான மோவுத்துக்காரனை
ஒரு பாத்திரமாகப் படைக்காமல் விட்டதில் வியப்பு எதுவும் இல்லை. அடுத்து,
இன்று வழங்கி வருகின்ற தேசிங்கு ராசன் கதைப் பாடலுக்கு முன்னரே தோன்றியிருக்கும்
என்று கருதத்தக்க தேசிங்குராசன் சண்டையில் கூட மோவுத்துக்காரன் பாத்திரம்
இடம் பெறவில்லை. இக்கதைப் பாடலில் காணப்படும் சில தொடர்கள் இந்து -
முசுலீம் உறவுநிலை மோசமாக இருந்ததனை எடுத்துரைக்கின்றன. நவாபின் சார்பில்
செஞ்சி வந்து வரி கேட்கும் லாலா தோடர்மாலுக்குத் தேசிங்கு கூறும் மறுமொழி
கருவாடு
விக்கிற லப்பைக் கெல்லாம்
தோப்பா குடுப்பேனா
என்று அமைந்துள்ளது. இதேபோல்
நவாப்போடு சண்டைக்குச் செல்லுமுன் தேசிங்கு அரங்கநாதரிடம் வேண்டிக்
கொள்வதாக அமைந்த பின்வரும் அடிகளும் இந்து - முசுலீம் உறவைச் சுட்டுகின்றது.
இந்தவிசை நவாப்பு கையினாலே
நான் செத்துப் போனால்
துலுக்கர் வந்துனது கோவிலெல்
லாம் சூரையிடுவார்கள்
·
தேசிங்குராசன் சண்டை
பொதுமக்களிடம் வழக்கிலிருந்த காலம் வரை இந்து - முசுலீம் உறவுநிலை
சீரடையவில்லை. ஆனால் வெள்ளையர்களின் சுரண்டல் ஆட்சியில் இந்நிலை மெல்ல
மாற்றம் பெறுகின்றது. வெள்ளையன் என்ற பொது எதிரியை வீழ்த்த இந்து -
முசுலீம் ஒற்றுமை குறித்து எழுத்து வாயிலாகவும் பேச்சு வாயிலாகவும்
பிரச்சாரம் செய்யப்பட்டது. இக்காலக்கட்டத்தில் ‘தேசிங்கு கதை’ வளர்ச்சி
பெறுகின்றது. மோவுத்துக்காரன் என்ற பாத்திரம் இங்குச் சிறப்பிடம் பெறுகிறது.
பிற்காலக் கதைப் பாடகனுக்கு மோபத்கான் பற்றிய செய்தி மக்களிடமிருந்தும்
‘கர்நாடக
ராசாக்கள் சவிஸ்தார சரித்திரம்’
மற்றும் தென்னாட்டுப்
பழங்கதைகள் என்ற
நூல்களிலிருந்தும் கிடைத்திருக்கின்றது. இவ்வாறு கிடைத்த செய்திகளை
ஆதாரமாகக் கொண்டு ‘தேசிங்குராசன் கதை’
பாடிய பாடகர்கள் மோவுத்துக்காரன் பாத்திரத்தை விரிவாக்குகின்றனர்.
·
தேசிங்குராசன்
இவன்
இராஜபுத்திர பரம்பரையில் தோன்றியவன். தமிழ்நாட்டிலுள்ள செஞ்சியில்
கோட்டை கட்டி வாழ்ந்தவன், மக்களின் மதிப்பைப் பெற்று மாவீரனாக விளங்கி
வீர மரணம் அடைந்தவன். இத்தகைய அழியாப் புகழைப்பெற்ற தேசிங்கு ராஜனின்
சிறப்பு மிக்க வரலாறு கதைப்பாடலாக மலர்ந்துள்ளது. டெல்லி பாதுஷாவே
புகழ்ந்து பாராட்டிய மாவீரன். முரட்டுக் குதிரையின் பிடரியைப் பிடித்து
அடக்கியாளும் ஆண்மை மிக்கவன்.
இன்றைக்குஞ்
சாவு நாளைக்குஞ் சாவு
இருக்குது தலைக்கு மேலே
ஒன்றுக்கும் நீயஞ்ச வேண்டாம்
உறுதி கொள்ளுமையா |
 |
என்ற
பாடலடிகள் அவன் அஞ்சா நெஞ்சத்தை எடுத்துக் காட்டுகின்றன. தேசிங்கு
ராசன் திருவரங்கநாதரை நினைத்து வணங்கும் இறைப் பற்றாளன். அவன் வீரத்தை
இசுலாமிய வீரன் ஒருவன் வியந்து கூறியது பின்வருமாறு:
செஞ்சிக்
கோட்டைச் சிப்பாயையா இராஜா தேசிங்கு
கத்தி பிடித்த சிப்பாய் மகனும் இராஜா தேசிங்கு அவன்,
கண்ணையுருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைப்பலங்களும் சிதறியோடுமே
டாறு டாறாய் தீர்த்துப் போடுவான் இராஜாதேசிங்கு |
 |
தேசிங்குராசன்
தோற்று எதிரியின் கையில் பட்டு மானமிழப்பதை விரும்பாமல் தானே வாளை
வீசி மாண்டு மடிந்ததை வியப்பாகப் பாராட்டிய ஆர்க்காட்டு நவாபு சதத்துல்லா
அவனை நல்லடக்கம் செய்து ஒரு மாவீரனுக்கு மரியாதை செய்த பெருமையைப்
பெறுகிறான்.
·
மோவுத்துக்காரன்
‘மோபத்கான்‘
என்ற பெயரே மாற்றம் பெற்று மோவுத்துக்காரன் என்று கதைப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
தேசிங்கின் உற்ற நண்பனாக அறிமுகமாகும் மோவுத்துக்காரன் இசுலாம் சமயத்தைச்
சார்ந்தவன். நட்புக்கும் வீரத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டாய்
விளங்கியவன். தன் இளமைப் பருவந்தொட்டே தேசிங்குக்கு நண்பனாக இருந்தான்.
இருவரும் காடுமலை சுற்றிக் கலங்கும்படிச் செய்வார்கள். பத்துப் பனைமரம்
உயரம் கிளம்பி பல்டியடிப்பார்கள். இத்தகைய உயிர் நண்பனாகத் திகழ்ந்த
அவனுடைய திருமண நாளில் தேசிங்கிடமிருந்து வீர அழைப்பு வருகின்றது.
திருமணம் மோவுத்துக்காரனின் வாழ்வில் ஒரு மதிப்பில்லாச் சாதாரண நிகழ்ச்சியாகிவிடுகிறது.
வீரப்போர் மதிப்பு மிக்க
பேறாக மதிக்கப்படுகிறது. தாயாலும் தடுக்க முடியாத வீர வெற்றியுடைய
மோவுத்துக்காரன் தாயின் திருவடிகளைப் பணிந்து கூறிய பின்வரும் வீரவுரை
வரலாற்றுப் பெருமையுடையது.
சண்டை கெலித்து வந்தேனானால் தாலி கட்டுகிறேன்
போரைக் கெலித்து வந்தேனானால் புகழ்ந்து கட்டுகிறேன்
மாண்டு மடிந்து போவேனானால் மனது கலங்காதே
தாலிமுடியும்
திருமணநாள் போலியான இன்பநாளாக வீரனால் கருதப்படுகிறது. போரில் குண்டடிபட்டு
விழும் மோவுத்துக்காரன்,
அல்லாரே அல்லாரே என்று கீழே விழுந்தானாம்
அரிகோவிந்தா என்று சொல்லிக் கீழே விழுந்தானாம்
என்று
கதைப்பாடல் விளக்குகின்றது. மோவுத்துக்காரனைப் போரில் இழந்த தேசிங்கு,
என்னுடன்
வளர்ந்த பிராண
சினேகிதன் மோவுத்துக்காரன் போனான்
எந்தன் பலமும் பாதி போச்சுது
மோவுத்துக்காரனோடே
என்று புலம்புகின்றான்.
தேசிங்கிற்கு இணையான
வீரனாகவே
கதைப்பாடல் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளது. |