3.0 பாட முன்னுரை

மனிதன் நாகரிகமடைந்த காலந்தொட்டுத் திட்டவட்டமான சமூக உறவுகளில் வாழ்கிறான். மனித சமுதாயம், தன்னைப் பேணிக்காத்துக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் இந்த உறவுகள் இன்றியமையாதவை. பழங்கற்காலம் தொட்டு இன்றைய கணிப்பொறிக் காலம் வரையில் மனித சமூகம் பல்வேறு சமூக அமைப்புகளாக வாழ்க்கை நடத்தியிருப்பினும் சமூக உறவுகளின் அடிப்படையில் அவை இயங்கிக் கொண்டு வருகின்றன. சமூக உறவுகள் என்பவை தொடர்ந்த இருப்போடு (Constant Existence) இயங்கும் அதே நேரத்தில் அவை காலந்தோறும் மாறிக்கொண்டு இயங்கும் (variable) நிலையும் பெற்றுள்ளன. இத்தகைய சமூக உறவுகளின் ஊடேதான் தமிழ்ச் சமூகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. குடும்பம், சாதி மற்றும் சமயம் என்கின்ற சமூக உறவுகள் நாட்டுப்புற இலக்கிய வகைகளில் ஒன்றான கதைப்பாடல்களில், குறிப்பாகச் சமூகக் கதைப்பாடல்களில் எந்த வகையில் விளக்கம் பெற்றுள்ளன என்பதை இப்பாடப்பகுதி விளக்குகிறது.