6.1 சமூகம்

மனிதன் தன் இனத்துடன் சேர்ந்து வாழும் இயல்புடையவன். அவன் தன் இனத்தாரோடு கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் (Community) உருவாகின்றது. தனி மனித வாழ்விற்கும் சமூக வாழ்விற்கும் இடையில் நிரம்ப வேறுபாடு உண்டு. சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்று சமூகவியலாளர் கூறுவர். சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும்பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவது வழக்கம். கதைப்பாடல்கள் வாயிலாக அறியவரும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் காணலாம்.

6.1.1 சாதிப் பிரிவும் - மக்களும்

தமிழ்ச் சமூகம் சாதி மற்றும் சமயப் பிரிவுகளைக் கொண்டுள்ள ஓர் அமைப்பாகும். இயற்கையின் படைப்புக்கும் சாதிப்பிரிவுகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இருப்பினும் மனித இனத்தைப் பல்வேறு சாதிகளாகப் பிரித்து ஏற்றத் தாழ்வுகளைச் சமூகம் கற்பித்துள்ளது.

உணர்விலும் உடலமைப்பிலும் ஒரே மாதிரியாக விளங்கும் மனிதன், பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டுக் காணப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது சாதிப் பிரிவினையே ஆகும். சாதி, இனப் பாகுபாட்டால் சமூகத்தில் விளைந்த சீர்கேடுகளைக் கதைப்பாடல்கள் தம் எல்லைக்கு உட்பட்டு விளக்கிக் காட்ட முயல்கின்றன. சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு அவற்றின் பயனாகப் பலவிதமான சிக்கல்களும் போராட்டங்களும் ஏற்பட்டுள்ளதை விளக்கிக் கூறுகின்றன.

காத்தவராயன் கதைப்பாடலின் தலைவன் காத்தவராயன் தாழ்ந்த இனத்தவன். அவன் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவளான ஆரியமாலையைக் கண்டு மயங்கி அவளை மணக்க விரும்புகிறான். ஆரியமாலையும் அவ்வாறே விரும்புகிறாள். ஆரியமாலையை அவளைச் சார்ந்தோர் கட்டுக்காவலில் அடக்கிக் காக்க முற்படுகின்றனர். காத்தவராயனோ அக்காவலை உடைக்க முற்படுகின்றான். மந்திர, தந்திர வேலைகள் நடக்கின்றன. முடிவில் காத்தவராயன் கழுவிலேற்றிக் கொல்லப்படுகின்றான். இயற்கையான காதலுணர்வும் செயற்கையான சாதிப் பிரிவுணர்வும் முட்டி மோதி முரண்படும் போது நேர்கின்ற நிகழ்வுகள் இறுதியில் கொலையில் முடிவதை இக்கதைப்பாடலில் காண முடிகின்றது.

சின்னநாடான் கதையில் நாடார் குலத்தலைவன் ஒருவன் நாவிதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி விளக்கப்பட்டுள்ளது. நாவிதப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை, நாடார்களை ஆளும் உரிமையுடன் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தக் குடும்பத்தையே கொன்று அழித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் ஏற்பட்ட கடுங்கொந்தளிப்பையும் பரபரப்பையும் கதைப்பாடல் விளக்கிக் காட்டுகின்றது.

முத்துப்பட்டன் கதையில் வரும் முத்துப்பட்டன் செருப்புத் தைப்பவனான வாலப்பகடையின் பெண்களைக் கண்டு காதலிக்கிறான். உயர் சாதியைச் சேர்ந்தவனான முத்துப்பட்டனை மணக்க வாலப்பகடையின் பெண்கள் விரும்பவில்லை. பகடையும் மறுக்கிறான். பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மாடறுத்துத் தோலுரித்துச் செருப்புத் தைப்பவனாக மாறினால், தன் பெண்களை மணந்து கொள்ளலாம் எனப் பகடை கூறுகிறான். முத்துப்பட்டன் அவ்வாறே செய்து வாலப்பகடையின் பெண்களை மணந்து கொள்கின்றான்.

இந்தக் கதை முடிவுகளிலிருந்து பல உண்மைகளை உணரலாம். சாதி விட்டுச் சாதி மணஉறவு கொள்வதை அக்காலத்தில் பெருங்குறையாகக் கருதியுள்ளனர். பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் பிறர் அனுமதிப்பதே இல்லை. அத்தகைய வேற்றுச் சாதிக் கலப்புமணங்களைப் பொதுக் குறையாகக் கருதி அந்தச் சாதியினர் அனைவரும் கூட்டாக இணைந்து எதிர்த்துள்ளனர். சாதிக் காழ்ப்பு, ஒன்றுமறியாக் குழந்தையையும் இரக்கமின்றிக் கொல்லும் அளவிற்கு வலிமையுற்று இருந்தது. கீழ்ச்சாதிக் கலப்பு எந்த நிலையிலும் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது எடுத்துரைக்கின்றது. இந்த எண்ணம் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழான சாதியினரை எவ்வளவு தாழ்வாக மதித்திருப்பர் என்று எண்ணிப் பார்க்கலாம்.

6.1.2 சாதிப்பிரிவும் - மன்னரும்

திருமணம் செய்வதில் மன்னர்களும் குலவேறுபாடு கருதுவதைக் கதைப்பாடல்களில் காணமுடிகின்றது. கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதியைக் கோனாண்டி ராசனும் அதன் பக்கத்திலிருக்கும் தட்டாரிப்பதி என்ற வட்டக் கோட்டையைக் கொந்தளப்பூ ராசனும் ஆண்டு வந்தனர், கோனாண்டி ராசனுடைய மகள் தோட்டுக்காரியைத் தன்னுடைய மகன் குமரப்பராசனுக்கு மணம் செய்ய விரும்பிக் கொந்தளப்பூ ராசன் ஓலை கொடுத்து, ஒட்டனை முட்டப்பதிக் கோட்டைக்கு அனுப்புகின்றான். இதை அறிந்த கோனாண்டி ராசன் கோபம் கொண்டு,

வந்த ஒட்டனை ஏசிப் பறைந்தனன்
பறையாத பறைவார்த்தை பேசியே
பயலாரடா பெண் கேட்டு வந்தவன்

(தோட்டுக்காரி அம்மன் கதை)

என்று ஒட்டனை ஏசியும்,

எனக்கு இவன் சரிதானோடா

என்று கூறியும் பெண் கொடுக்க மறுக்கிறான். படைபலம், வெற்றிச்சிறப்பு, குலநலம் ஆகியவற்றில் கொந்தளப்பூ ராசன் தான் பெண் கொடுக்கத் தகுதி இல்லாதவன் என்று கோபத்துடன் பேசுகிறான். சிற்றரசர் இருவருக்குள்ளே இருந்த ஏற்ற இறக்கத்தை இக்கதைப் பாடல் கூறுகின்றது.

வள்ளியூரை ஆண்ட குலசேகர பாண்டியனுடைய படத்தைப் பார்த்து, கன்னடியன் என்னும் அரசனின் மகள் காதல் கொள்கிறாள். ஆகையினால் கன்னடியன் வள்ளியூர்க் கோட்டைக்கு மணத்தூது அனுப்புகிறான். தூதனைக் கண்ட குலசேகரபாண்டியன் கோபத்தால் துடித்துத் தனக்குப் பெண் தரக் கன்னடியன் தகுதியுள்ளவனா என்று கேட்கிறான். குலத்தாழ்ச்சி எடுத்துக் காட்டப்படுகிறது. கன்னடியன் படைபலத்தால் வலியவன். இருந்தும் குலத்தால் தான் உயர்ந்தவன் எனக் கருதிய குலசேகரன் பெண்ணெடுக்க மறுத்து விடுவதை, கன்னடியன் படைப்போர் கதைப்பாடலில் காணலாம்.

அரசர்கள் மத்தியிலும் குலப்பெருமை காணும் போக்கு இருந்துள்ளதை இதன் மூலம் அறிகிறோம். இவ்வாறு குலப்பெருமை பேசிய நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்ததைப் பற்றிக் கதைப்பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன.

6.1.3 சாதியும் - பண்பும்

தமிழ்நாட்டில் சாதிகள் பலவாகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. வாணிபம் செய்வோர் வணிகர் எனவும், ஆடுமாடு மேய்ப்போர் ஆயர் அல்லது இடையர் எனவும், காட்டில் வேட்டையாடுவோர் வேடராகவும் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் குறிசொல்வோர் குறவர் எனவும், செருப்புத் தைப்பவர் பகடை அல்லது சக்கிலியர் எனவும், பணிவேலைகள் செய்வோர் சாம்பவர் எனவும் கதைப்பாடல் குறிப்புகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரே தொழிலைச் செய்பவர்கள் தனித்தனிச் சாதிகளாகப் பிரிந்து கொள்வினை கொடுப்பினைகளைத் தங்களுக்குள் செய்து வேறாகியுள்ளனர் என்று கருதலாம்.

சாதிகளுக்குத் தனித்தனியே பண்பாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், செயல் திறன்கள், கலைத்திறன்கள் முதலிய பண்புகள் வேறுபாடுகளுடன், நிலைத்த தன்மைகளுடன் ஏற்பட்டுள்ளன. ஒரு சாதியினர் இன்ன தன்மையுடன் இன்னின்ன திறமையுடன்தான் இருப்பர் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களிடம் அவை இணைந்துள்ளன. இதனைக் கதைப்பாடல்கள் குறிப்புகளாகக் காட்டிச் செல்கின்றன.

காடு மலையுள்ள செடிகளிலே
காட்டுடன் ஆடு மேய்த்து மேய்த்து
-----------------------
பாடுபல பட்டு தண்ணீரூட்டி
பரமக் கோனாரும் பார்த்தடைத்து
பரமக் கோனாரும் பார்த்தடைத்து

(வெங்கலராசன் கதை)

என்று கூறுவதில் கோனார் எனப்படும் ஆயர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக் காவல் காத்தமை அறியப்படுகிறது.

வில்லெடுத் துயிர்வதை செய்கின்ற
வேடர்க் கஞ்சிப் புறாவந் தொதுங்கிட

(வெங்கலராசன் கதை)

என்ற குறிப்பின் வழி வேட்டையாடுவது வேடரின் தொழில் என்பதை அறியலாம்.

பாலன் வயது பதினா றதாக
வெள்ளிக் கோல் கையிலெடுத்து சரக்கும்
விரைவுடன் கொண்டுமே வாணிபம் செய்து

(வெங்கலராசன் கதை)

என்று சொல்வதில் வணிகர் தங்களுடைய பதினாறு வயதுப் பருவத்திலேயே தராசுங் கையுமாக வாணிபம் செய்யப் புறப்பட்டு விடுவதை அறியலாம்.

சாதிகளுக்கென்று தனித்துவமான சில முறைகள் இருப்பதையும் கதைப்பாடல்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பரத்தையர் உறவு பலருக்கு அக்காலக் கட்டத்தில் இருந்தது. அத்தைகைய உறவு கொண்டு பரத்தையருடன் போனவரைத் திருப்பி அழைக்கும் பழக்கத்தை வணிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை கோவலனை அழைக்க வேண்டும் என்று விரும்பிய கண்ணகியிடம் வேசியுடன் போனவரை வீட்டுக்கு நாமழைத்தால் வர்த்தகர்கள் நம்மை மதியார்கள் நம்மையொத்த அவ்வாறு அழைப்பது நமது சாதி முறையன்று என்று முதிய பெண்கள் கூறுவதாக, கோவலன் கதை எடுத்துரைக்கின்றது

வண்ணார் குலவழக்கம் ஒன்றினை மெச்சும் பெருமாள் பாண்டியன் கதை சுட்டிச் செல்கிறது. சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவன் மெச்சும் பெருமாள். அவனை வளர்த்த வளர்ப்புத் தாய் வண்ணார் சாதியைச் சேர்ந்தவள். வளர்ப்புத் தாயின் மகன் திருமணத்தில் மெச்சும் பெருமாள் கலந்து கொள்கிறான். ஆனால் அந்த மணமகளின் அழகில் தன்னைப் பறிகொடுக்கிறான். அவளை அடையவேண்டும் என்ற ஆசையை வளர்ப்புத்தாயிடம் வெளியிடுகின்றான். வளர்ப்பு மகனின் ஆசையைக் கேட்ட வண்ணாத்தி இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்து இறுதியில் மருமகளிடம் தெரிவிக்கின்றாள். மருமகள் வண்ணார் குலமுறை வழக்கத்தை எடுத்துக் கூறுகிறாள்.

நம்முடைய சாதியிலே
நாம் தவறி நடந்தோமானால்
சாதி விலக்கி வைப்பர்
தரக் குறைவாய்ப் பேசிடுவர்
நன்மை தீமைக்குச் சேரமாட்டார்
நம்மிடத்தில் சம்மந்தம் செய்யமாட்டார்

(மெச்சும் பெருமாள் பாண்டியன் கதை)

வண்ணார் குலத்தில் பெண்கள் ஒழுக்கம் தவறுவதைப் பெருந்தவறாகக் கருதியுள்ளார் என்பதை இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. குசலவர் சுவாமி கதையில் ஒழுக்கம் தவறிய வண்ணாத்தியைக் கணவன் கண்டிக்கும் நிகழ்ச்சி வருகிறது

ஏது சொல்வான் அந்த மாட வண்ணான்
இராமனும் அங்கே ஒழுங்கோ பெண்ணே
இராவணன் கொண்டு போன இலட்சுமியை
இராமனும் கூட்டி வந்திருக்கிறானே

இராமனைப் போன்று தான் ஏற்றுக்கொள்வது இல்லை என்று உறுதியுடன் மறுத்து விடுகிறான், இதிலிருந்து அந்தக் குல இயல்பைக் கண்டறியலாம்,

இவ்வாறு சில சாதியினரிடம் காணப்பெற்ற தனித்தன்மையுடைய சிறப்பியல்புகளைக் கதைப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவை தமிழ்ச் சமூக நடைமுறைகளைப் பற்றி நன்கு தெரிவிக்கும் வாயில்களாகத் தோன்றுகின்றன.