2.7 தேசிங்குராசன் கதையும் பிற செய்திகளும்

தேசிங்குராசன் செஞ்சியை ஆண்ட போது அதனைச் சுற்றி நூற்று எழுபத்திரண்டு பாளையப்பட்டுகள் இருந்ததாகக் கதைப் பாடல் குறிப்பு தருகிறது, பாளையங்களின் ஒரு காலத்து வரலாற்றை ஓரளவு கண்டறிய இந்தக் கதைப்பாடல் உதவுகிறது, சமயப் பொறையை மிகவும் மதித்து இக்கதைப்பாடல் பாராட்டிச் சிறப்பிக்கிறது. தேசிங்குராஜன் அரங்கநாதப் பெருமானை நம்பிப் பணியும் வைணவனாக இருந்தும் தனக்கு உற்ற நண்பனாகவும் உயிருக்கு உயிரான துணைவனாகவும் மோவுத்துக்காரனைத் தேர்ந்தெடுத்ததை உயர்வாக மதித்துக் கதைப் பாடல் போற்றுகிறது.

கதைப்பாடலுக்கே உரிய நயங்களும் இதில் உண்டு. பாடலில் அமைந்த ஒலிநயம் குதித்தோடும் நீலவேணி (மோவுத்துக்காரனின் குதிரை), பாராசாரிக் (தேசிங்கின் குதிரை) குதிரைகள் போலவே குதித்துச் செல்கிறது.

தலை தலையாய் உருட்டிப் போடுறான் ராசா தேசிங்கு
டாறு டாறாய்க் கிழித்துப் போடுறான் ராசாதேசிங்கு

என்று கூறும் போது கேட்பார் செவிகளும் டாறு டாறாய்க் கிழிகின்றன.

தென்னங்குலை போல் புகுந்து வெட்டுறான் ராசாதேசிங்கு
சோளத்தண்டை வீசினாற்போல அறுத்துப் போடுகிறான்
வாழைத்தண்டை அறுத்தாற்போல வளைத்துப் போடுகிறான்

இப்படிப் பலப்பல உவமை நயங்கள் தேசிங்கின் வீரத்தை மேன்மேலும் சிறப்பிக்கின்றன. கதைப் பாடலுக்கே உரிய உத்தியான சகுனம் பார்த்தல் இதில் இடம் பெற்றுள்ளது. தேசிங்கும் மோவுத்துக்காரனும் போருக்குச் செல்வதற்கு முன் அரங்க நாதரை வேண்டி நிற்கிறான் தேசிங்கு. அப்பொழுது அரங்கநாதரின் மாலை கருகியது. முத்தாரங்கள் கழன்று விழுந்தன. நெற்றிமணியும் துளசிமாலையும் அறுந்து விழுந்தன. இது கண்டு அஞ்சாத தேசிங்கு, ‘போருக்கு நான் அஞ்சேன், போர் முகத்தில் எனக்கு வீரச்சாவு அளிப்பாயாக’ என வேண்டிக் கொண்டு கோவிலை வலம் வந்து போருக்குப் புறப்படுகிறான். ஆண்டவனே வந்து தடுத்தாலும் முன்வைத்த காலைப் பின்வைக்காத சுத்த வீரன் தேசிங்கு என அவனது வீரத்தைச் சிறப்பிக்க ஆசிரியர் கையாண்ட அற்புதமான உத்தியாகும் இது. நூலினுள் எங்கு நோக்கினும் ஆசிரியர் கையாளும் உத்திகள் அனைத்தும் தேசிங்கின் வீரத்தை வெளிப்படுத்தவே துணைநிற்கின்றன. எதிரிகளே வியந்து போற்றிய தேசிங்கின் வீரம் மக்களை வெகுவாகக் கவர்கிறது. அவனுடைய வீர மரணமும் அவன் மனைவியின் துயர முடிவும் மக்கள் மனத்தில் பதிந்து அவர்கள் மீது அனுதாபமும் அன்பும் கொள்ளச் செய்தன. தேசிங்கு உயிருடன் இருந்த போது அவனுக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவும் புகழும் அவன் இறந்தபிறகு அவனுக்கு மிகுதியாகவே கிடைத்தன. அவன் வரலாறு கலை வடிவம் பெற்றுக் கதைப் பாடல்களாக வளர்ச்சி பெற்றது.