ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை அமைப்பு முறையின் வெளிப்பாடே
பண்பாடாகிறது. வாழ்க்கை அமைப்பு என்பது அச்சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள்,
நம்பிக்கைகள், மரபுகள், கலைகள், இலக்கியங்கள் முதலியவற்றால் அறியப்படுவது.
சுருங்கக்கூறின், பண்பாடென்பது ஒரு தலைமுறையினர், சென்ற தலைமுறையினரிடம்
பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து
கொள்வதற்குப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அடிப்படைக் கருவிகளாக
அமைகின்றன. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் மக்களிடம் காணப்படும் பழக்க
வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நாட்டு நடப்புக்குத் தக்கவாறு எடுத்துக்
காட்டுகின்றன. இவற்றை ஆராயும் பொழுது நாட்டுப்புற மக்களின் பண்பாடு
வெளிப்படுகின்றது எனலாம்.
·
பழக்க வழக்கங்கள்
பழக்கம்
என்பது கற்கும் செயலாகும். தனிமனிதனின் செயல்கள்
தொடர்ந்து அவனால் செய்யப்பட்டு வரும்போது நாளடைவில்
இது பழக்கமாகிறது. பழக்கமானதும் ஒரு செயலின் வெளிப்பாடு
முன்பு இருந்ததைவிட முறையாகப் பண்பட்டு வெளிவருவதைக்
காணலாம். தனி மனிதன் ஒருவன் பழகிப்போன முறையில்
திரும்பத் திரும்பச் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட செயலைப் பல
மனிதர் ஒன்றாகச் சேர்ந்து செய்கின்றபொழுது, அது வழக்கம்
எனப் போற்றப்படுகிறது. வழக்கம்
என்பது
சமுதாயத்திற்குரியதாக அமைந்து விடுகிறது. கதைப் பாடல்கள்
கொண்டு தமிழ்ச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் சிலவற்றைக்
காணலாம்.
6.3.1
வாழ்வியல் முறைகள்
அன்றாடம்
மற்றும் அடிக்கடி பின்பற்றப்படும் நடைமுறைகள்
வாழ்வியல் முறைகளாகும். காத்தவராய சுவாமி கதையில்
மஞ்சள், பச்சிலை, கிச்சிலிக் கிழங்கு ஆகியவற்றை அரைத்துப்
பூசிப் பெண்கள் குளிக்கும் வழக்கம் பின்வருமாறு
விளக்கப்படுகிறது.
காஞ்ச
மஞ்சள் குட மஞ்சள் கொல்லத் தரக்கு மஞ்சள்
சீரங்க மஞ்சள் திருநெல்வேலி ருக்கு மஞ்சள்
பச்சிலைக் கிச்சிலிக் கிழங்கு பாவையரும் தான் குளிப்பாள்.
காதலித்த
பெண்களை மணக்க விரும்பி மடலேறுதல், குளத்தில் மருந்து கரைத்தல் போன்ற
பழக்கங்கள் இருந்ததை அல்லியரசாணி மாலை
வாயிலாக அறியலாம். பெண்கள் பருவமெய்தியதும் செய்யப்படும் சடங்கு முறைகளை
மதுரைவீரசுவாமி கதை விளக்கிக் கூறுகிறது.
பொழுது
விடிந்த பின்பு பொம்மன நாயக்கனுமே
பொம்மியம்மாளுக்குப் பொருந்தி சடங்கு செய்ய
கூட்டத்துடனே குடிசைக்குத் தான்வந்து
குடிசை பிடுங்கிக் கொளுத்தி விட்ட பிற்பாடு
பொம்மியம்மாள் தன்னைப் பொங்கமுடன் நீராட்டி
சாந்தி செய்ததாக விளக்கப்படுகிறது.
6.3.2
நோன்புகள்
நோன்புகள் செய்தல், விரதமிருத்தல், படையலிடுதல் போன்ற சமயச் சார்பான
சடங்குகளுக்குச் சமுதாயத்தில் சிறப்பிடம் கொடுத்துள்ளதாகத் தோன்றுகிறது.
பெண்கள் நோன்புகள் செய்ய வேண்டும் என்ற நியதி இருந்துள்ளதை அமராவதி
கதையின் வாயிலாக நன்கறியலாம். அமராவதி பலவிதமான
தான தருமங்களை நாளும் தவறாமல் செய்து வருகிறாள். ஆனால் அவளுக்குத்
துறக்க (சொர்க்க) வாழ்வு மறுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவள் இறைவனை
வணங்காததும் விரதம் மேற்கொள்ளாததுமாகும். அதனால் அமராவதிக்கு மேலுலக
வாழ்வு மறுக்கப்படுகிறது. "சிவஸ்தலம் விஷ்ணுதலம்
தரிசனம் செய்தறியாள் சித்திரபுத்திரன் நோன்பு சிந்தையில் வைத்தறியாள்"
அமராவதி, தன் தவற்றை உணர்ந்து பலவித விரதங்களை மேற்கொண்டு
இறையுணர்வுடன் பூசனைகளும் செய்தபின் நல்லுலகம் அடைந்து சிறப்படைகிறாள்.
இறைவணக்கம், நோன்புசெய்தல், விரதங்காத்தல் போன்றவை மக்களால் கட்டாயம்
பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் காட்டுவதுதான் அமராவதி
கதையின் ஒரே நோக்கமாகும்.
6.3.3 சத்தியம் வாங்குதல்
ஏதாவது ஒன்றை உறுதிசெய்து சத்தியம் (பிரமாணம்)
செய்யும்
முறையை ஈனமுத்துப் பாண்டியன் கதை
விரிவாகக் கூறுகிறது.
ஆணை
பிரமாணம் பண்ண வேணும்
திருவிளக்கு உப்பு பால் வெடி
வேல்கத்தி பிரமாணம் பண்ண வேணும்
6.3.4
சீர்வரிசை
திருமணத்தின் போது பெண் வீட்டார் சீர்வரிசை கொடுப்பதும் மாப்பிள்ளை
வீட்டார் பரியம் கொடுப்பதும் வழக்கம். இதனை நல்லதங்காள்
கதை,
நல்லதம்பி
தங்கைக்கு
சீராகச் சீதனங்கள் சிந்தை மகிழ்ந்தீந்து
காசிராஜன் பெண் வீட்டாருக்கு
பரியம் கொடுத்தானே பத்துலட்சம் பொன்நிதிகள்
என விளக்கிக் கூறுகிறது.
6.3.5 கல்வி
ஐந்து வயதில் கல்வி கற்கும் பருவம் தொடங்குவதாக
ஒரு
கதைப்பாடல் குறிப்புத் தருகிறது. அக்காலக் கல்வி முறை பற்றிச்
சில செய்திகளை இயக்கியம்மன் கதை
எடுத்துரைக்கிறது.
வாத்தியார்
தன்னை யழைத்தார் சணத்தில்
நேரிட்டி ருத்தியே தீபமு மேற்றி
நிறை நாழி நெல் விடலை கடலை பயிறவல் தேன்
சீரிட்டு விக்ன விநாயக னருளால்
செல்வக்குமரனைப் பள்ளிக் கிருத்தி
பள்ளிக் கிருத்திப் பல நூலுங் கற்று
கல்வியின்
தொடக்கம் ஒரு சடங்கு முறையாகச் செய்யப்படுகிறது.
பிள்ளையாருக்குப் படையல் செய்து பெற்றோரும், பெரியோரும்
கூடிக்குழுமி இருக்கும் இடத்தில் ஆசிரியர் மாணாக்கனுக்குக்
கல்வி கற்பிக்கத் தொடங்க வேண்டும். கல்வி பெறுவதைப்
புனிதமாகக் கருதியுள்ளனர் என்பது இதனால் விளங்கும்.
வீரர்கள், அரசர்கள் ஆகியோர் சிலம்பப் பயிற்சி பெற்ற
குறிப்புகள் சில கதைப் பாடல்களில் காணப்படுகின்றன. மெச்சும்
பெருமாள் கதை, சேர்வைக்காரன் கதை, சிதம்பர நாடார்
கதை, ஐவர் ராஜாக்கள் கதை இவற்றில் வரும் கதைத்
தலைவர்கள் சிலம்பம் படித்துத் தேறிய செய்திகள்
தரப்பெற்றுள்ளன. ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் கல்வி
கற்ற செய்தி அபிமன்னன் சுந்தரிமாலை,
பூலங்கொண்டாள்
கதை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே
குறிப்பிட்டுள்ளவை தவிரத் திருவிழா, உணவு, உடை,
அணிகலன்கள், வழிபாடு, விளையாட்டு முதலியவற்றாலும் ஒரு
சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்ள இயலும். |