புராணக்
கதைப்பாடல்களில் தேவர்கள், தெய்வங்கள்,
மனிதர்கள், அரக்கர்கள் போன்றோர் கதைப்பாத்திரங்களாக
வருகின்றனர். இக் கதைப்பாத்திரங்கள் இதிகாசங்களிலோ
புராணங்களிலோ காணப்படும் பாத்திரங்கள் போன்று
அமைவதில்லை. புராணங்களில் சிறந்த வீரராகச் சிறந்த
கதாநாயகராகக் காணப்படும் பாத்திரங்கள் புராணக் கதைப்
பாடலில் வலுவிழந்து காணப்படுகின்றன. சான்றாகப் பாரதத்தில்
வலிமையுடையவனாகக் காணப்படும் துரியோதனன்,
ஏணியேற்றம் என்னும் கதைப்பாடலில் வலிமையுடையவனாகக்
காணப்படவில்லை. கதைப்பாடல் ஆசிரியர்கள் மூலக்கதைப்
பாத்திரங்களின் பண்புகளை மாற்றிக் கதைப்பாடலில்
பாத்திரங்களைப் படைக்கின்றனர். அல்லி அரசாணி
மாலை,
பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை ஆகிய
கதைப்பாடல்களில் வரும் அல்லி என்னும் பாத்திரத்தின்
பண்புகள் ஒன்றுபோல் காணப்படவில்லை. இதற்குக் காரணம்,
கதைப்பாடலாசிரியர்கள் பாத்திரங்களை விடக் கதைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்தமையே ஆகும். பாத்திரப் படைப்பைப்
பற்றிக் கதைப்பாடல் ஆசிரியர்கள் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை. மாறாக, கதையை வளர்க்க அவை உதவினால்
போதும் என்ற உளநிறைவுடன்
பாத்திரங்களைக்
கையாண்டுள்ளனர். அடுத்து வரும் ‘ஆண்-பெண் பாத்திரங்கள்’
என்ற பகுதி இதற்கு மேலும் வலுவூட்டும் பகுதியாக அமையும்.
அதனைக் காணலாம்.
·
ஆண்-பெண் பாத்திரங்கள்
அறிமுகப்படுத்தப்பட்ட
நான்கு கதைப்பாடல்களும் ஓர் ஆண்
ஒரு பெண்ணை அடைய எடுக்கும் முயற்சிகளையும், அவற்றால்
ஏற்படும் பெருமை, சிறுமைகளையும் சொல்கின்றன. அல்லி
அரசாணி மாலை, பவளக் கொடி மாலை, மின்னொளியாள்
குறம் என்பவை அர்ச்சுனனின் காதல் முயற்சிகளையும்
அவற்றில் அவன் பெறும் காதல் பரிசுகளையும்
குறிப்பிடுகின்றன. ஏணியேற்றம்
துரியோதனின் தகாத காதல்
முயற்சியையும் அதில் அவன் அடையும் அவமானத்தையும்
குறிப்பிடுகின்றது.
நான்கு
கதைகளிலும் 3 பெண்களும்
(அல்லி,
பவளக் கொடி, மின்னொளியாள்) 3 ஆண்களும் (அருச்சுனன்,
கண்ணன், துரியோதனன்) முதன்மைக்
கதைப்
பாத்திரங்களாகவும் மற்றையோர் துணைமைக் கதைப்
பாத்திரங்களாகவும் வருகின்றனர். அனைத்துக்
கதைப்பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவையே.
அதனால் அல்லியும் அருச்சுனனும் முறையே பெண்களுள்
முதன்மையானவளாகவும் ஆண்களுள் முதன்மையானவனாகவும்
இடம் பெற்றுள்ளனர். இக்காரணம் கொண்டு இவ்விரு
பாத்திரங்களையும் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.
4.3.1
அல்லி
அல்லியும்
இவளுக்கு அடுத்த நிலையில் வரும்
பவளக்கொடியும் மனித வமிசத்தில் பிறக்காத மனிதப்பிறவிகள்.
முறையே அல்லிக் கொடியிலும், பவளக் கொடியிலும்
உதித்தவர்கள். இருவரும் ஆண்கள் மீது மோகம்
கொள்ளாதவர்கள். இருப்பினும் இருவருள் அல்லி ஆண்
ஆதிக்க வெறுப்பாளியாகவும் இருக்கின்றாள். அருச்சுனனை
மணந்து ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும் கூட அருச்சுனனை
மதியாதவளாகச் சித்திரிக்கப்படுகின்றாள்.
வாராத அருச்சுனரை வணங்குவேனோ
என்றும்,
வணங்கின அருச்சுனனை வாவென்று தானழையாள்
என்றும்
மதிக்காமல் பேசியதாகப்
பாடல் வரிகள்
குறிப்பிடுகின்றன. சூழ்ச்சியால் தன்னைக் கருவுறச்
செய்த
அருச்சுனனை ஏற்றுக்கொள்ள இறுதி வரையில்
முரண்டு
பிடிப்பவளைப் போலக் காட்டப்படுகின்றாள். ஆயின்
தன்
வயிற்றில் அருச்சுனன் குழந்தை வளருகின்றது என்பதனாலும்
மணமுடித்த பின்னாலும் தான் பாண்டிய நாட்டை ஆளலாம்
என்பதாலும் திருமணத்திற்கு உடன்படுகிறாள். இதிகாசங்களில்
மாபெரும் வீரர்களாகச் சித்திரிக்கப்பட்ட பீமன், கிருஷ்ணன்
ஆகியோர் கூட அல்லியிடம் தோற்று
ஓடுவதாகவும்,
ஏணியேற்றம் கதையில் துரியோதனன் அல்லியிடம் சவுக்கடி
படுவதாகவும் பேசப்படுகின்றனர்.
அருச்சுனனின்
பிற மனைவியரைக் கிளி, பூனை என வருணித்துத் தன்னைப் புலி, சிங்கம் என
வர்ணித்துக் கொள்ளும் அல்லி, அருச்சுனனின் பிற மனைவியரை விட ஒரு மேலாதிக்கத்
தன்மை கொண்டு விளங்குகிறாள்.
அல்லியின்
பெண்ணாதிக்கத் தன்மையும் ஒரு வரன்முறைக்குட்
பட்டதாகவே உள்ளது. எந்த ஆணுக்கும் அடங்க மறுத்த அல்லி,
அருச்சுனனின் மகனுக்குத் தாய் என்ற நிலையில் அருச்சுனனை
மணக்கச் சம்மதிக்கிறாள். இதே போன்று பவளக்
கொடி
மாலையில் அருச்சுனன் இறந்து விட்டான் என்ற செய்தி
கேட்டுத் தன் அல்லித் தன்மையை விட்டுவிட்டுப் புலம்புகிறாள்.
புருஷனை
நானிழந்து பூமியிலே நிற்பேனோ
. . . . . . . . . . . . . . . .
தீப்பாயந்து போவேனென்று செப்பியழுதாளே
(பவளக்கொடிமாலை)
இவ்விடத்தில்
சாதாரணப் பெண்கள் நிலைக்கு வந்து
விடுகின்றாள். மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி, அதன் கிளைக்
கதைகளில் வரும் நளாயினி, தமயந்தி மற்றும் இராமாயணத்தில்
வரும் சீதை ஆகியோர் ஆணுக்கு அடங்கியவர்களாகச்
சித்திரிக்கப்பட்டுள்ளனர். மேலும் ‘ஆடவனே மகளிர்க்கு உயிர்’
என்று குறிப்பிடும் பண்டைய சங்கப் பாடல் முதற்கொண்டு
குறள் போன்றவை வரை இத்தகைய சித்திரிப்பைக் காணலாம்.
ஆயின் புராணக் கதைப்பாடல்கள் பாடப்பட்ட களத்தையும்
காலத்தையும் நோக்கும் பொழுது ‘அல்லி’ பாத்திரப் படைப்பு
யதார்த்தமாக இல்லை, என்றாலும்
ஓரளவுக்கேனும்
ஆணாதிக்கத்தை வெறுப்பவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது
அக்காலத்திய மரபு மீறல் சிந்தனையின் வெளிப்பாடு எனலாம்.
4.3.2
அருச்சுனன்
 |
அருச்சுனன்
|
இதிகாச
வீரபுருஷனாகப் பேசப்படும் அருச்சுனன் புராணக் கதைப்பாடல்களில் பெண்களின்
பாலுணர்வு விருப்பத்தை நிறைவேற்றும் வகை மாதிரிப் (Typical
character) பாத்திரமாக வருகின்றான். பலதார மணமுறையின்
சின்னமாக விளங்குகிறான் அருச்சுனன். அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக்
கதைகளுமே அருச்சுனனின் காதல் விருப்பத்தையும் பெண்களை அடைய அவன் செய்யும்
முயற்சிகளையும் அதற்குத் துணைபோகும் கிருஷ்ணனின் மாயச் செயல்களையும்
கூறுகளாகக் கொண்டுள்ளன. பொதுவாக இலக்கியங்கள் பெண்ணின் அழகையும் ஆணின்
வீரத்தையும் வருணிக்கும் இயல்புடையன. ஆனால் கதைப் பாடல்களில் பெண்களின்
அழகு மட்டுமன்றி அருச்சுனனின் அழகும் வர்ணிக்கப்படுகின்றது.
அழகிலே
மதனரடி அரிவையர்க்கு மணவாளர்
அருச்சுனரைப் பார்த்தாலே அருங்களைகள் தீர்ந்து விடும்
(அல்லி அரசாணி மாலை)
இவன் அல்லியைக் கண்டு பயந்து ஓடுபவனாகவும்
சித்திரிக்கப்பட்டுள்ளான். பவளத்தேர் கொண்டு வரத் தாமதித்த
அருச்சுனன் மேல் கோபம் கொண்டு அல்லி அவன் மீது
படையெடுத்து வந்த பொழுது,
எங்கே
யொளித்து இருப்பேன் காண் மைத்துனரே
மதி மயக்க மாச்சுது மாயவிரே என்ன செய்வேன்
(பவளக்கொடி மாலை)
என்று
புலம்பும் அருச்சுனன், மின்னொளியாள் வீட்டிற்குப்
போகின்ற வழியில் பல பெண்கள் அவனை அழைத்தும்
அல்லிக்குப் பயந்து,
வெட்டத் துணிவாளே வீரியத்தைச் செய்வாளே
கணவனென்றும் பாராளே கண்டித்தும் போட்டிடுவாள்
என்று
சொல்லி அல்லி சொன்ன இடத்திற்கு
மட்டுமே
செல்கின்றவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். இவனது வீர
தீரப் பிரதாபங்கள் எதுவும்
கதைப் பாடல்களில்
பேசப்படவில்லை.
ஏணியேற்றம்
கதையில் வரும் வீரனான துரியோதனனும்
அல்லியால் அவமானப்படுத்தப் படுபவனாகவும் அவளிடம்
சவுக்கடி பெறுபவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். இதிகாச
நாயகர்களான அருச்சுனனும் துரியோதனனும் பெண் மோகம்
கொண்டு அலைபவர்களாகவும் அவர்களை அடைவதற்குக்
குறுக்கு வழியில் முயற்சி செய்பவர்களாகவும் கீழான முறையில்
புராணக் கதைப்பாடல்களில் காட்டப்பட்டுள்ளனர். கதைப்
பாத்திரங்களைவிட, கதைகளுக்கே அதிக முக்கியத்துவத்தைப்
புராணக் கதைப்பாடகர்கள் தருவதால் கதைப் பாத்திரங்களைச்
சிறந்த மனிதர்களாகக் காட்டத் தவறிவிட்டனர் எனலாம். |