இனி,
கதைப்பாடல்கள் எவ்வெவ்வகையில் மக்களுக்குப்
பயன்படுகின்றன என்று பார்க்கலாம்
·
மக்கள் தொடர்புச் சாதனம்
கடந்த
நூற்றாண்டுகளைப் பொறுத்தவரை கதைப்பாடல்கள் ஒரு
நல்ல முறையான மக்கள் தொடர்புச் சாதனமாக (Mass Media)
விளங்கி வந்துள்ளன. கதைப்பாடல்கள் மக்களின் சிறந்த
பொழுது போக்காக இருந்து வந்துள்ளன. மக்களுக்காக
அறிவுத்துறை நிறுவிய அருமையான பொழுது போக்காகக்
கதைப் பாடல்களை மதிக்கலாம். குறிப்பாக, நாட்டுப்புறப்
பெண்களில் மிகுதியானவர்களுக்கு இக்கதைப் பாடல்கள்
பொழுதுபோக்காகவும் அறிவு விளக்கச் சாதனமாகவும்
அமைந்துள்ளன.
·
உந்து கருவி
வில்லுப்பாட்டு,
உடுக்கடிப் பாட்டு, கணியான் பாட்டு முதலிய பல
கலைகள் தோன்ற, கதைப் பாடல் உந்து ஆற்றலாக விளங்கியது
எனலாம்.
·
ஊடகம்
சமூக
மாற்றங்களை எளிதில் புகுத்த முடியாத காலக் கட்டத்தில்
கதைப்பாடல்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று
விளங்கியுள்ளன. ஆகவே இக் கதைப்பாடல்களைச் சாதி சமயச்
சீர்திருத்தங்களைச் செய்யத் தகுந்த
ஊடகமாகப்
பயன்படுத்தியுள்ளனர்.
·
பதிவுச் சாதனம்
பாமர
மக்களின் வாழ்க்கை முறைகளையும் இயல்புகளையும்
பதிவு செய்துவைத்துள்ள சாதனம் கதைப் பாடல் எனலாம்.
காலங் காலமாக மாறிவரும் பண்பாட்டு இயல்புகளைக்
காலமாற்றத்திற்குத் தக்கவாறு அறிவிக்கும் கருவி கதைப்பாடல்
என்றும் கொள்ளலாம்.
·
அறிவுறுத்தும் கருவி
புராணங்களைப்
பற்றிய அறிவு, உலக வாழ்வு பற்றிய ஞானம், பக்தியின் சிறப்பு, அறம் தொடர்பான
சிந்தனை முதலியவற்றை நாட்டுப்புற மக்களுக்கு அறிவுறுத்திய சிறப்பினையுடையவை
கதைப் பாடல்கள்.
பாமர
மக்களுக்குப் பொழுது போக்காக இருந்த கதைப்பாடல்
இன்று அறிஞர்களுக்கு ஆய்வுக்களமாகவும் அமைந்துள்ளது
எனலாம்.
|