புராணக்
கதைப்பாடல்களில் இடம் பெறும் கதைக்கரு சிறியதாக
இருப்பதால், பல்வேறு நிகழ்ச்சிகளைப் புனைந்து இணைத்துப்
பெரியதாக அமைப்பார்கள். அந்தக் கதைக்கு மாலை, குறம்,
கதைப்பாடல், ஏணியேற்றம் முதலிய பெயர்களைச் சூட்டுவார்கள்.
எடுத்துக்காட்டு
:
அல்லி அரசாணிமாலை, மின்னொளியாள்
குறம், ஏணியேற்றம், பவளக்கொடி மாலை முதலிய
கதைப்பாடல்களின் கதைச்சுருக்கம் பின்வருமாறு அமையும்.
4.2.1
அல்லி அரசாணி மாலை
மதுரையை
ஆண்ட பாண்டியன் இந்திரனை அவமதித்ததனால் பாண்டிய நாடு வறுமையடைகிறது.
ஆயின் சொக்கர் (சிவன்) அருளால் மீண்டும் வளமடைகின்றது. பாண்டிய நாட்டு
நீர்க்காக்கை ஒன்று, தான் கன்னிப் பெண்ணாக மாறிப் பாண்டியனைப் புணர்ந்து
ஒரு பாலகனைப் பெறவும் அவனுக்கே பட்டம் கட்டவும் ஒரு வரம் வேண்டிச்
சொக்கரை வழிபடுகிறது. சொக்கரும் ஒரு திருத்தத்துடன் வரம் தருகின்றார்.
நீர்க்காக்கை வேண்டியபடி கன்னிப் பெண்ணாக மாற்றாமல் ஒருமாதக் கர்ப்பிணியாக
மாற்றிப் பாண்டியனிடம் அனுப்புகின்றார். நீர்க்காக்கையும் பாண்டியனைக்
கூடி நீன்முகன் என்ற மகனைப் பெற்றது. பாண்டியன் அவனுக்குப் பட்டம்
கட்டி விட்டுத் தவமிருக்கச் செல்கிறான். இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டுகிறான்.
மதுரை மீனாட்சி அருளால் அல்லியிலைமேல் அல்லி பிறக்கின்றாள். பாண்டியர்களிடம்
கப்பம் வசூலிக்கும் நீன்முகனை அல்லி 7 வயதில் மீனாட்சியின் அருளால்
அடக்குகின்றாள். பட்டம் சூட்டிக் கொண்ட பன்னிரண்டாவது வயதில் அல்லி
வேட்டைக்குப் புறப்படுகின்றாள். இந்நிலையில் தான் செய்த தவறுக்காக
அர்ச்சுனன், சகோதரன் தருமரைப் பிரிந்து கிருஷ்ணனுடன் வனத்துக்கு வருகின்றான்.
அல்லியின் அழகினையும் அவளுக்குத் திருமணத்தின் மீதான வெறுப்பையும்
அறிந்த அருச்சுனன் அவள் மீது மோகம் கொண்டு, அவளைத் தன் உடைமையாக்கிக்
கொள்ள, கிருஷ்ணனின் உதவியை நாடுகின்றான். முதலில் மறுத்த கிருஷ்ணன்
பின் உதவுவதாக வாக்களித்து வேட்டைக்கு வந்துள்ள சேனைகள் மீது மாயா
விலங்குகளை ஏவுகின்றார். சேனைகள் விலகி ஓட அல்லி மட்டும் எதிர்த்து
அம்புகளை வீசுகின்றாள். வனத்திலிருந்த அருச்சுனன் அல்லிக்கு அம்புகள்
பொறுக்கிக் கொடுத்ததோடு, அவளது கை கால்களையும் பிடித்து விடுகிறான்.
அந்தத் தொடு உணர்வின் மூலம் அவன் ஆண் என்பதையறிந்த அல்லி அவனை விரட்டி
விடுகின்றாள்.
இந்நிலையில்
கிருஷ்ணனின் ஆலோசனையின் படி அல்லி தன்
மீது மோகம் கொள்ள வேண்டும் என்பதற்காக அருச்சுனன்
மதுரைத் திருக்குளத்தில் மருந்து கலக்கி அவளது பெயரை
உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். இதனால் கோபமுற்ற
அல்லியின் சேனைப் பெண்கள் அவனைக் கைது செய்து
தண்டனை வழங்குகின்றனர். ஆனால் கிருஷ்ணன் உதவியால்
அவன் தப்பி விடுகின்றான். அடுத்து ஆண்டி வேடம் புனைந்து
அல்லியின் படம் வரைந்து அர்ச்சுனன் மடலூர்கின்றான்.
பாம்புகளை ஏவி அர்ச்சுனனைக்
கொல்ல முயல,
கிருஷ்ணன் அருளால் இம்முறையும் அர்ச்சுனன் தப்பி
விடுகின்றான். பின்னர் கிருஷ்ணன் பாம்புப் பிடாரன் வேடம்
புனைந்து அர்ச்சுனனைப் பாம்பாக்கி அல்லிக்கு வேடிக்கை
காட்டியதோடு இந்தப் பாம்பிற்குப் பெண்களைக் கண்டால்
பிடிக்கும் என்றும் சொல்லுகிறான். அதனால் அந்தப் பாம்பைத்
தன்னோடு வைத்துக் கொள்கிறாள் அல்லி. இரவில் அல்லியின்
மீது மூதேவி புகுந்து நித்திரையைக் கொடுக்க, அர்ச்சுனன் தன்
சுய உருக்கொண்டு அல்லியோடு உறவு கொள்கிறான். மறுநாள்
காலையில் வந்த பிடாரன் பாம்பு உருவில் இருந்த
அருச்சுனனை எடுத்துப் போகின்றான். மீண்டும் கிருஷ்ணனும்
அருச்சுனனும் முறையே பிராமணத்தியாகவும் பிராமணனாகவும்
வேடம் புனைந்து அல்லியின் அரண்மனைக்குள் நுழைகின்றனர்.
அன்று இரவு அருச்சுனன் எவராலும் அறுக்கவியலாத தாலியை,
கிருஷ்ணனிடம் பெற்று அல்லியின் கழுத்தில் கட்டி விட்டுக்
கிருஷ்ணனோடு தப்பி விடுகின்றான். காலையில் தனக்கு நிகழ்ந்த
கொடுமை கண்டு கொதித்தெழுந்த அல்லி அனைத்துத்
தேசங்களிலும் உள்ள ராஜாக்களை வரச்சொல்லி, தனக்குத் தாலி
கட்டியது யார் எனக் கண்டறிய, கொதிக்கும் நெய்யில் கைவிடச்
சொல்லிச் சோதனை நடத்துகிறாள்.
அஸ்தினாபுரத்திலிருந்து
வந்த பீமன் கொதிக்கும் நெய்யில்
கைவிடாமல் அதைக் குடித்து விட்டுக் கொப்பரையையும் உருட்டி
விட்டுச் செல்கிறான். அதனால் பாண்டவருடன் போரிடச்
செல்கின்றாள் அல்லி.
பீமனும் கிருஷ்ணனும்
அல்லியிடம்
தோற்க, சகாதேவன் தந்திரம் செய்து அல்லியைப் புலிக்கூண்டில்
அடைக்கிறான். இந்நிலையில் அர்ச்சுனன் நடந்த உண்மையை
மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக்கூறி நான்கு மாதக் கர்ப்பமாக
இருக்கும் அல்லியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க
வேண்டுமெனக் கேட்கிறான். பாஞ்சாலி, சுபத்திரை, நாககன்னி
ஆகியோர் (அர்ச்சுனன் மனைவிமார்) அல்லியிடம் பேசி
அவளைத் திருமணத்திற்கு உடன்பட வைக்கின்றனர். அல்லி
அர்ச்சுனன் திருமணம் நடந்தபின் அவர்களுக்குப் புலந்திரன்
என்ற ஆண்பிள்ளை
பிறக்கின்றது. அல்லி மதுரையில் மீளவும்
ஆட்சி செலுத்துகின்றாள்.
4.2.2
பவளக் கொடி மாலை
இது
அல்லி அரசாணிமாலையின் தொடர்ச்சியாகவே
உள்ளது.
இது அதையொட்டியோ அதன் பின்னரோ எழுதப்பட்டிருக்க
வேண்டும். மதுரையில் அல்லி ஆட்சி செய்கின்ற பொழுது
அவளது மகன் புலந்திரன் தான் விளையாடப் பவளத்தேர்
வேண்டுமென்று அடம் பிடிக்கிறான். அல்லி, தன் மந்திரிகள்,
தளபதிகள் யோசனைப்படி அர்ச்சுனனை வரவழைத்து,
புலந்திரனின் ஆசையைச் சொல்கின்றாள். ஒன்பது நாளைக்குள்
பவளத் தேருடன் திரும்புவதாகக் கூறி, கிருஷ்ணனையும்
உடனழைத்துக் கொண்டு பவள நாட்டுக்குப் போகின்றான்
அர்ச்சுனன்.
பவள
வனத்தில் பவளக் கொடியின் அழகைக் கேள்விப்பட்ட
அருச்சுனன் அவள் மீது காதல் கொள்ள, பவளக் கொடியும்
வேட்டை காரணமாகப் பவள வனத்திற்கு வருகிறாள்.
அந்நிலையில் செத்தவனைப் போல் அருச்சுனன் நடிக்க,
கிருஷ்ணன் பெண் வடிவம் கொண்டு அவனைப் பார்த்துப்
புலம்ப, இறந்தவன்போல் கிடக்கும் அருச்சுனனின்
தோற்றத்தைக் கண்டு இதில் ஏதோ சதி உள்ளது என்றறிந்து
யானைச் சங்கிலியால் கட்டச் செய்கின்றாள். கிருஷ்ணன்
உதவியால் கட்டுக்கள் அவிழ்கின்றன. மையல் கொண்ட
அருச்சுனனை அன்னப் பறவை வடிவம் எடுக்கச் செய்து
தன்னை வேடனாக மாற்றிக் கொண்டு அரண்மனைக்குள்
நுழைந்து வேடிக்கை காட்டுகிறான் கிருஷ்ணன். பவளக்
கொடியும் அன்னத்தைப் பிரியமுடன் வாங்கித்
தன்
பள்ளியறையில்
உள்ள பவளக் கூண்டில் கட்டுகிறாள். இரவில்
சுய உருக்கொண்ட அர்ச்சுனன் பவளக் கொடியின் இசைவுடன்
அவளைப் புணர்கின்றான். கிருஷ்ணனின் யோசனைப்படி
பவளக் கொடிக்குச் சுயம்வரம் நடக்க, கிழப் பிராமணன்
வடிவில் வந்து அர்ச்சுனன் கலந்து கொள்கிறான். பவளக் கொடி
சுழற்றிய மாலை கிழப் பிராமணன் கழுத்தில் விழுகின்றது, இது
கண்டு வருத்தமுற்ற பவளக்கொடியின் காதில் வண்டு வடிவில்
வந்து அவனே அருச்சுனன் என்று உண்மையைச்
சொல்லிவிடுகிறான். பவளக் கொடியும் மகிழ்ச்சியோடு
இருக்கின்றாள்.
ஒன்பது
நாட்களுக்குள் பவளத் தேருடன் வருவதாகச் சொல்லிச்
சென்ற அருச்சுனன் வராத காரணத்தால் கோபமுற்ற அல்லி தன்
படைகளுடன் பவள வனத்திற்கு வருகின்றாள். கிருஷ்ணன் தன்
மாயையால் குளவிகளை ஏவி அல்லியின் சேனைகளை அழித்து
விடுகின்றான். அல்லி படைகளுடன் வந்ததையறிந்த அர்ச்சுனன்
பதறுகிறான். கிருஷ்ணன், தன்னையும் அருச்சுனனையும்
மாண்டவர்கள் போலச் செய்து வெட்டியானாக வடிவமெடுத்துத்
தருமருக்குச் சாவோலை கொண்டு செல்லும் வழியில் அல்லியைச்
சந்திக்கின்றான். ஓலையில் உள்ள செய்தியறிந்து அல்லி
பதறுகின்றாள். பவளக் கொடியும் வருகின்றாள். தருமர்
முதலானோரும் வந்துவிடுகின்றனர். அல்லியிடமும்
சுபத்திரையிடமும் வாக்குத் தவறிய அர்ச்சுனனை ஒன்றும் செய்ய
மாட்டோம் என்று உறுதி பெற்று வைத்தியர் வடிவில் வந்த
கிருஷ்ணன், மாண்டவன் போல் கிடக்கும் அருச்சுனனை
எழுப்புகின்றார். பவளக் கொடி புலந்திரனுக்குப் பவளத் தேர்
வழங்க, மாண்ட அல்லியின் சேனைகளைக் கிருஷ்ணன் எழுப்பி
விடுகின்றார். எல்லாரும் பவளக் கொடியை விட்டு விட்டுத்
தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.
4.2.3 ஏணியேற்றம்
பாண்டவர்கள்
நாடிழந்து வனத்தில் வாழச் செல்லும் பொழுது
அர்ச்சுனனின் மனைவிமார்களை அல்லியிடம் அடைக்கலமாகக்
கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். சுபத்திரை, மின்னொளி,
பவளக்கொடி, போகவதி ஆகியோருள் சுபத்திரையின் மீது
காதல் கொண்ட துரியோதனன் அவளை அடைய மதுரை
வருகின்றான். இதையறிந்த அல்லி சினம் கொண்டு அவனை
அவமானப்படுத்த நினைக்கிறாள். ஒரு மாய ஏணியைத்
தயாரிக்கச் சொல்கிறாள். அந்த ஏணியில் பத்துப் படிகள்
இருக்கும்படியும் பத்தாம் படியில் சுபத்திராவின் அழகிய
உருவம் செதுக்கப்பட்டும் அதில் ஒருவர் கால் வைத்தவுடன்
அவரை அந்த ஏணி சிக்கெனக் கவ்விப் பிடித்துக்
கொள்ளும்படியும் அதன்பின் ஏணியை இந்த இடத்துக்குப் போ
எனத் தட்டினால் அங்குப் போய்விட்டு, பத்திரமாக அல்லியின்
அரண்மனைக்கே திரும்பும்படியும் அந்த
ஏணி
தயாரிக்கப்பட்டிருந்தது.
துரியோதனன்,
அல்லி குறிப்பிட்ட நாளில் மதுரைக்கு
வருகின்றான். சுபத்திராவை அடைவதற்கு முன் இந்த மாய
ஏணியில் ஏறிப் புதுமை காண வேண்டுமென அல்லி
துரியோதனனுக்குச் சொல்ல, மோக வெறியில் ஏணி மீது
துரியோதனனும் ஏறுகின்றான். பத்தாம் படியில் சுபத்திராவின்
அழகுப் பதுமையைக் கண்டதும் மிகவும் மோகமுற்று அந்தப்
படியில் ஏற, உடனே ஏணி அவனைச் சிக்கெனக் கவ்விக்
கொள்கிறது. துரியோதனனின் மோக வெறித்தனத்தைப் பற்றி
அல்லி ஒரு கடிதம் எழுதி அதனை அவன் தலையில் செருகி
ஏணியைக் காலால் உதைக்கின்றாள்.
ஏணி
முதலில் அல்லியின் உறவினர்களான பாண்டியர்களிடம்
போய்ச் சேர்ந்தது. அவன் தலையில் உள்ள கடிதத்தைப்
படித்துப் பார்த்து விட்டு அவர்கள் ஏணியை உதைக்கின்றனர்.
அது மீண்டும் அல்லியிடம் வந்து சேருகின்றது. இவ்வாறு
ஆதிசேஷன், மேகராசன், போகராசன், சோராம்பூ ராசன்,
கிருஷ்ணன், பாண்டவர்கள் ஆகியோரிடம் ஏணி சென்று
திரும்புகிறது. எல்லாரும் கடித விவரங்களைப் படித்து,
துரியோதனனை அவமானப்படுத்துகின்றனர். இறுதியில்
ஏணியை அஸ்தினாபுரம் நோக்கி அல்லி தட்டுகிறாள். அங்கு,
துரியோதன் மனைவியர் மற்றும் தம்பியர், கர்ணன் ஆகியோர்
கண்டு அவமானங் கொள்கின்றனர். கர்ணன் அல்லியிடம்
தூதாகச் சென்று அவனை விடுவிக்கக் கோருகின்றான். கர்ணன்
மேல் கொண்ட மரியாதையினால் அல்லி துரியோதனனை
விடுவிக்கிறாள்.
4.2.4
மின்னொளியாள் குறம்
மின்னொளியாள்
அர்ச்சுனனின் மனைவி. ஒருமுறை பாண்டவர்
தேவி பாஞ்சாலி அர்ச்சுனனின் தேவியர்களான சுபத்திரை,
அல்லி, பவளக்கொடி, மின்னொளி ஆகியோரை விருந்துக்கு
அழைக்கிறாள். எல்லாரும் விருந்துண்டு போனபின் அல்லி
பாஞ்சாலியுடன் தங்குகிறாள்; அர்ச்சுனன்
சுபத்திரை
வீட்டிலேயே தங்கி விடுவதாகவும் மின்னொளியின் வீட்டுக்கே
செல்வதில்லை என்றும் சொல்கிறாள். ஒருமுறை மின்னொளி
பூசை செய்யும் பொழுது காம வெறி கொண்ட அர்ச்சுனன்
கட்டிப் பிடித்ததாகவும், அதனால் மின்னொளி இனி அர்ச்சுனன்
தனக்கு வேண்டாமெனக் குறிப்பிட்டதாகவும் அல்லி கூறி,
பிரிந்திருக்கும் அவர்கள் இருவரையும் சேர்ப்பது நமது கடமை
என்கின்றாள்.
எனவே,
அர்ச்சுனனைக் குறத்தி
வேடமிட்டு
மின்னொளியாளிடம் குறி சொல்ல அனுப்பினால் இருவரும்
சேர்ந்து விடுவார்கள் என்ற அல்லியின் ஆலோசனைக்குப்
பாஞ்சாலி உடன்படுகிறாள். இதைக் கேள்வியுற்ற அர்ச்சுனன்
முதலில் மறுத்தாலும் பின் உடன்படுகின்றான். அல்லி
அவனுக்குக் குறத்தி வேடமிட்டு மின்னொளியாள் வீடு தவிர
வேறு எந்த மனைவியர் வீட்டிற்கும் செல்லக் கூடாதென்று
எச்சரித்து அனுப்புகிறாள். மின்னொளியாள் வீட்டிற்குக் குறத்தி
வடிவில் வந்த அருச்சுனன், மின்னொளிக்குக் குறி சொல்கிறான்.
மின்னொளியாள் குறத்தியிடம் புருஷன் வரம் வேண்ட,
குறத்தியும் தருகின்றாள். ஆனால் இக்கோலத்தில் இருந்தால்
அர்ச்சுனன் வரமாட்டான் எனச் சொல்லி மின்னொளியைத்
தானே குளிப்பாட்டி அணிகள் பூட்டி அலங்காரம் செய்கின்றான்
குறத்தி வடிவில் வந்த அருச்சுனன். இருவரும் சேர்ந்து ஒரு
கலத்தில் உணவருந்துகின்றனர். அரை நாழிகையில் அர்ச்சுனன்
வருவானென்று சொல்லிக் குறத்தி மறைகின்றாள். சிறிது
நேரத்தில் மின்னொளி முன் அருச்சுனன் நிற்க, குறத்தி
வடிவில் வந்தது அர்ச்சுனனே என்பதையறிந்த மின்னொளி
அவனுடன் கலக்கின்றாள். அல்லியும் பாஞ்சாலியும் மகிழ்கின்றனர்.
இவை
தவிரப் புலந்திரன் களவு மாலை, அபிமன்னன்
சுந்தரி
மாலை என்ற கதைப்பாடல்களும் மேற்கண்டவற்றோடு
தொடர்புடையவையே. அல்லியின் மகனான புலந்திரன்,
நூற்றுவர் தங்கை துற்சடையின் மகளான கலந்தாரியை மணந்து
கொண்டதையும், ஐவர், நூற்றுவரிடையே ஏற்பட்ட பகைமை
காரணமாகப் புலந்திரனும் கலந்தாரியும் பிரிந்ததையும், எவரும்
அறியாமல் புலந்திரன் கலந்தாரியைக் களவிலே கூடி,
கருவுறச் செய்து, பல்வேறு துன்பங்களிலிருந்து மீண்டு
இனிதாகப் பிள்ளையைப் பெற்று வாழ்ந்த நிகழ்ச்சியையும்
புலந்திரன் களவு மாலை கதைப்பாடல்
தெரிவிக்கின்றது.
அபிமன்னன்
சுந்தரிமாலை என்ற கதைப்பாடல், அருச்சுனன்
மகன் அபிமன்னனும் சுந்தரியும் இளம் வயது முதல் ஒருவரை
ஒருவர் விரும்புவதையும், இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட
அன்புறவிற்குக் காரணம் அவர்களது பெற்றோர்கள் அவர்கள்
பிறக்குமுன்பே செய்து கொண்ட ஒப்பந்தமே என்பதையும்,
பின்னால் ஏற்பட்ட தடைகளைக் கடந்து அவர்கள் திருமணம்
புரிந்து கொண்டதையும் எடுத்துரைக்கின்றது.
இப்பகுதியில்
எடுத்துரைக்கப்பட்டவை எல்லாம் மகாபாரதத்தோடு தொடர்புடையவை. இவற்றைப்
புராணச் சார்புக் கதைப்பாடல் என்ற பிரிவில் வகைப்படுத்துவர். புராணக்
கதைப்பாடல் என்ற வகையில் பஞ்ச பாண்டவர் வனவாசம்,
தருமர் அஸ்வமேத யாகம், சித்திராபுத்திர
நயினார் கதை, சீதா கல்யாணம் போன்றவற்றை
வகைப்படுத்துவர்.
|