மரபு வழியைப் பின்பற்றி யாரேனும் ஒருவரால்
படைக்கப்பட்டு
வாய் மொழியாகப் பரவி, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக்
கொண்டதாக - மக்களின் கூட்டுப்படைப்புக்களாக - மாறுபவை
நாட்டுப்பாடல்கள். இவை மக்கள் தம் பட்டறிவின் பதிவேடுகள்;
மழைநீர் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நிறத்திலும் குணத்திலும்
மாறுபடுவது போல், வழங்கப்படும் மக்களின் வாழ்க்கைக்கு
ஏற்ப - பாடுபவனின் தன்மைக்கு ஏற்ப - காலத்திற்கு ஏற்ப -
நிலத்திற்கு ஏற்ப - மாறுபடுபவை; பயன்பாட்டிற்காக
உருவாக்கப்படுபவை; பயன்படும் நிலையில் வழக்கில்
இருப்பவை; பயன்பாடு இல்லாதபோது உருமாறுபவை அல்லது
உதிர்பவை. ஏட்டிலக்கியங்கள் சொன்னவற்றையும்,
சொல்லாதவற்றையும் சொல்ல மறுத்தவற்றையும்
பொருண்மையாகக் கொண்டவை. மக்கள் வாழ்க்கையை உள்ளது
உள்ளபடி படம் பிடித்துக் காட்டும் வாழும் இலக்கியமாகத்
திகழ்பவை. தோன்றிய காலம், வழங்கி வந்த காலம், வழங்கும்
காலம் என்று முக்காலத்தையும் பிரதிபலிப்பவை. நாட்டுப்புறப்
பாடல்களை இலக்கியச் சுவைக்காக விரும்புவோர் பலர்.
எளிமையான எதார்த்தமான பாடல்களை
யார்தான்
விரும்பமாட்டார்கள்? நாட்டுப்புறப் பாடல்களைச் சிறந்த
ஆய்வுத்தரவுகள் என்ற அடிப்படையில் விரும்புவோர் பலர்.
ஏனெனில் நாட்டுப்புறப் பாடல்கள் பல்வேறு துறையினருக்கான
தகவல் களஞ்சியம். நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி இரண்டு
பாடங்கள் உள்ளன. இப்பாடத்தில் நாட்டுப்புறப் பாடல்களின்
தொன்மை அவற்றின் சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணிகள்,
அவற்றில் நிகழ்ந்துள்ள ஆய்வுகள், நாட்டுப்புறப் பாடல்
வகைகள், முதலில் சுட்டப்படும். மேலும் நாட்டுப்புறப் பாடல்
வகைகளுள் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், குழந்தை
வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்
பாடல்கள் முதலியனவும் விளக்கப்படும். எஞ்சிய பாடல்
வகைகளும் பாடல்களைப் பற்றிய பிற செய்திகளும்
இரண்டாவது பாடத்தில் இடம் பெறும்.
|