குறிப்பிட்டதொரு
பண்பாட்டில், குறிப்பிட்ட சில சூழல்களில்
வாய்மொழியாக, பாடகன் ஒருவனாலோ, ஒரு குழுவினராலோ
நாட்டார் முன்னர் எடுத்துரைக்கப்பட்டு இசையுடன்
நிகழ்த்தப்பட்டது; அல்லது இப்போதும் நிகழ்த்தப்படுவது;
குறிப்பிட்ட சமூக உறவுச் சிக்கல்களின் முரண்பாடுகளை
அடிப்படையாகக் கொண்டது; இத்தகைய தன்மைகளைக்
கொண்ட கதைப் பாடல்களைச் சமூகக் கதைப்பாடல்கள்
எனலாம்.
3.1.1
வகைகள்
சமூகக்
கதைப் பாடல்கள் என அறிஞர்களால் அடையாளம்
காட்டப்பட்டவற்றுள் சில:
1) நல்லதங்காள் கதை
2) முத்துப்பட்டன் கதை
3) சின்ன நாடான் கதை
4) சின்னத்தம்பி கதை
5) மம்பட்டியான் கதை
6) வெங்கலராசன் கதை
7) கௌதல மாடன் கதை
8) மதுரை வீரன் கதை
9) காத்தவராயன் கதை
10) கள்ளழகர் கதை
இவை போன்ற இருபதிற்கும்
மேற்பட்ட கதைகள் சமூகக்
கதைப்பாடல்கள் என
வகைப்படுத்தப்பட்டுள்ளன. பேராசிரியர்
நா.வானமாமலை
“சமூகச் சிக்கல்களை அடிக்கருத்துக்களாகக்
கொண்டவை சமூகக் கதைப்பாடல்கள்” என்று குறிப்பிடுவதோடு,
அக்கதைப் பாடல்களை எல்லாம் சமூக அடிக்கருத்துகளின்
அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றார்.
1) கலப்பு மணமும் அவற்றின்
துன்பியல் விளைவுகளும்.
(முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, சின்னநாடான்
கதை)
2) சாதிய அடக்குமுறையும் தாழ்த்தப்பட்ட
சாதியைச் சார்ந்த
நாட்டார்களுக்கு உயர்சாதி மக்களால் விளைவிக்கப்படும்
கொடுமைகளும் (சின்னத் தம்பி கதை)
3) தாய்வழி, தந்தைவழிச்
சமூகக் குழுவினருக்கிடையே
தாய்வழியினர் தந்தை வழியினரிடம் மணஉறவு தேடும்
பொழுது ஏற்படும் சண்டைகள் - (தோட்டுக்காரி அம்மன்
கதை, வெங்கலராசன் கதை)
4) பெண்களுக்குச் சொத்துரிமை
மறுக்கப்படுதலும் அவற்றின்
துன்பியல் விளைவுகளும் - (நல்லதங்காள் கதை)
5) சாதி சமயக் கட்டுப்பாடுகளைக்
கடந்த மனிதாபிமானம்
(கௌதல மாடன் கதை)
மேற்குறிப்பிட்ட
கருத்துக்களினடிப்படையில் அமைந்துள்ள
சமூகக் கதைப்பாடல்களில் பெரும்பாலானவை
மதுரை,
இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் எழுந்தவையாகும்.
அதாவது கி.பி.16, 17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் இத்தகைய
கதைப் பாடல்களில் பெரும்பாலானவை தோன்றின
என
முடிவுக்கு வருவதில் தவறில்லை. அக்கால அரசியல்,
பொருளாதார, சமூக நிலைமைகளைக் கண்டறிந்தால்
தமிழகத்தின் தெற்குப் பகுதியிலேயே பெரும்பாலான சமூகக்
கதைப் பாடல்கள் ஏன் தோன்றின என்ற வினாவிற்குரிய
விடை கிடைத்து விடும். அதனைச் சுருக்கமாகக் காணலாம்.
3.1.2
தோற்றம்
ஒரு
நிகழ்ச்சி நடந்து, அது மக்களின் மனத்தில் பதிந்து அதை
நினைவுகூரும் தேவை எழுந்த பின்னரே அது கதைப்பாடலாக
உருப்பெறும் என்கிறது. கிடைத்துள்ள வரலாற்றுக்
கதைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு காணும்
பொழுது கதைப் பாடல்களின் நிகழ்வுக் காலம் கி.பி. 16, 17, 18
ஆகிய நூற்றாண்டுகள் எனலாம். அதாவது தமிழ் பேசும்
பகுதிகளில் பாளையக்காரர் ஆட்சி முதல் ஆங்கிலேய ஆட்சி
உறுதிப்பட்டது வரையிலான காலப் பகுதி. வரலாற்றுக்
கதைப்பாடல்களின் காலத்தைக் கண்டறிதல் போன்று சமூகக்
கதைப்பாடல்களின் காலத்தைக் கண்டறிதல் எளிதான
செயலன்று. ஏதேனும் வரலாற்றுக் குறிப்புகள், பெயர்கள்,
முக்கியமான நிகழ்வுகள் ஆகியவை இருந்தால் காலத்தைக்
காணுதல் எளிதான செயலாகும்.
கள்ளழகர்
அம்மானை, அண்ணன்மார் சுவாமிகதை ஆகிய இரு கதைப்பாடல்களும் வேட்டுவக்
கவுண்டர்களுக்கும் வெள்ளாளக் கவுண்டர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை
வெளிப்படுத்துகின்றன. மேலும் இவற்றில் இடம்பெறும் குலதெய்வம் பேணல்,
சிறு தெய்வ வழிபாடு போன்றவற்றைக் கவனிக்கும் போது இவை மிகப் பிற்பட்ட
காலம் என மட்டுமே முடிவுக்கு வர இயலும். வீணாதிவீணன் கதையில் குலசேகரனது
ஆட்சிப்பகுதியில் வீணனின் செயல்கள் சித்திரிக்கப்படுவதால் இக்கதை கி.பி.16ஆம்
நூற்றாண்டாக இருக்கலாம். மதுரை வீரசுவாமி கதையில் திருமலை நாயக்கர்
என்றொரு பாத்திரம் வருவதால் அதன் காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கதைப்பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பார்த்தால் முத்துப்பட்டன்
கதையும் நல்லதங்காள் கதையும் கி.பி.1658-1738க்குள் இடம் பெற்றிருக்கலாம்
என்றும், சின்னநாடான் கதையின் காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு என்றும்
அவற்றை ஆராய்ந்தவர்கள் முடிவுக்கு வருகின்றனர்.
கி.பி.16,17,18ஆம்
நூற்றாண்டுகளில் தமிழ்பேசும் பகுதிகளைப்
பல இனத்தினர் கொள்ளைக் காடாகப் பயன்படுத்தினர்.
நாயக்கர்கள், முசுலீம்கள், மராத்தியர், கன்னடியர், டச்சுக்காரர்,
போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் ஆகிய
இனங்களின் கொள்ளை இடும் பகுதியாகத் தமிழகப் பகுதி
இருந்தது. எங்கு நோக்கினும் களவு, கொள்ளை, லஞ்சம்,
வழிப்பறி ஆகியவை நடந்தன. பஞ்சமும் வாட்டியது. இவற்றால்
அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்பகுதி
மக்களே. அதிலும் அடிநிலை மக்களே அதிகம்
பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குச் சமூகத்தில் நிரந்தர இடமும்
இல்லை, பாதுகாப்பும் இல்லை. ஆயின் இவர்களுக்கான சமூகக்
கடமைகள் வரையறுக்கப்பட்டிருந்தன.
பிற்காலச்
சோழர் காலத்தில் ஏதோ ஒரு வகையில் சமூகப் பாதுகாப்பு இருந்தது. ஆனால்
நிலவுடைமைக் காலம் சிதறியபோது மக்களுக்குப் பாதுகாப்பு ஏதும் இல்லை.
இக்காலத்தில் சமூக மதிப்புகள் மீறப்பட்டன. இந்தச் சமூக மீறல்களை நிலவுடைமைச்
சிதறல் காலச் சமூகம் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அனுமதிக்கிறது. எனினும்
இந்தச் சமூக மீறல்கள் தம் எல்லை கடந்தால் மறுக்கப்படுகின்றன. சமூகக்
கதைப்பாடல்களில் சமூக மரபுமீறலில் ஈடுபடுவோர் காவல் அதிகாரிகள் தொடர்பான
பாத்திரங்களாகவே உள்ளனர். சமூகத்தில் பாதுகாப்புத் தன்மை குறைந்த காலத்தில்
இத்தகைய பாத்திரங்கள் ஒருவேளை மக்களைக் கவர்ந்திழுத்திருக்கலாம். நிலவுடைமை
வர்க்கம் இந்தச் சமூக மரபு மீறலாளர்களைக் கொன்று விடுகிறது. இத்தகைய
சோக முடிவு இவர்களை மக்கள் கண்முன் நாயகர்களாக நிறுத்துகிறது. எனினும்
இத்தகைய சோக முடிவு மட்டுமே சமூகக் கதைப்பாடல்களின் ஆக்கத்திற்குக்
காரணமாக அமைந்துவிடவில்லை. இவர்களின் சமூக மரபு மீறல் சமூகப் பாதுகாப்பற்ற
அடித்தட்டு மக்களைக் கவர்கின்றது. அன்னாரின் முணுமுணுப்புக் குரல்கள்
மக்களை ஈர்க்கின்றன. எத்தனையோ பேர் கொல்லப்பட்டுச் சோக முடிவுக்குள்ளாகும்
பொழுது இல்லாத பற்று, இவர்கள் சோக முடிவு அடையும் போது இவர்கள் மீது
வருவதற்குக் காரணமே அந்த ஈர்ப்பாக இருக்கலாம். தம்மால் செய்ய இயலாத
ஒன்றைச் செய்த இம்மரபு மீறலாளர்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள், இவர்களைக்
கதைத் தலைவர்களாக்கிப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கின்றனர். பேராசிரியர்
வானமாமலை வகைப்படுத்தியுள்ள சிக்கலைக் கருவாகக் கொண்ட சமூகக் கதைப்
பாடல்கள் தோன்றியதற்கான காரணம், கி.பி.16,17,18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில்
நிலவிய அரசியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளே ஆகும். தமிழகத்தின்
தென்பகுதியான மதுரை, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளிலேயே இச்சீர்கேடுகள்
அதிகமாக நடைபெற்ற காரணத்தால் சமூகக் கதைப்பாடல்களும் இப்பகுதிகளிலேயே
அதிக அளவில் தோன்றி மக்களிடையே பரவியுள்ளன எனலாம்.
இனி,
சில சமூகக் கதைப்பாடல்களின் கதைச்சுருக்கங்களைக்
காணலாம். |