கதைப்பாடலில்
இடம்பெறும் கதாநாயகர்களே இங்கே பேசப்பட
விருக்கின்றனர். ஒவ்வொரு சமூக அமைப்பிலும் பல சமூக
மதிப்புகள் (Social values) உண்டு. இவை குறிப்பிட்ட காலச்
சமூகத்தில் அதன் தேவைகளுக்காகத் தோன்றுகின்றன. அந்தச்
சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அவசியம் இருக்கும்
வரையிலும் இதன் தேவை ஏதேனும் ஒரு வகையில்
உணரப்பட்டு இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில்
குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள பல்வேறு சக்திகளின்
மனோநிலைக்கு ஏற்ப இந்தச் சமூக மதிப்புகள் ஏற்றுக்
கொள்ளப்படலாம்; அல்லது நிராகரிக்கப்படலாம்; அல்லது
கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சமூகக் கதைப்பாடல்களின்
காலத்தில் இத்தகைய சமூக மதிப்புகள் கேள்விக்கு
உள்ளாக்கப்படுகின்றன. இவற்றைக் கதைப் பாடல்கள்
கொண்டும் அவை சித்திரிக்கும் தலைவர்களைக் கொண்டும்
காணலாம்.
3.3.1
சாதிப் பாகுபாடு
அக்காலத்திய
தமிழ்ச் சமூக மதிப்புகளுள் ஒன்று சாதிப்பாகுபாடு பேணல். சாதி என்பதன்
மூலம் ஒருவனுடைய தொழில், மண உறவு, இருப்பிடம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.
இதில் மணஉறவு பெரியோர்களால் மட்டுமே நிச்சயிக்கப் பெறுகின்றது. இவ்வாறு
ஒரே சாதிக்குள் பெரியோர்களால் நிச்சயிக்கப் பெற்று நடைபெறும் மண உறவு
ஒருவகைச் சமூக உறவு ஆகும். இந்தச் சமூக உறவு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை,
இந்தச் சமூகஉறவு எதிர்ப்புத் தன்மையை மதுரை வீரன் சுவாமிகதை, முத்துப்பட்டன்
கதை ஆகியவற்றில் காணலாம். இந்த இரு கதைகளிலும் ஒரு சமூக மரபு மீறப்பட்டுள்ளது.
ஒரே சாதிக்குள் திருமணம், பெரியோர்கள் நிச்சயிக்கும் திருமணம் ஆகிய
மணநிகழ்வு மரபுகளைக் கதைத் தலைவர்கள் மீறியிருக்கின்றனர். மதுரை வீரன்
தாழ்குலத்தினன்; முத்துப்பட்டன் உயர் குலத்தினன். இதில் தாழ்குல ஆடவன்
உயர்குலப் பெண்ணை மணக்க, தாழ்குலத்தினர் சம்மதிக்கவில்லை. ஆயின் உயர்குலத்து
ஆடவன் முத்துப்பட்டன் தாழ்குலப் பெண்களைத் தாழ்குலத்தினர் சம்மதத்தோடு
மணக்கிறான். இந்த மரபு மீறலில் கூட சமூக மரபின் தாக்கம் ஒருவிதத்தில்
இருப்பதைக் காணலாம். இத்தகைய கலப்புத் திருமணங்கள் நிலவுடைமையாரின்
இறுக்கமான சமூக உறவுகளை நெகிழ்க்கத் தொடங்கும். இவற்றைத் தொடங்கியவர்களாகவே
மதுரை வீரனையும் முத்துப்பட்டனையும் காணலாம்.
3.3.2
சொத்துரிமை
சொத்து,
அந்தச் சாதிக்குள்ளேயே இருக்கவேண்டும் என்ற
சமூக விதியே, சாதியமைப்புக்குள்ளேயே திருமணம் நிச்சயித்தல்
என்பதைப் பெரியவர்களின் விருப்பமாக வலியுறுத்தியது. ஒரு
விதத்தில் சொல்லப்போனால் திருமணம் என்பதே
சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் முறையாகும்.
சாதிக்குட்பட்ட மணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளே
சொத்துக்கு வாரிசாக முடியும். பல பெண்களோடு தொடர்பு
வைத்துக் கொள்ள ஆணுக்கு அனுமதி கொடுத்தாலும்
தனது சொத்துக்கு உரிய வாரிசை மட்டும் தன் சாதிக்குள் ஒரு
பெண்ணை மணந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது
நிலவுடைமைச் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபாகும்.
ஆயின் நிலவுடைமைச் சிதறல் இயக்கப் போக்கின் தொடக்க
காலத்தில் இந்த மரபை ஏற்றுக் கொள்ள மறுத்து, தான்
நேசித்த வேற்றுச் சாதிப் பெண்ணையே மனைவியாக
நினைத்துக் கொண்ட சின்னநாடான்
தன்
சொந்தக்காரர்களாலேயே கொல்லப்படுகிறான். இக்கதைப்பாடலில்
ஒரே சாதிக்குள்ளே அதன் சொத்து பிரிந்து போக வேண்டும்
என்ற சமூக மரபு சிதைகின்றது. இந்தச் சிதைவு எண்ணமே
சின்னநாடானின் சோக முடிவுக்கு ஆரம்பப் புள்ளியாகும்.
இதுவேதான், மக்கள் அவனைக்
கதைப்பாடல்
நாயகனாக்குவதற்கும் ஆரம்பப் புள்ளியாகும்.
சொத்துரிமை
தன் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும்
என்பதில் மட்டுமின்றி, பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கக்
கூடாது என்பதிலும் நிலவுடைமைச் சிந்தனை அக்கறை
கொண்டு இருந்தது. சொத்துரிமை வேண்டி,
இழிநிலைக்குள்ளாகி, தன் குழந்தைகளுடன் தன்னை மாய்த்துக்
கொண்டவளின் கதையே நல்லதங்காள் கதை ஆகும்.
பெண்ணே ஆடவனின் சொத்து எனக் கருதப்பட்டாள்.
சோழர்
காலக் கல்வெட்டுகள் பலவற்றில், பல பொருள்களோடு
பெண்ணையும் சேர்த்தே குறிப்பிடும் பழக்கம் காணப்படுகின்றது.
இத்தகைய நிலவுடைமைத் தத்துவப் பெண்ணடிமைக் காலத்தில்
பெண்ணுக்குச் சொத்துக் கிடையாது. முற்காலத்தில் தன்
உழைப்பினால் சேர்ந்த தன் பிறந்த வீட்டுச் செல்வத்தைக்
கொண்டு தனது தற்போதைய வறுமையைப் போக்கிக்
கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தன் அண்ணன் வீட்டிற்கு
வருகின்றாள் நல்லதங்காள். ஆயின் திருமணமாகிக் கணவன்
வீடு சென்றவளுக்கு அவள் உழைத்த சொத்து என்றாலும் கூட
எவ்வித உரிமையும் இல்லை என்ற சிந்தனையில் ஊறிய
நல்லதங்காளின் அண்ணி, நல்லதங்காளின் உரிமை விருப்பில்
குறுக்கிடுகிறாள். அண்ணனும் வீட்டிலில்லாத நிலையில்
அண்ணியை எதிர்க்க இயலாத நல்லதங்காள் தன்
குழந்தைகளுடன் கிணற்றில் வீழ்ந்து இறக்கிறாள். நிலவுடைமைச்
சிதறல் காலத் தொடக்கத்தில் நிலவுடைமைச் சமூக மதிப்புகள்
நெகிழ்கின்ற தன்மையில் நல்லதங்காளின் உணர்வைக்
காணலாம். இத்தகைய உணர்வால் அவள் இழிநிலைக்கு
உள்ளாக்கப்பட்டுத் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.
3.3.3
சாதியும் தொழிலும்
சாதி
என்பது மனிதர்களின் சகலத்தையும் நிர்ணயிப்பதில்
பெரும்பங்கு வகிக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் மனிதனது
தொழிலும் அதனை ஒட்டிய சமூகத் தகுதியும் ஆகும்.
சின்னத்தம்பி கதைப்பாடல், மதுரை வீரன் சுவாமி கதைப்பாடல்,
முத்துப்பட்டன் கதைப்பாடல் ஆகிய மூன்று கதைப்
பாடல்களிலும் பிறவி வழித் தொழில் நிர்ணயம் மீறப்படுகின்றது.
இக்கதைகளில் இடம் பெறும் மூவருள் சின்னத்தம்பியும்
மதுரைவீரனும் பிறப்பால் தாழ்குடியை, சக்கிலியர் குடியைச்
சேர்ந்தவர்கள். முத்துப்பட்டன் உயர்குடியை அதாவது
அந்தணர் குடியைச் சேர்ந்தவன். மதுரை வீரனும்
சின்னத்தம்பியும் தங்களது வீரதீரச் செயல்களால் முறையே
தளபதிப் பொறுப்பையும் கோட்டைக் காவல் பொறுப்பையும்
பெறுகின்றனர். இதனால் உயர்குடி
மக்களின்
கோபத்திற்குள்ளாகி வஞ்சனையாகக் கொல்லப்படுகின்றனர்.
அந்தணனான முத்துப்பட்டன் தன் குலத்தொழிலை விட்டு,
சக்கிலியர் தொழில் செய்கிறான். அதனால் அவனும்
இறக்கிறான். சாகடிக்கப்பட்ட இம்மூவரும் ஏதோ ஒரு வகையில்
மக்களுக்கு நன்மை செய்தவர்கள். இவர்கள் மூவரும்
காவல் தொடர்பான பாத்திரங்களாகவே கதைப்பாடலில்
சித்திரிக்கப் பெற்றுள்ளனர். சமூகத்தில் பாதுகாப்புத் தன்மை
குறைந்த காலத்தில் இத்தகைய பாத்திரங்கள் ஒருவேளை
மக்களைக் கவர்ந்திழுத்திருக்கலாம். இவர்களது சோகமுடிவு
மக்கள் முன் இவர்களை நாயகர்களாக நிறுத்தி இவர்களை
அனுதாபத்துடன் நினைவுகூர வைத்திருக்கலாம். அதன்
வெளிப்பாடே அவர்கள் பெயரில் பாடப்படும் கதைப்பாடல்கள்
ஆகும்.
3.3.4
சாதியும் திருமணமும்
உணர்விலும்
உடலமைப்பிலும் ஒன்றாக விளங்கும் மனிதன்
பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டுக்
காணப்படுவதற்கு முக்கியமான காரணமாக விளங்குவன
செயற்கையான சாதிப்பிரிவுகள். செயற்கையானவை என்று
சாதிப்பிரிவுகளை நினைக்க முடியாத அளவுக்கு அவை
மனிதமனத்தில் ஆழமாகப் பதிந்து தோற்றம் அறியா நிலையில்
வாழ்வுடன் இணைந்து பிணைந்து காணப்படுகின்றன. சாதி இன,
குலப் பாகுபாட்டால் சமுதாயத்தில் விளைந்த சீர்கேடுகளைக்
கதைப்பாடல்கள் தம் எல்லைக்கு உட்பட்டு விளக்கிக் காட்ட
நன்கு முயல்கின்றன. சாதிவிட்டுச் சாதி மணவுறவு கொண்ட
சின்னத்தம்பி, மதுரைவீரன், முத்துப்பட்டன் ஆகிய மூவரின்
இறப்பின் மூலமாக, கலப்பு மணம் பெருங்குறையாகக் கருதப்
பட்டுள்ளதை உணர முடிகின்றது. இதனைப் பெற்றோர் ஏற்றுக்
கொண்டாலும் கலப்பு மணங்களைப் பொதுக் குறையாகக்
கருதிய அந்தச் சாதியைச் சேர்ந்த பிறர் கூட்டாக இணைந்து
எதிர்த்துள்ளனர். கீழ்ச்சாதிக் கலப்பு நிகழ்வதை எந்த
நிலையிலும் அவர்கள் அனுமதிப்பதில்லை.
இந்த
ஏற்றத்தாழ்வைச் சாதாரண மனிதர்கள்
மட்டுமல்ல,
மன்னர்களும் கடைப்பிடித்திருக்கின்றனர் என்பதைத்
தோட்டுக்காரி அம்மன் கதையிலும் வெங்கலராசன் கதையிலும்
காணமுடிகின்றது.
சுவாமிவிளையில்
கோட்டை கட்டி வாழ்ந்த குறுநில மன்னனான வெங்கலராசன் கதையிலும் இதே அழிவே
ஏற்படுகின்றது. மன்னன் முதல் மக்கள் வரை குலப்பெருமை பேசுவதை மிகச்
சிறப்பாக மதித்துள்ளதைக் கதைப்பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன. இருப்பினும்
இத்தகைய சமூகக் கதைப்பாடல்களில் உயர்குலத்தினரை மணந்துகொண்ட தாழ்குலத்தினர்களை
ஏதேனும் ஒரு நிலையில் உயர்குலத்தினரோடு ஒப்பாக வைத்துக் காட்டும் முயற்சி
உள்ளது. மதுரை வீரன் பொம்மியை மணந்து கொண்டது ஒரு மரபு மீறல். எனினும்
மதுரைவீரன் காசி நகரத்துத் துளசிராசாவின் மகனாகக் காட்டப்படுகிறான்.
பொம்மக்கா, திம்மக்கா என்ற சக்கிலியச் சகோதரிகள் முத்துப்பட்டனை மணந்து
கொண்டது ஒரு சமூக மரபு மீறல். எனினும் இவ்விருவரும் சிவனருளால் தோன்றியவர்களாகக்
காட்டப்படுகின்றனர். இது உயர்குலத்தினரோடு மண உறவுகொண்ட தாழ்குலத்தினரை
ஏதேனும் ஒரு விதத்தில் உயர்குலத்து மனிதரோடு தொடர்புபடுத்திக் காட்டும்
முயற்சியாகும். இம்முயற்சி அந்தக் கால மரபு மீறல் சிந்தனையின் பலமும்
பலவீனமும் ஆகும். மரபு மீறலும் முணுமுணுப்பும் அதிருப்தியும் தம்மளவில்
பலம் பெறாத நிலையில் இதுதான் சாத்தியமாக இருந்திருக்கக் கூடுமோ என்று
ஐயப்பட வேண்டி உள்ளது. ஆனாலும் கூட இந்தக் குறைந்தபட்ச அதிருப்தியைக்
கூடப் பொறுத்துக் கொள்ள இயலாத நிலவுடைமை வர்க்கம் இவர்களைக் கொன்று
விடுகின்றது. ஆயின் இந்த மீறலை ஏற்றுக் கொள்ளும் மக்களால் இத்தலைவர்கள்
பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றனர். |