புராண
- இதிகாசங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதையைக்
கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே புராணக் கதைப்பாடல்
என்று பார்த்தோம். இக்கதைப்பாடல்கள் கிராமப்புற
விழாக்களில் இரவு நேரங்களில்
கூத்துகளாக
நிகழ்த்தப்பட்டதாகவும், பாடப்பட்டதாகவும்
குறிப்புகள்
கிடைக்கின்றன. எனவே புராணத்திற்கும், இக்கதைப்
பாடல்களுக்கும் பாடுபொருள் ஒன்றாக இருப்பினும் பாடுகளம்
வேறாக இருக்கின்றது. கிராமங்களைப் பாடுகளமாகக் கொண்ட
புராணக் கதைப்பாடல்களின் அமைப்பையும் சுருக்கத்தையும்
காண்போம்.
4.1.1
வரையறை
புராணங்களில்
வரும் கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும்
மட்டுமே கொண்டு விளங்குவது புராணக் கதைப்பாடல்களாகும்.
இவை மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களிலிருந்து
உள்ளடக்கத்தில் வேறுபடவில்லை. சிவ புராணம்,
விஷ்ணு
புராணம், பாகவத புராணம் போன்றவற்றிலிருந்து
கதை
நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டுள்ளதை
விட மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களிலிருந்தே
கதை நிகழ்வுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
·
புராணச் சார்புக் கதைப்பாடல்
இதிகாசங்களில்
காணப்படும் ஒரு சிறந்த சிறு நிகழ்ச்சியைக்
கருவாகக் கொண்டு பரந்த அளவில் கற்பனை கலந்து பாடலாகப்
புனைந்து எழுதப்பட்ட கதைப்பாடல்கள் புராணச்
சார்புக்
கதைப்பாடல்களாகும். பெரும்பாலான புராணக் கதைப்பாடலின்
கதைக் கருக்களே இவற்றுக்கும் மூலக் கருத்துகள் ஆகும்.
புராணக் கதைப்பாத்திரங்களுடன் யதார்த்தத்தில் உள்ள
புவியியல் பகுதிகளும் மன்னர்களும் கற்பனை மனிதர்களும்
இவற்றில் இடம் பெறுவது உண்டு.
இவ்விரு
வரையறைகளிலிருந்தும் தெரிய வருவது இரண்டிற்கும் அடிப்படைக் கருக்கள்
பெரும்பாலும் இதிகாசக் கதைகளே என்பதுதான். இக்காரணங் கருதியே புராணக்
கதைப்பாடலும் புராணச் சார்புக் கதைப் பாடலும் ‘புராணக் கதைப்பாடல்’
என்ற பிரிவிற்குள்ளேயே வகைப்படுத்தப் பட்டிருக்கலாம். இந்த அடிப்படையிலேயே
இங்கும் பாடம் விரித்துரைக்கப்படுகின்றது.
4.1.2
அமைப்பு
அனைத்து
வகையான கதைப்பாடல்களும் பொதுவாக ஒரே புற
அமைப்புடையனவாகக் காணப்படுகின்றன. பொதுவாக இறை
வணக்கம், காப்பு, அவையடக்கம், நாட்டு வருணனை, நகர
வருணனை, கதை, வாழி என்னும் அமைப்பில் அமைந்து
காணப்படுகின்றன. சில கதைப்பாடல்களில் சற்று வேறுபட்டு
முன்னுள்ளது பின்னாகவும் பின்னுள்ளது முன்னாகவும்
அமைந்துள்ளன. கதைப்பாடல்களின் அமைப்புப் பற்றிய
விளக்கம் முதற் பாடத்திலேயே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இங்கே நினைவூட்டும் வகையில் ஒன்றிரண்டு கருத்துகளைக்
காணலாம்.
பவளக்
கொடி மாலையின் தொடக்கம் கலிவிருத்தத்தால் ஆன
காப்புச் செய்யுளாக உள்ளது.
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
சோக வாரியி னால்வருந் துன்பமும்
போக ஆனை முகவனைப் போற்றுவாம்
(சோகவாரி
= துன்பக் கடல்; ஆனை முகவன் = விநாயகர்)
என்ற வரும் முதல்பாடல் இறைக்காப்பை இனிது வேண்டுகிறது.
காப்புப்
பாடலைத் தொடர்ந்து
விநாயகர் துதி, கலைமகள் துதி,
துரோபதை துதி ஆகியவை பாடப் பெறுகின்றன. வருணனைப்
பகுதிகள் விரிவாகவும் பலவிதமான சிறப்புச் செய்திகளைத்
தாங்கியும் வந்துள்ளன. மின்னொளியாள் குறம்
கதைப்பாடலில்
வரும் வருணனைப் பகுதி பின்வருமாறு.
தும்பசையத்
தேன் சொரியும் சோழன் திருமடந்தை
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சேற்றால் மடை அடைத்தால் செல்வம் குறையுமென்று
பணத்தால் மடை அடைத்தால் பாசி பிடிக்குமென்று
சோற்றால் மடை அடைக்கும் சோழன் திருமடந்தை
(தும்பு (தும்பி) = வண்டு)
இவ்வருணனைப்
பகுதி மிகையாகவும் புதுமையாகவும் இருப்பதைக் காணலாம். இவை கதைப்பாடல்களுக்கு
உரிய இயல்புகள் ஆகும். இதே போன்று மதுரை நகர் பற்றியும் விரிவான வருணனை
அல்லியரசாணி மாலை கதைப்பாடலிலும் உள்ளது.
பொதுவாகப்
புராணக் கதைகளின் தொடக்கம் மக்களைக் கவரும்
வண்ணத்தில் அமைந்து காணப்படுகின்றன. அல்லி அரசாணி
மாலையின் கதையின் தொடக்கம் அருச்சுனனின் பெருமைகளை
விரித்துக் கூறுகின்றது. சான்று :
தாரார்
தனஞ்செயனார் தர்மருக்கு நேரிளையோன்
போரானை வென்ற போர் வீமனுக் கிளையோன்
ஆனாலழகு மன்னன் அர்ச்சுன சுவாமியவன்
தோளாலழகன் தொய்வில்லாப் புகழ்வீரன்
மெட்டானவில்லி விசையன் பெருமாள் காண்
என்று
அருச்சுனனின் பெருமைகளைத் தொடக்கமாகப் பறை
சாற்றுகின்றது கதைப்பாடல். இதுபோன்ற
கவர்ச்சியான
தொடக்கத்தால் மக்கள் கவரப்படுகின்றனர். கதையைக்
கவனிக்கத் தலைப்படுகின்றனர். இதுதான் ஒரு படைப்பாளியின்
வெற்றி எனக் கொள்ள முடியும்.
புராணக்
கதைப்பாடல்களின் முடிவும் மங்களகரமாகவே
முடிகின்றது. தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்ட
புராணக்
கதைப்பாடல் கதைப்பாத்திரங்கள் கதை முடிவில் உயிர் விடுவது
இல்லை. எனவே எல்லாப் புராணக் கதைப்பாடல்களும்
மங்களமான முடிவையே கொண்டு அமைந்துள்ளன.
கதையை
நிறைவு செய்த பின்னர் கதை ஆசிரியர்கள் வாழ்த்துப்
பாடல் பாடிச் சேர்த்துள்ள நிலையைப் பெரும்பான்மையான
கதைப் பாடல்களில் காண முடிகின்றது. அவ்வாழ்த்துப்
பாடலில் எல்லாத் தெய்வங்களும் வாழவேண்டும் என்றும்
கதையைக் கேட்டோர், படித்தோர் அனைவரும் சுகவாழ்வு வாழ
வேண்டும் என்றும் எல்லாக் கவலைகளும் தீரும் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இதனை ‘வாழி பாடுதல்’
என்று கூறுவர்.
இந்தக் கதை தன்னை இவ்வுலகிற் கேட்டவர்கள்
கேட்டோர் கிளை தழைத்துக் கீர்த்தியுடன் தாம்வாழ்க
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்த்திருப்பார்
சொற்கள்
மாறாது இம்மாதிரியான வாழ்த்துகள் பெரும்பாலும்
எல்லாக் கதைப்பாடல்களிலும் காணப்படும்.
4.1.3
பாடுபொருள்
புராணக்
கதைப்பாடல்களின் பாடுபொருளாக அமைவது புராணம் மற்றும் மகாபாரதம்,
இராமாயணத்தில் அமைந்துள்ள சிறு சிறு நிகழ்வுகளே. இவற்றுள்
புராணம் மற்றும் இராமாயணத்தைவிட மகாபாரதக் கதைகளே பெருமளவில் இடம்
பெற்றுள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
போன்ற பழைய இலக்கியங்களிலும் பாரதக் கூறுகளே அதிகம் இடம்
பெற்றுள்ளன. இதற்குரிய காரணங்களாவன.
மகாபாரதத்தில்
கதை மதிப்புடைய பல கிளைக் கதைகள் உண்டு. ஒவ்வொன்றும் தம்மளவில் தனித்த
கதையாகவும் விளங்கும். மூலக் கதையில் காணப்படும் பல்வேறு திருப்பங்கள்,
பங்காளிகளுக்கு இடையிலான சொத்துப் பிரிவினையை மையமாகக் கொண்டிருத்தல்;
கதை மாந்தர்கள் முழுமையும் கெட்டவன் என்றும் முழுமையும் நல்லவன் என்றும்
இறுகலான தன்மையில் இல்லாமல் நல்லதும் கெட்டதும் கலந்த தன்மையில் இருத்தல்;
பல்வேறு புத்தி, யுத்தி, சாதுர்யம், குயுக்தி போன்ற முறைகளினால் பிரச்சினைகளைத்
தீர்க்க முயலும் கதைப்போக்கு; மிகவும் முக்கியமாகப் பாலியல் மதிப்பு
என்பவற்றைக் கூறலாம். இவற்றோடு சேர்த்துப் பாரதக் கதைகளில் வரும் வீர
சாகசங்களும் பராக்கிரமங்களும் மாயா ஜாலச் செயல்களும் மக்களைப் பிரமிப்பில்
ஆழ்த்தத் துணை செய்கின்றன. மேலும் பாரதக் கதை சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை
வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகின்றது எனினும், பங்காளிகளுக்கு இடையிலான
சொத்துப் பிரிவினை குறித்த முரண்பாட்டையும் வலியுறுத்துகின்றது. இத்தகைய
பன்முக மதிப்புகள் இராமாயணக் கதைகளில் இல்லை. இவையே புராணக் கதைப்பாடல்களில்
மகாபாரதக் கதைகள் கூடுதலான செல்வாக்கைப் பெற்றிருப்பதற்கான காரணங்கள்
என்பதில் தவறில்லை. |