பல
கதைப்பாடல்கள் மக்களின் வாழ்வைப் பிறப்பிலிருந்து
இறப்பு வரை சுட்டிச் செல்கின்றன. இவற்றைப் பற்றி விளக்கும்
போது தமிழ் மக்களின் வாழ்வியல், பண்பாட்டுத் தன்மை,
பழக்க வழக்கம், நம்பிக்கை, மரபு முறை போன்ற பலவற்றைக்
குறித்து அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. புராணக்
கதைப்பாடல்களில் பிறப்பு மற்றும் ஆண்-பெண் உறவு நிலை
பற்றிய வாழ்வியல் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அவை இடம்
பெறும் பாங்கினைக் காணலாம்.
4.4.1
பிறப்பு
தமிழிலுள்ள
கதைப்பாடல்களில் குழந்தைப் பிறப்பு மிகச்
சிறப்பாக விளக்கப்படுகிறது. குழந்தைச் செல்வத்தை மிகச்
சிறப்பாக மதித்துள்ளனர். குழந்தை இல்லை என்பதைப்
பெரும்பாவமாகக் கருதுவதோடு அறத்திற்கு மாறாகச்
செயல்பட்டால் குழந்தைச் செல்வம் வாய்க்காது என்றும்
நம்பினர். இந்த நம்பிக்கையின் எதிரொலியைப் பவளக்
கொடி
மாலை என்ற கதைப் பாடலில் கேட்கலாம்.
குழந்தைச்
செல்வம் வாய்க்காத சேராம்பூராஜன் குழந்தை
வேண்டி, பலவிதமான விரதங்கள் மேற்கொண்டு இறைவனை
வேண்டுகிறார். அப்பொழுது முழுமுதற்
கடவுளான
சிவபெருமான் தோன்றிப் பிள்ளை இல்லாததற்குக் காரணங்கள்
யாவை என்பதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.
கூலி
குறைத்தவர்கள் குறைமரக்கால் போட்டவர்கள்
அங்காடிக் கூடையை அதிகவிலை இட்டவர்கள்
பட்டரை நெல்லுதனில் பதரைக் கலந்தவர்கள்
குளமடைத்துக் குருவிக் கூண்டைக் கலைத்தவர்கள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
நீங்கள்
ஏது தவம் பண்ணினாலும் எதினாலும் பிள்ளையில்லை |
 |
என்பது
சிவன் வாக்கு. நற்செயலும்
நல்லறமும்
கொண்டவர்களே குழந்தைப் பாக்கியம் பெறத் தகுதியானவர்கள்.
தனக்கு ஏற்பட்டுள்ள குறையை எண்ணிப் பார்க்கும் போது
தான் செய்த குறைகள் நினைவுக்கு வந்து அவை திருத்தப்பட
வேண்டும் என்பது இங்குக் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. இறைக்
கூற்றாக இது உணர்த்தப்படுவதினால் இதைப் பற்றி
மக்கள்
எந்த அளவுக்குச் சிறப்பாகச் சிந்தித்துள்ளனர்
என்பதை
அறியலாம். குழந்தை பிறக்க வேண்டும் என்று
கருதிப்
பலவிதமான தானதர்மங்களைச் செய்ததையும் பலவிதமான
விரதங்கள் மேற்கொண்டதையும் தோட்டுக்காரி அம்மன்
கதை, பவளக்கொடி மாலை ஆகிய கதைப் பாடல்களில்
காணலாம். பவளக் கொடி மாலையில் சேராம்பூராஜன்
பிள்ளைப்பேறு வேண்டிச் செய்த விரத முறை பின்வருமாறு:
இலையிலே சாதமுண்டா
வென்னதவமென்று சொல்லி
தரையையவர் மெழுகிச் சாதங்களுண்டார்கள்
கடுமையான
வாழ்வை மேற்கொண்டு தங்களை வருத்தினால்
பழிபாவங்கள் கரைந்து குழந்தைப்பேறு கிடைக்கும் என்று
தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். குழந்தைச் செல்வத்தை
எந்த அளவுக்கு மக்கள் மதித்துள்ளனர் என்பது இவ்வெடுத்துக்
காட்டால் நன்கு விளங்கும். தவப்பயனால் கிடைத்ததை
உவப்புடன் பேணி உயர்வாக மதித்துக் காத்தல் வேண்டும்
எனும் கருத்தை வலியுறுத்துவதற்காகவும், நீண்ட நேரம்
கதையை நீட்டுவதற்கு உதவும் உத்திமுறையாகவும் கதைப்பாடல்
ஆசிரியர்கள் குழந்தைப் பிறப்பைப் பற்றி மிக விரிவாகவும்
சுவையாகவும் எழுதிப் பாடியுள்ளனர் எனலாம்.
4.4.2
ஆண்- பெண் உறவுநிலை
கதைப்பாடல்
மனித வாழ்வில் நேரிடும் சிக்கல்கள்,
சீர்கேடுகள் ஆகியவற்றை அறியும் வாய்ப்பை அளிக்கிறது. பருவ உணர்வுகள்
மனிதனை எவ்வாறு ஆட்டுவிக்கின்றன என்பதையும் அதை வெளிப்படுத்துவதில்
பின்பற்றப்படும் சமுதாய ஒழுங்குமுறையையும் புராணக் கதைப்பாடல்கள் வாயிலாக
அறியலாம்.
ஆணைச்
சார்ந்தே பெண் தன்னுரிமை இழந்து வாழவேண்டும் என்ற நிலையில்தான் அன்றைய
சமுதாய அமைப்பு
இருந்தது. ஆயின் கால வளர்ச்சியால் ஏற்பட்ட சிந்தனை மலர்ச்சியால்
பலவிதமான மாற்றங்கள் சமுதாயத்தில் பின்னர்த் தோன்றியுள்ளன. அவ்வாறு
தோன்றியதன் அடையாளமாகப் புராணக் கதைப்பாடலில் இடம்பெறும் அல்லி பாத்திரப்
படைப்பைக் கூறலாம். ஆணைச் சார்ந்து வாழாதவளாகப் படைக்கப்பட்டாலும்
அருச்சுனன் இறந்து விட்டதாக அறிந்ததும்
புருஷனை நானிழந்து பூமியிலே நிற்பேனோ
. . . . . . . . . . . . . . . .
தீப்பாய்ந்து போவேனென்று செப்பியழுதாளே
(பவளக்கொடிமாலை)
என்று
கதைப்பாடலாசிரியர் அல்லி
புலம்புவதாகக்
கூறுவதிலிருந்து சாதாரணப் பெண்கள் நிலைக்கு அவள் வந்து
விடுவதைக் காணலாம். பெண்கள்
பெரும்பாலும்
சமுதாயச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களாக விளங்க,
ஆண்கள் அதற்கு மறுதலையாக நடந்து கொள்வதையும்
புராணக் கதைப்பாடல்கள் விளக்குகின்றன.
சமுதாயத்தில்
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து
வாழும் வழக்கம் இருந்துள்ளதை அருச்சுனன் கதைப் பாத்திரம்
மூலம் அறியலாம். அது பலவகையில் சரியானது அன்று
என்பதே கதைப் பாடல்கள் உணர்த்தும் கருத்து. இக்கருத்தைப்
பல பெண்களை மணக்க விரும்பும் இதிகாசப் பாத்திரமான
அருச்சுனன் மூலம் உணர்த்துவதோடு அவனுக்கு ஏற்படும்
இன்னல்களையும் இழிவையும் கதைப்பாடல்கள் விளக்கிச்
செல்கின்றன. ஏற்கனவே சுபத்திரை, அல்லி முதலிய
பெண்களை மணந்த அருச்சுனன் பவளக் கொடியை
எப்பாடுபட்டாவது மணக்க வேண்டும் என்று கூறும் போது
ஏன்
காணும் வாள்விசயா இந்தமதி யுந்தனுக்கு
தோள்மாலை போட்டதொரு தோளிமார் தங்களிலும்
பாஞ்சாலன் பெற்ற பெண்ணைப் பத்தினியை மாலையிட்டீர்
அவளிலும் அதியழகோ ஆரணங்கு இவளழகு
. . . . . . . . . . . . . . . .
வேண்டாங்காண் வாள்விசயா வெறுத்துவிடும் இவளாசை
|
 |
என்று
கிருஷ்ணன் அறிவுறுத்துவது சிந்திக்கத்தக்கதாக அமைகிறது. ஒருத்தியை
மனைவியாக ஏற்று அவளைத் தவிர வேறு பெண்ணை நாடாமல் ஒட்டிய
உறவுடன் நின்று வாழும் ஆண்களே இல்லறமும் நல்லின்பமும் காக்கும் ஆண்மையாளர்
என்பது கதைப்பாடல்கள் காட்டும் உண்மை. கணவன், வீட்டை விட்டு வெளியே
செல்வதைக் கண்டதும் ஐயுற்று அமைதியிழக்கும் அவல நிலையில் பெண்கள் சிலர்
வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு ஒழுக்கம் குன்றிய ஆண்கள் இருக்கிறார்கள்.
இந்த உண்மையை அருச்சுனன் வாழ்வைக் கொண்டு பவளக் கொடி மாலை ஆசிரியர்
உணர்த்த விரும்புகிறார். பெண் பித்தனான அருச்சுனன் ஒரு முக்கியமான
செயல் செய்வதற்காக வெளியே புறப்பட,
எவளுடைய வாசல் செல்ல
எழுந்தீர் காணெழில் விஜயா
என்று
அவனது மனைவி கேட்பதோடு, அவன் சொன்ன எந்த
விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சில அடையாளங்களை
அவனது உடம்பின் மேல் பதித்து
குறியுங்
குறையாமல் கொப்பெனவே வாரும்
என்று
சொல்லி அனுப்புகிறாள். இத்தகைய வாழ்வில்
எந்த
அளவுக்கு அன்பும் ஆர்வமும் இருக்கும் என்பதை உணர்ந்து
கொள்ளலாம்.
பல
பெண்களை மணந்த அருச்சுனன், மீண்டும் மீண்டும்
மணமாகாத பெண்களைக் காணும் பொழுது அவர்களது
அழகில் மயங்கி அவர்களை அடைய முற்படுவதைப் பல
புராணக் கதைப்பாடல்கள் வாயிலாக அறிந்தோம். இதே
போன்று மணமான துரியோதனன் செயல்படுகிறான். ஆனால்
அது தவறான செயலாகக் கருதித் தண்டிக்கப்படுகிறான். காரணம்
அருச்சுனன் மணமாகாத பெண்ணை அடைய விரும்ப,
துரியோதனனோ அருச்சுனனின் மனைவியான சுபத்திரையை
அடைய விரும்புகிறான். அதனால் தண்டிக்கப்படுவதை
ஏணியேற்றம் கதைப் பாடல் வழி அறிய
முடிகின்றது.
சமுதாயம் இதனை அனுமதிக்கவில்லை என்பதையே இக்கதைப்
பாடல் அறிவுறுத்துகின்றது.
மணமான
ஓர் ஆடவன் மணமாகாத ஒரு பெண்ணைக்
காதலிப்பதை அந்த ஆடவனின் மனைவியரே ஒப்புக்
கொள்கின்றனர். ஆனால் மணமான ஓர் ஆடவன்
வேறொருவனுக்கு மணம் முடித்த ஒரு பெண்ணின் மீது
விருப்பம் கொள்ளுதலைச் சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்
கொள்ளவில்லை. மணமான பெண்விஷயத்தில் கற்பு
பேணப்படுகிறது. இதனைப் பாரம்பரிய இலக்கியங்கள்
சொல்வதைவிட அழுத்தமாகவும் ஜனரஞ்சமாகவும் புராணக்
கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஏணியேற்றம்
கதைப்பாடல்
சமுதாயச் சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டது.
வரலாற்றுக்
கதைப்பாடல்களிலும், சமுதாயக் கதைப்பாடல்களிலும்,
இடம்பெறாத ஒன்று புராணக் கதைப்பாடலில் இலக்கிய
யதார்த்தமாகக் காணப்படுகின்றது. பண்டைய இலக்கியங்களில்
பாலுணர்வு வர்ணனைக்கு ஒரு வரம்பு இருக்கிறது. இலை மறை
காயாகப் பேசப்பட்ட இச்செய்திகள் புராணக் கதைப்பாடலில்
வெட்ட வெளியில் விரிந்து கிடக்கும் பாதையைப் போலக்
காட்டப்படுகின்றன. ஆண் பாத்திரத்தின் அழகும் ஆண் மீது
பெண்கள் கொள்ளும் காதல் உணர்வும் வெளிப்படையாகவே
பேசப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுத்துவதில்ஓர்
உள்ளார்ந்த உளவியல் மகிழ்வு கதை சொல்பவருக்கும்
கேட்பவர்களுக்கும் இருந்திருக்கக் கூடும். |