6.5 நாட்டுப்புற மரபுகள்

ஒருவரால் எடுத்தாளப்பட்டது பலரால் பின்பற்றப்பட்டால் அதற்கு மரபு என்று பெயர். மரபு இரு வகைப்படும். ஒன்று சமுதாய மரபு, மற்றொன்று இலக்கிய மரபு. ஒரு குறிப்பிட்ட இனத்தாரிடம் காணப்படும் பழக்க வழக்கங்களும், சடங்கு முறைகளும் சமுதாய மரபு எனப்படும். ஒரு குறிப்பிட்ட மொழியினர் இலக்கியத்தில் வழிவழியாகப் பின்பற்றி வரும் உத்திகள் இலக்கிய மரபு அல்லது இலக்கிய இயல்பாகும்.

கதைப் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினர்க்கு வழிவழியாக வருபவை. ஒரு கலைஞன் தன் குருவிடமிருந்தோ வேறோரு கலைஞனிடமிருந்தோ கதைப் பாடலை அறிகின்றான். ஆதலின் தான் பாடுவதற்கேற்ப, வேண்டிய கூறுகளை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை விட்டுவிடுகிறான். ஆகையால் சில செய்திகளும் சில நிகழ்ச்சிகளும் வருணனைகளும் திரும்பத் திரும்ப வருகின்றன.

கதைப் பாடல்களில் நாட்டுவளம், பன்னிரண்டு வருடப் பஞ்சம், மலட்டுத் தன்மை, தவமிருத்தல், சோதிடம் பார்த்தல், பிள்ளையை ஆற்றில் விடுதல், தீ நிமித்தம் காணல், போர் வருணனை போன்றவை திரும்பத் திரும்ப வருகின்றன. புராண, இதிகாசக் கதைப்பாடல்களில் இயற்கை கடந்த நிகழ்ச்சிகளைக் காணலாம். இத்தகைய நீண்ட மரபு கொண்டதாகக் கதைப்பாடல்கள் அமைந்துள்ளன. வழி வழியாகப் பாடப்பட்டு வரும் கதைப்பாடல்களில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் இத்தகைய இலக்கிய மரபுகளைக் கதைப்பண்பு முனைப்புக் கூறு அல்லது எடுத்துரைக்கப்படும் கூறு என்று கூறுவர். அவற்றைக் காணலாம்.

6.5.1 கதை நிகழ்ச்சிகளில் ஒருமைப்பாடு

வரலாற்றுக் கதைப் பாடல்களில் வீரதீர சாகசச் செயல் புரிந்த வீரர்களை மக்களின் முன்னர் உயர்ந்தோர்களாக ஆக்கிக்காட்டும் பண்பு கதைப் பாடகர்களிடம் காணப்படுகின்றது. இராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை சரித்திரக் கும்மி, பூலித்தேவன்சிந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல், தேசிங்கு ராசன் கதை போன்ற கதைப் பாடல்கள் வரிகேட்டல் - மறுத்தல் - போர் - வீழ்ச்சி என்ற அடிப்படை ஒற்றுமையைக் கொண்டு அமைந்துள்ளன. இத்தகைய பொருள் கொண்ட கதைப் பாடல்களைக் கதைப் பாடகர்கள் பாடியதற்குக் காரணம் அவர்கள் மக்கள் மனத்தில் பெற்றுள்ள மதிப்பேயாகும். ஆகையால் நிகழ்ச்சி அமைப்பில் ஒருமைப்பாடு காணப்படுகின்றது.

6.5.2 மகாபாரதத்தோடு தொடர்புறுத்தல்

இராமாயணத்தைவிட மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட கதைப் பாடல்களே தமிழகத்தில் மிகுதி. அல்லியரசாணி மாலை, பவளக் கொடிமாலை, புலந்திரன் தூது, பொன்னுருவி மசக்கை, ஏணி ஏற்றம் போன்றவை மகாபாரதத்தில் பெரும்பாலும் காணப்படாதவை. இருப்பினும் மக்களின் மனத்தில் இக்கதைப் பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்ததால் வரலாறு தொடர்பான கதைகளைக்கூட மகாபாரதத்தோடு தொடர்புபடுத்துகின்ற இயல்பைக் காணலாம். கோவை மாவட்டத்தில் பாடப்படும் அண்ணன்மார் சுவாமிகதை ஒரு வரலாற்றுக் கதையாகும். அக்கதையில் வரும் பொன்னர், சங்கர் என்பார்கள் முறையே தருமன், பீமனின் மறுபிறப்புகளாகவும், தங்கை தங்கம் துரோபதையின் மறுபிறப்பாகவும், நகுலன், சகாதேவன், அர்ச்சுனன் இவர்களின் மறு பிறப்புக்களாக அத்தைபிள்ளை, மைத்துனர்களும் தொடர்புறுத்தப் பெறுகின்றனர்.

மகாபாரதத்தோடு தொடர்புறுத்திப் பாடினால்தான் மக்கள் விரும்பிக் கேட்பர் என்ற காரணத்தால் கதைப் பாடலாசிரியன் இவ்வாறு செய்கின்றான் எனலாம்.

6.5.3 நிலைத்த மரபுத் தொடர்கள்

நாட்டார் கதைப்பாடல்களில் மரபுத் தொடர்களையும் (Fixed Epithets) அடுக்குகளையும் திருப்புக்களையும் காணலாம்.

· மரபுத் தொடர்

இராமப்பய்யன் அம்மானையில் இராமப்பய்யனையும் வன்னியையும் ஒரே அடையைக் கொடுத்தே எல்லா இடங்களிலும் கதைப்பாடகர் வருணிக்கிறார். மன்னன் புலிராமன், மன்னன் புலிவன்னி என்றே பாடகர் பாடுகின்றார். மகாபாரதத்தோடு தொடர்புறுத்தப்பட்ட பல்வேறு கதைப்பாடல்களில் இடம்பெறும் ஒரு பாத்திரத்துக்கு ஒரே அடை தரும் தொடரையே கையாளுகின்றனர். சான்று.

தோராவடிவழகி துரோபதை
தக்க புகழுடைய தருமர்
வெற்றி மதயானை வீமன்
தாம முடியான் சகாதேவன்

· அடுக்குகள்

ஒரே கருத்து அடுக்கிச் சொல்லப்படுவதையும் கதைப் பாடல்களில் காணலாம். வரலாறு மற்றும் புராணக் கதைப் பாடலாயினும் இவ்வியல்பைக் காணலாம்.

ஆனைக் கொம்புக்கு கத்தி கட்டினான் நவாப்பு சைதுல்லா
அம்பாரிக் குள்ளே தொட்டில் கட்டினான் நவாப்பு சைதுல்லா

(தேசிங்குராசன் கதை)

தேவேந்திரனோ திருமாலோ என்பாரும்
பூவேந்தனென்பாரும் போசனிவன் என்பாரும்
மன்மதன்கா ணென்பாரும் மதிமந்திரி காணென்பாரும்

(இராமப்பய்யன் அம்மானை)

என்று அடுக்கிச் சொல்லப்படுகின்றது.

· திருப்புக்கள் (Repetitions)

இராமப்பய்யன் கதையில் சண்டைக் காட்சி பின்வருமாறு பாடப்படுகின்றது:

வாண மடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
குறை பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்

அடுத்து, போகலூர்ப் போரையும் இவ்வாறே கதைப் பாடலாசிரியன் பாடுகின்றான்.

பாணமடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
உண்டைபட்டு உருண்டு சோர்ந்து கிடப்பாரும்

என்று சிறிது மாற்றிப்பாடுகிறான். கதைப்பாடல்களில் கருத்துக்கள் ஒரேவரியில் முற்றி நிற்பதால் வரிகளை முன்பின் மாற்றி அமைத்தாலும் பொருள் சிதைவதில்லை.

6.5.4 இயற்கை இகந்த நிகழ்ச்சி

இயற்கை இகந்த நிகழ்ச்சிகளைக் கதைப் பாடல்களில் கலத்தல் அதன் முக்கியமான கூறாகும். கதை மாந்தர்களின் சிறப்பை மிகைப்படுத்திக் காட்டுவதற்காக இத்தகைய நிகழ்ச்சிகளை இணைத்துக் கதை பின்னுவது வழக்கம். இதனைச் சான்று கொண்டு காணலாம்.

கான் சாகிபு மக்களால் மதிக்கப்பட்ட மாவீரன். அவனைப் போரில் வென்று எதிரிகள் பிடித்துத் தூக்கிலிடுகின்றனர். ஆனால் அவன் சாகவில்லை. எவ்வளவு முயன்றும் அவனைச் சாகடிக்க இயலாமல் எதிரிகள் திணறும் பொழுது கான் சாகிபே முன்வந்து அவனுடைய உயிர் எங்கிருக்கிறது என்று கூறுகிறான். தலை முடியால் கட்டப்பட்ட ஒரு நகைப்பெட்டியின் உள்ளே உள்ள நரித் தலையில் தன் உயிர் இருப்பதாகவும், அப்பெட்டியை அறுத்தால் தன் உயிர் பிரிந்து விடும் என்றும் தெரிவிக்கிறான். அவ்வாறு செய்த பின் அவன் உயிர் பிரிவதாகக் கதை முடிகின்றது.

கதைத் தலைவர்கள் மட்டுமல்லாது கொடியவர்களின் உயிர் நிலையைப் பற்றியும் மீவியல் (Supernatural) செய்திகள் கூறப்பட்டுள்ளதாகக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. பால நாகம்மாள் கதையில் கொடிய மந்திரவாதியின் உயிர்நிலை ஏழுகடலுக்கு அப்பால் ஒரு மண் கோட்டைக்குள் இருக்கும் மண்பானை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் கிளிக்குள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மனித ஆற்றலுக்கு அப்பாலும் சில சக்திகள் இயங்குகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஆதரவாகக் கொண்டு தங்கள் கற்பனை ஆற்றலால் இத்தகைய இயற்கை இகந்த நிகழ்ச்சிகளை அளவோடு புகுத்தித் தங்கள் படைப்புகளைக் கதைப் பாடல் ஆசிரியர்கள் தந்துள்ளனர் எனலாம்.

6.5.5 இறந்தோர் எழுதல்

மந்திரக் கதைப் பாடல்கள் சிலவற்றில் இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர். அண்ணன்மார் சுவாமி கதையில் பொன்னர், சங்கர், அத்தை பிள்ளைகள் எல்லாரும் உயிர் பெற்று எழுகின்றனர், நல்லதங்காள் கதையிலும் நல்லதங்காளும் ஏழு குழந்தைகளும் உயிர் பெற்று எழுந்தாலும் ‘’செத்தோரிருந் தோமானால் சீமைக்கு ஆகாது’’ என்று சொல்லி, ‘’வன்னி மரமாகி, வன்னி மரக்கண்ணாகி மாசின்று நின்றார்கள்’’ என்று கதை முடிகின்றது. இவ்வாறு மீண்டும் உயிர்பெற்றெழுந்தவர்களாகக் காட்டப்பட்ட அனைவரும் அவர்கள் செய்த தவற்றுக்காக மடிந்தவர்கள் அல்லர். அநீதியிழைக்கப்பட்டு மடிந்தவர்கள். ஆதலின் உண்மை வெல்லும், நீதி என்றும் அழியாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு நாட்டுப்புறக் கலைஞன் பாடுகின்றான்.

6.5.6 தொகுத்துக் கூறல்

கதைப் பாடல்களில் கதை பாடி வரும் பொழுதே அப்போதைக்கப்போது அதுவரை பாடிய முன் கதையைச் சுருக்கிப் பாடும் மரபினைக் காணலாம். அண்ணன்மார் சுவாமிகதை, அல்லியரசாணி மாலை மற்றும் ஏனைய கதைப்பாடல்களிலும் இவ்வியல்பைக் காணலாம்.

இவ்வாறு பல மரபுகள் கதைப்பாடல்களில் நிறைந்துள்ளன. அவை இம்மரபுகளைத் தொடர்ந்து காத்தும் வருகின்றன.