3.7 சமூகக் கதைப்பாடலும் தமிழ்ச் சமுதாயமும்

கதைப் பாடல் சுட்டும் சமூகம் பற்றி இனிப் பார்ப்போம். இங்கே ஒன்றிரண்டு சமுதாயப் பழக்கங்கள் மட்டும் சுட்டப்படுகின்றன. மணம் பேசல், மகட்கொடை மற்றும் நம்பிக்கை என்பவை பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

3.7.1 மணம் பேசல்

ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணையும் வாய்ப்பைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதைத் தமிழ்ச் சமுதாயம் ஏற்று ஆதரவு கொடுக்கிறது. ஆண் வீட்டார், பெண் வீட்டிற்கு மணம் பேச வருகின்றனர்.

பண்புடனே பெண்கேட்கப் பாவனையாய் ஒன்பது பேர
      பரியத்துக்கு ஏற்ற பணத்தோடு
திண்ணமும் உப்பு புளி தேங்காயுடன் பழமும்
      சேகரமாய்த் தான் வாங்கி வைத்து

என்று மணம் பேசல் ஒரு சடங்கு முறையாக நடத்தப்படுகின்றது. அரசர்கள், தூதன் வாயிலாக ஓலை கொடுத்து அனுப்பித் திருமணப் பேச்சைத் தொடங்கியிருப்பதைத் தோட்டுக்காரி அம்மன் கதை மற்றும் வெங்கலராசன் கதையில் காணலாம்.

அன்பா யும்மகள் தோட்டுக்காரி தன்னை
நல்ல வண்ணம் குமரப்ப ராசர்க்கு
நல்மணம் செய்து தாருமெனச் சொல்லி
உன்னிதமாக நீட்டு மெழுதியே
ஓட்டன் கையினில் நீட்டைக் கொடுத்திட

என, தோட்டுக்காரி அம்மன் கதையில் முறையாகப் பெண் கேட்கும் நிலையைக் காணலாம். இவ்வாறாக, பெற்றோர் மணம் பேசுவது சமூகத்தில் சிறப்பானதாகக் கருதப்பட்டுள்ளது.

3.7.2 மகட்கொடை

மகட்கொடை என்பது தற்காலத்தில் திருமணமாகிக் கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் ‘சீதனம் அல்லது வரதட்சணை’ என்பதைக் குறிக்கின்றது. இதுவும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள பழக்கமாகும். இம் மகட்கொடை தகுதிக்குத் தக்கவாறு அமையும். நல்லதங்காள் கதைப்பாடலில் அவள் திருமணமாகிச் செல்லும்போது பெற்றதாகச் சொல்லப்படும் பொருட்கள் பின்வருமாறு ;

பட்டி நிறைந்திருக்கும் பால் பசுவாம் சீதனங்கள்
ஏரி நிறைந்திருக்கும் எருமை மாடாம் சீதனங்கள்
காடு நிறைந்திருக்கும் கருப்பாடாம் சீதனங்கள்
மேட்டுக் கழனி முனைக் கழனி சீதனங்கள்
பள்ளக் கழனி பயிர்க்கழனி சீதனங்கள்
இத்தனை சீதனங்கள் பெற்றாளிளங் கொடியாள்

என்பதோடு என்னென்ன அணிகள் சீதனமாகப் பெற்றாள் என்பதையும் இக்கதைப்பாடல் தெரிவிக்கின்றது.

3.7.3 நம்பிக்கை

பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் மக்களைப் பற்றிப் படர்ந்திருப்பவை ஆகும். கனவு, சகுனம் பார்த்தல் ஆகியவை அவற்றுள் அடக்கமே. கதைப்பாடல்களில் கனவுகள் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புச் செய்யும் வாயில்களாக உள்ளன. மக்களிடம் பொதுவாகக் காணப்படும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கனவுகள் கதைகளில் பயன்படுத்தப் பெறுகின்றன. கனவுகளைக் கொண்டு அவை நடக்குமா, நடக்காதா என்று தீர்மானிக்கும் வழக்கம் உண்டு. நல்ல கனவு தோன்றுமானால் நடக்கும் என்று நம்புவர். தோட்டுக்காரி அம்மன் கதையில் உள்ள கனவுக் காட்சியைக் காணலாம்.

கோனாண்டி ராசனுக்குக் குழந்தையில்லை. அதற்காக அவனுடைய மனைவி வணங்காத தெய்வமில்லை. குழந்தை வரம் வேண்டித் தவமிருக்கும் கோனாண்டிராசன் மனைவிக்கு ஒரு கனவு தோன்றுகிறது.

மை விழியாள் கண்ணதிலே மாயக்கனாக் காண்பாளாம்
தெய்வலோகப் பொற்கிளிதான் திருமடியில் வரவுங் கண்டாள்
பாம்பரவம் மடியேறிப் படம் விரித்தாடக் கண்டாள்

என்று கனவு கண்டதாகக் கதை சொல்கிறது. பிள்ளைப்பேறு உறுதியாக வாய்க்கும் என்ற நம்பிக்கை கனவின் மூலம் ஏற்படுவதை இங்குக் காணலாம். நல்லதை முன்னறிவிப்புச் செய்யும் கனவுகள் போன்று தீயதை முற்சுட்டும் கனவுகளும் உண்டு. திருமணம் முடிந்தபின் முத்துப்பட்டன் காணுகின்ற கனவு,

நித்திரை தனிலே பொல்லாத சொப்பனம் துர்க்குறியாகவே கண்டானாம்
கருமயிலை காளைகிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறக்கக் கண்டானாம்
கையிலே கட்டிய காப்ப நூல்தன்னை கறையானரித்திடக் கண்டானாம்

இந்தக் கனவு குறிப்பிடும் செய்திகள் அனைத்தும் தீய நிகழ்ச்சிகளாகும். இவற்றைக் காணின் தீயவை நேரும் என்று உய்த்துணரும் நிலை உள்ளது. கனவை நம்புவது பற்றிய எண்ணம் மக்களுக்கு இந்நிலையில் இருந்ததனால் கதைப்பாடல் இந்த உத்தியை நன்கு பயன்படுத்திக் கதையைப் பின்னியுள்ளதாகக் கருதலாம்.

கனவை நம்புவது போன்றே சகுனம் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே காணப்படுகின்றது. கனவுகள் வருநிலை உரைப்பன என்ற நம்பிக்கையும் உண்டு. தீய சகுனங்கள் தீமை நடக்கவிருப்பதையும் நல்ல சகுனங்கள் நன்மை நடக்க இருப்பதையும் தெரிவிப்பதாக மக்கள் நம்பினர். நல்லதங்காள் கதைப்பாடலில், வீட்டைவிட்டுத் தன் குழந்தைகளுடன் நல்லதங்காள் புறப்படும் பொழுது பின்வரும் சகுனங்கள் நிகழ்வதாகக் கதைப்பாடல் கூறுகின்றது.

கன்னிகழியாப் பெண் கையில் நெருப்பெடுத்தாள்
வாழாக் குமரியவள் மீளா நெருப்பெடுத்தாள்
வாணியன் கூடையல்லோ வரக்கண்டாள் மங்கையரும்
ஓரி குறுக்காச்சு ஒற்றைப் பாப்பா னெதிரானான்

கூறியுள்ள நிமித்தக் குறிப்புகளைக் காணின் அவற்றுள் பல சாவுச் சடங்குகளுக்கு உரியவை என்பது நன்கு விளங்கும். நல்லதங்காள் இறக்கப் போவது, பின் நடக்க இருப்பது அதனை முன்னறிவிப்பன போன்று சகுனங்கள் அமைகின்றன. சகுனங்கள் என்பன அறிவிப்புக்களே அன்றி ஆற்றலுடையன என்று கூற முடியாது. கதைகளைப் படிப்போர், சகுனங்களைத் தரும் முறையைக் கொண்டு கதை நிகழ்ச்சிகள் இப்படித்தான் நடக்கும் எனச் சிந்தித்துக் காணும் நிலையில் அவை கதைப் பாடல்களில் புகுத்தப் பெற்றுள்ளன.