கதையைப்
பாடுபவர்கள் கையாள்வதற்கு ஏற்பத் தொடக்கம்
அமையும். அதைப்போல, எந்த
நோக்கத்திற்காகப்
பாடப்படுகிறதோ, அந்த நோக்கத்திற்கு ஏற்பவும், மக்களுக்கு
மன நிறைவு தரும் வகையிலும் முடிவுகள் அமையும்.
5.2.1
கதைத் தொடக்கம்
கதையைத்
தொடங்குவதில் ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு
முறையைக் கையாள்கின்றனர். ‘தாம் தனதந்த தானாதன’ எனும்
இசைச் சொற்களோடு சிலர் தொடங்குவர். சிலர் நாட்டு
வளத்தைக் கூறித் தொடங்குவர். வியப்பூட்டும் நிகழ்ச்சியைக்
கூறுவது அல்லது கதைச் சிக்கலை உணர்த்தும் நிலையைச்
சொல்வது போன்று எதிர்பார்ப்பைத் தூண்டும் உரையோடு சிலர்
கதையைத் தொடங்குவதைக் காணலாம். இவை கதை கேட்கும்
ஆவலை எழுப்புவதுடன் கதையைப் பற்றிய ஓர் உயர்வான
எண்ணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.
தேசிங்குராசன்
கதையை வியப்பூட்டும் நிகழ்ச்சியைக் கொண்டு தொடங்கியுள்ளதைக் காணலாம்.
அவனுடைய வீரக்கதையைத் தொடங்கும் போது,
தெய்வலோகத்தில்
பிறந்த குதிரை
திசை தப்பி வருகுது பார்
என்று
கூறப்படுகிறது. இத்தகைய குதிரையை யாரால் அடக்க
முடியும் என்ற வினா எழுகிறது.
தெய்வ
வரத்தினால் பிறந்த பிள்ளை
வந்து ஏறவேணும்
பூமிபாரம் தீர்க்க வந்தவன்
இப்புரவி ஏறவேணும்
தேசிங்குராசன்
ஒருவனால் மட்டுமே இந்தக் குதிரையை அடக்க முடியும் என்ற கருத்தை அறிவித்துக்
கதைத் தலைவனை ஆசிரியர் அறிமுகப்படுத்துகின்றார். கதையின் முக்கிய நோக்கத்துக்குப்
பொருத்தமாகவும் மக்களின் ஆவலைத் தூண்டுவதற்காகவும் தொடக்கம் இவ்வாறு
அமைக்கப்படுகிறது.
5.2.2
கதை முடிவு
பலவிதமான
நோக்கங்களைக் கொண்டு கதைப் பாடல்கள்
எழுதப்படுகின்றன. கதையின் நோக்கங்கள் நிறைவேறும்
முறையில் முடிவுகள் அமையவேண்டும். சுவையான
முடிவுகளையே மக்கள் மிகுதியாக விரும்பினர். கதையின்
நோக்கத்துக்கும் மக்களின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு கதை
முடிவுகளை ஆசிரியர்கள் அமைத்திருப்பதைப் பல கதைப்
பாடல்களில் காணலாம். பெரும்பாலான கதைப்பாடல்கள்
சோகமுடிவுகளைக் கொண்டவையே. தேசிங்குராசன் கதையில்
தேசிங்குராசன் இறந்து விடுகிறான். அவனது மரணம்
அவனுடைய அரசியின் முடிவுக்கும் காரணமாக அமைகிறது.
இருவரும் வைகுந்தப் பதவியை அடைகின்றனர். துன்பியலாக
முடிந்திருக்க வேண்டிய இந்த வரலாற்று நாடகம் இறுதியில்
அரங்கநாதனின் நல்லருளால் இன்ப முடிவை அடைகிறது.
கதைப்பாடல்களில்
பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உயிர்
ஆவியுருவில் வரம்பெற்றுத் தெய்வமாகிப் பூசை பெறுவதே
காட்டப்படுகிறது. ஆரவல்லி சூரவல்லி
கதையில்
அல்லிராஜனும், கோவலன் கதையில் கோவலனும், நல்லதங்காள்
கதையில் நல்லதங்காளும் அவளுடைய ஏழு குழந்தைகளும்
இறந்த பின்னர் அதிசய ஆற்றலால் மீண்டும் உயிர்பெற்று
உடம்போடு எழுவதைக் காட்டுகின்றனர்.
கதைப்பாடலாசிரியர்கள்
அவல முடிவுகளைத் தங்களால் இயன்ற அளவு மாற்ற முயல்கிறார்கள். இறந்தவர்கள்
உயிர்பெற்று வாழ்வது முறையில்லை என்பதை அவர்கள் உணராமல் இல்லை. இருப்பினும்
கதை கேட்போரின் ஆறுதலுக்காகச் செத்தவர்களை உயிர்த்தெழுப்பி அவலத் தணிப்புச்
செய்ய முயற்சி செய்கின்றனர். இதனை
ஆண்டாண்டு தோறும் அழுதாலும் பூமியிலே
மாண்டிறந்து போனவர்கள் வருவதில்லை
என்ற
ஆரவல்லி சூரவல்லி கதையில் வரும் பாடலடிகள்
மெய்ப்பிக்கின்றன.
|