மனித வாழ்க்கை நம்பிக்கையின் துணை கொண்டே பயணம் மேற்கொள்கிறது. ஒரு
சமுதாயத்தின் நம்பிக்கை இன்னொரு சமுதாயத்திற்கு மூட நம்பிக்கையாகத்
தோன்றலாம். மனித மனத்தின் நலவிருப்பமே நம்பிக்கைகளை நிலைபெறச் செய்கின்றது.
திருமணம், சோதிடம், கனவு, குறி, மந்திரம், இறப்புக்குப்பின் மனிதன்
பேயாகிப் பழிக்குப் பழிவாங்குதல் முதலியவற்றில் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்
என்பதைப் பல கதைப்பாடல்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. நாட்டு நடப்புக்குத்
தக்கவாறு கதைப்பாடல்கள் மக்களின் நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுவதனால்
அவர்களின் பண்பாட்டுத் தன்மைகளை எளிதாக அறியும் வாய்ப்புக் கிடைக்கிறது.
அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
6.4.1
குறி சொல்லல்
நாட்டுப்புற
மக்களின் வாழ்வில் குறி கேட்கும் பழக்கம் மிகுதியாக இருக்கின்றது.
துன்பப்பிடியில் சிக்குண்டு வாடுவோர் அதிலிருந்து விடுபடத் தங்களுக்கு
வாய்ப்பு உண்டா என்பதை அறியக் குறி கேட்கச் செல்வதுண்டு. இது குறிகேட்பதில்
நம்பிக்கையுடைய மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் வாழ்வியல் நிகழ்ச்சியாகும்.
இத்தகைய குறிசொல்லும் நிகழ்ச்சிகள் மின்னொளியாள்
குறம், துரோபதை குறம், தோட்டுக்காரி அம்மன் கதை ஆகியவற்றில்
இடம் பெற்றுள்ளன. தோட்டுக்காரி அம்மன் கதையில் இயல்புகள், குறி சொல்லும்
திறன் போன்றவை விரிவாக விளக்கப்படுகின்றன. வாழ்க்கைத் துயரில் வெந்து
வாழும் கதை மாந்தருக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் குறி சொல்லுதல் அமைந்துள்ளதைப்
பல கதைப்பாடல்களில் காணலாம். குறத்தியின் வருகை,
ஏறுவாடி
மலைதனிலே இருந்த மலைக் குறத்தியவள்
மலைதனிலே வெகுநாளாய் மழைகள் தண்ணீரில்லாமல்
காட்டு வள்ளிக்கிழங்குடனே கனிபலதும் கிடையாமல்
-----------------------
இருந்தமலை விட்டிறங்கி எழுந்து மலைக் குறத்தியவள்
மறத்தியைப் போல் உடையுடுத்து வலதுகையில் சேயிடுக்கி
கொப்பிடுக்கி குழையிடுக்கி குறப்பெட்டியுந் தலையில் வைத்து
என்று தோட்டுக்காரி அம்மன் கதையில் நீண்டு
செல்கின்றது. குறத்தியின் வருகை குறித்து இவ்வளவு விரிவாகக்
கதைப்பாடல் விளக்கம் கூறியுள்ளதிலிருந்து குறிகேட்பதில்
மக்களுக்கிருந்த ஆர்வத்தை அறியமுடிகிறது.
6.4.2
சோதிடம்
சோதிடம்
எதிர்கால நடப்புகளை முன்னறிவிப்புச் செய்யும்
கலையாகும், குழந்தை பிறந்ததும் சோதிடரை அழைத்துச்
சாதகம் எழுதிப் பார்ப்பது தமிழ்ச் சமுதாய
வழக்கம். சோதிடப்
பலனாக வரவிருக்கும் நிகழ்ச்சிகளை வகையாகக் குறித்துக்
காட்டுகின்றனர்.
பாண்டியனின்
மகளாகப் பிறந்த கண்ணகியால் மதுரை மாநகர் அழியப் போகிறது என்று சோதிடர்
கூறுகின்றார். சோதிடர் அவ்வாறு கூறியதினால் கண்ணகியைப் பெட்டியில்
வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். சோதிடனின் கூற்றால் ஒருகதை நடக்க
வழி பிறக்கிறது. இது கோவலன் கதையில் வரும்
நிகழ்ச்சியாகும். இதுபோன்றே மதுரை வீரன்
கதை நடைபெறுவதற்கும் அவனுடைய சாதகமே காரணமாக அமைகின்றது.
மாலை
சுற்றித் தான் பிறந்தால்
மாமனுக் காகா தென்பர்
என்று
மாலை சுற்றிப் பிறந்த காரணத்தைக் காட்டி அவனைப் பெட்டியில் அடைத்து
ஆற்றோடு அனுப்பி விடுகின்றனர். காசிராஜனின் மகனான மதுரை வீரன் அவனது
சாதகம் காரணமாக ஒரு தோட்டியிடம் வளரும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
சோதிட உரைகள் வாழ்க்கையின் போக்கை மாற்றிவிடும் தன்மையை இதனால் அறியலாம்.
மக்களின் சோதிட நம்பிக்கை கதைப்பாடலை வழிநடத்திச் செல்ல உதவும் உத்தியாகப்
பயன்பட்டுள்ளதனைக் காணலாம்.
6.4.3
கண்ணேறு கழித்தல்
மற்றவருடைய
வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு வருந்தி ஏங்குவது மனித இயல்பு. இதனால்
தம் சிறப்புக் குறைந்து விடக்கூடாது என்று கருதி, கண்ணேறு கழிக்க மக்கள்
முயற்சிக்கின்றனர். கண்ணேறு கழித்தலை வழக்கமாகக் கொண்டுள்ள மக்கள்
ஆரத்தி சுற்றித் தீட்டுக் கழிப்பது ஒரு முறை. மின்னொளியாள்
குறத்தில் கண்ணேறு கழிப்பதற்காக ஆரத்தி சுற்றியது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரம்
பெண்கள் ஆலாத்தி யெடுத்தார்கள்
சீரான பொற்கலத்தில் செஞ்சோறும் வெண்சோறும்
காட்டிச் சுழற்றிக் கதிரோன் முன் விட்டெறிந்தார்
'கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது
கண்ணேறு படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வந்த
பழமொழியாகும்.
தன்
வீட்டுக்கு வந்த பஞ்ச பாண்டவர்களையும் துரோபதையையும் ஆலாத்தி எடுத்து,
கண்ணேறு போக்கி வரவேற்புச் செய்ததை ஆரவல்லி
சூரவல்லி கதையில் காணலாம்.
பாண்டவர்கள்
ஐவருக்கும் பாவை துரோபதைக்கும்
எடுத்தார்கள் ஆலத்தி ஏந்திழைகள் ரம்பையைப்போல்
சுண்ணாம்பும் சோறும் சுழட்டி எறிந்தார்கள்
சோறு,
சுண்ணாம்பு முதலியவற்றைக் கலந்து பிண்டமாக்கித்
தலையைச் சுற்றித் தூர வீசி எறிந்தால் கண்படாது
என்று
நம்பினர்.
6.4.4
கனவுகள்
கனவு
காணுதல் மனித இயல்பு. மனிதனின் எதிர்கால நடப்புகள் உருவக அமைப்பில்
கனவுகளாகத் தோன்றுகின்றன என்பது பலரின் நம்பிக்கை. இது உலகில் எல்லா
இடங்களிலும் காணப்படும் உண்மை. கனவு பற்றிய மக்களின் நம்பிக்கையை ஆதரவாகக்
கொண்டு கதைப்பாடல்களில் பல செய்திகள் தரப்பட்டுள்ளன. தான் கண்ட கனவைக்
கொண்டு தனக்கு நல்லது நடக்குமா, நடக்காதா என்று தீர்மானிக்கும் வழக்கம்
உண்டு. தோட்டுக்காரி அம்மன் கதையில் பிள்ளையில்லாமல்
வாடும் மந்திரப்பூமாலை கண்ட கனவுக் காட்சி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
எண்ணாத
எண்ணமெல்லாம் எண்ணியவள் தான் புலம்பி
கண் துயிலும் வேளையிலே கனவுகண்டாள் மாதுமின்னாள்
தெய்வலோகப் பொற்கிளிதான் திருமடியில் வரவுங் கண்டாள்
பாம்பரவம் மடியேறிப் படம் விரித்தாடக் கண்டாள்
நல்ல
கனவு தோன்றினால் நல்லது நடக்கும் என்று நம்பினர்.
மந்திரப் பூமாலை கண்ட கனவு அவளுக்குக் குழந்தை பிறக்கும்
என்பதை அறிவுறுத்தும் தன்மையுடன் அமைகின்றது.
நல்லதை
முன்னறிவிப்புச் செய்யும் கனவுகள் போன்று தீயதை
முற்சுட்டும் கனவுகளும் உள்ளன. கள்ளழகர் அம்மானையில்
அண்ணன்மார் இறந்து விட்டதைக் கனவின் வாயிலாகத் தங்கை
அறிந்து புலம்புவது குறிப்பிடப்படுகிறது.
நான்
பத்தினியாள் கண்டகனா பலித்ததே நம்பருக்கு
முற்றத்துப் பொன் முருங்கை முறிந்து விழக்கண்டேனே
சித்திர மணிவாசல் திருமதிலு மிடியக் கண்டேன்
இந்தக்
கனவு குறிப்பிடும் செய்திகள் அனைத்தும் தீய
நிகழ்ச்சிகளாகும். கதையின் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புச்
செய்யும் வாயில்களாகக் கனவுக் காட்சிகள் பெரும்பாலான
கதைப்பாடல்களில் இடம் பெறுகின்றன. மக்களிடம் பொதுவாகக்
காணப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் கனவுகள்
கதைகளில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
6.4.5
சகுனங்கள்
பெரும்பாலான
மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஓர் இயல்பாகச்
சகுனம் அல்லது நிமித்தம் பார்ப்பதைக் கொண்டுள்ளனர்.
பல்லியின் ஒலி, ஆந்தை அலறல், பூனை குறுக்கே செல்லல்,
வாசற்படி தடுத்தல், தலைப்பாகை தவறி விழல், ஒற்றைப்
பார்ப்பான் எதிரே வரல் முதலானவை தீய நிமித்தங்களாகக்
கருதப்படுகின்றன.
பல்லி
நிமித்தம் பார்ப்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழ்
மக்களிடம் இருந்து வரும் வழக்கமாகும். அது ஒலிக்கும் திசை,
நேரம், முறை ஆகியவற்றைக் கொண்டு நல்லது அல்லது தீயது
என்று தீர்மானிக்கின்றனர். சகுனங்கள்
என்பன
அறிவிப்புக்களேயன்றித் தீயதைத் தடுக்கும் ஆற்றலுடையன
என்று கூறமுடியாது. கோவலன் கதையில் கோவலன்
சிலம்பை
விற்கச் செல்லும்போது பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டதாகக்
கதைப்பாடல் கூறுகிறது.
பல்லி
பலபல வென்னும்
பனை மரத்தி லாந்தை சீறும்
தலைப் பாகை தவறி விழும்
இத்தனைக்
குறிகளாலும் கோவலனைச் செல்லவிடாமல் தடுக்க முடியவில்லை. ஆகையினால்
கோவலன் சாவிலிருந்து தப்பவில்லை. நிமித்தங்கள், தீமை வரவுள்ளது என்பதை
அறிவிக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.
தீய
சகுனங்கள் நேருவது போன்று நல்ல சகுனங்கள்
காணப்படுவதையும் கதைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
மதுரைவீரன் கதைப்பாடலில் வீரனின் வளர்ப்புத்தாய்க்குப்
பிள்ளை இல்லை, பிள்ளை இல்லா வருத்தத்துடன் அவள்
காட்டுக்குள் வரும்போது பல நல்ல சகுனங்களைக்
காண்பதாகக் கதைப்பாடல் கூறுகிறது.
காணாத
நற்குனம் கண்டாளே கண்களிக்க
காகம் வலமாச்சு காடை யிடமாச்சு
மங்கிலியப் பெண்கள் வாழ்த்திவரக் கண்டாளே
..........................................................................
கண்டு மனம் மகிழ்ந்து காரிகையு மப்போது
என்று
கூறும் பாடல் நல்ல குறிகளை
அடுக்காகக்
குறிப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமன்றி
அக்கால
அரசர்கள், செல்வர்கள் போன்றோரும் சகுனம் பார்த்துச்
செயல்பட்டுள்ளனர். நிமித்தங்களைக் கண்டு கணித்துச் சொல்ல
வல்லவர்களும் இருந்துள்ளனர்.
பாண்டவர்
வனவாசம் கதைப் பாடலில் துரியோதனன் கேட்டுக்
கொண்டதற்கிணங்கித் துரோணர் சகுனம் பார்த்துக் கூறுவதைப்
பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
பொல்லாச்
சகுனங்கள் பொருந்தாது மன்னனுக்கு
............................................................................
பாம்பு குறுக்காச்சு பார்ப்பான் எதிரானான்
சாரை குறுக்காச்சு சந்திரன்மேல் பல்லி சொல்லும்
..............................................................................
நெருப்பெடுத்துக் கூன்கிழவி நின்றிழவு தான் கொடுத்தாள்
அத்தனையும்
தீய நிமித்தங்கள். துரியோதனின் அழிவைக் காட்டுவன. தமிழ்ச் சமுதாய மக்கள்
தங்கள் வாழ்க்கையின் ஓர் இயல்பாகச் சகுனங்களைக் கொண்டவர்கள். அவர்களுடைய
நம்பிக்கையை வாய்ப்பாகப் பற்றி இத்தகைய நிமித்தக் குறிப்புக்களை, கதைப்
பாடலாசிரியர்கள் தங்கள் கதைகளில் ஒரு கூறாக இணைத்துள்ளனர். நிமித்தங்கள்
பின்நிகழ்வுகளை முன்னதாகச் சுட்டும் குறிப்புகளாக மக்கள் நம்பினர்.
இந்நிலையில் நிமித்தங்கள் கதைப்பாடல் ஆசிரியர்களுக்கு நல்ல முறையில்
கைகொடுத்து உதவியுள்ளன. |