நாட்டுப்புறப் பாடல்கள் பயன்பாட்டு இலக்கியமாகத்
திகழ்பவை.
வாழ்க்கையின் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சூழல்களில்
பல்வேறு நோக்கங்களுக்காகப் பாடப்படுபவை. தலைமுறை
(Generation) தலைமுறையாக வழங்கப்பட்டு வருபவை. காலத்
தேவைக்கேற்பப் புதிதாகவும் படைக்கப்பட்டு மக்களிடையே
பரவி, பல்வேறு வடிவங்களைக் கொண்டதாக மாறி,
கூட்டுப்படைப்பாக உலா வருபவை. நாட்டுப்புறப் பாடல்களில்
வாய்மொழிப் பயணத்தின் ஒருசில கணங்களையே நாம்
எழுத்தில் பதிவு செய்கிறோம். அதே பாடல்கள் வாய்மொழிப்
பயணத்தின் வெவ்வேறு வடிவங்களையும், வெவ்வேறு
பொருண்மைகளையும் கொண்டதாக மாறிக்கொண்டே இருக்கும்
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4.1.1
காலம்
தற்போது மக்களிடம் வழங்கப்பட்டு வரும் நாட்டுப்புறப் பாடல்களின் காலத்தைத்
துல்லியமாகக் கூற இயலாது. மிகப் பழங்காலத்தில் தோன்றி இன்றும் வாய்மொழி
வழக்கில் உள்ள பாடல்களும் வழக்கத்தில் இருக்கும். ஆயினும் அவை காலத்திற்கேற்ப
மாறியே காணப்படும். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம், இரண்டாம் உலகப்போர்,
பஞ்சங்கள், இன்றைய அரசியல் வாதிகள், நடிகர்கள் பற்றியெல்லாம் பாடல்கள்
பாடப்படுகின்றன. எனவே இன்று மக்களிடையே வழங்கி வரும் பாடல்கள் பல்வேறு
காலக்கட்டங்களைப் பிரதிபலிப்பவையாகக் காணப்படுகின்றன. அவை அவ்வப்போது
புதிதாகத் தோன்றிக் கொண்டும், மாறிக்கொண்டும், இருக்கின்றன என்றே கருதமுடிகிறது.
4.1.2
கற்றுக் கொள்ளல்
நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாக
வழிவழியாகப்
பரவிவருகின்றன. பாடுவதைக் கேட்டு அல்லது எழுதி
வைத்திருப்பதைப் படித்துப் பாடல்களைக்
கற்றுக்
கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் பாடும் போது சூழலுக்கேற்ப
மாற்றங்களைச் செய்து கொள்கின்றனர். இடையறாமல் நிகழும்
இத்தகைய நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு உயிர்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மக்களிடம் பாடல்களைச்
சேகரிக்கச் சென்றபோது ஒருவர் ஒரு பாடலைப் பாடத்
தொடங்கினால் ஏனையோர் அதனை ஊன்றிக் கவனிப்பதைக்
காணமுடிந்தது. முதியவர்கள் இளையவர்களைப் பாடுமாறு
தூண்டுவதையும் அவர்கள் ஏதேனும் தவறு செய்யும் போது
அதனை ஊன்றிக் கவனிப்பதையும் காண முடிந்தது. பாடல்
பாடத் தொடங்கு முன் ’னன்னானே னானேனனே’ என்பது
போன்ற இசைக் குறிப்புக்களைப் பாடுமாறு முதியவர்கள்
இளையவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இத்தகைய
போக்கினால் மரபு வழி இசையைப் பாதுகாக்கும் முறையை
அறிந்து கொள்ள முடிகிறது.
4.1.3
இன்றைய நிலை
தமிழக மக்களின் வாழ்க்கையில் நாட்டுப்புறப்
பாடல்கள்
பெரும்பங்கு வகித்து வந்திருக்கின்றன. வாழ்க்கையின் அனைத்து
நிலைகளிலும் பாடல்கள் பாடப்பட்டு வந்துள்ளன. இன்றைய
நிலையில் தொழில்கள் எந்திரமயமாகி வருகின்றன. ஏர், ஏற்றம்,
அறுவடை, கதிரடி, மீன் பிடிப்பு போன்ற பல்வேறு
தொழில்களில் எந்திரங்கள் புகுந்துவிட்டன.
எனவே
அச்சூழல்களில் பாடப்பட்டு வந்த பாடல்கள் இன்று வயது
முதிர்ந்தோர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்து
வருகின்றன. இப்பாடல்கள், வேறு சூழல்களில் தேவைக்கேற்ற
மாற்றங்களுடன் பாடப்படுகின்றன, பாடப்படும் புதிய சூழல்கள்
உருவாகி அதற்கேற்பப் பாடல்களும் உருவாகி வருகின்றன.
கானாப்பாடல்களும், மேடைகளில் பாடப்படும் நாட்டுப்புறப்
பாடல்களும் இதற்குச் சான்றுகளாக உள்ளன., பாடப்படும்
பழைய சூழல்கள் மறைந்தாலும் அப்போது பாடப்பட்டு வந்த
பாடல்கள் புதிய சூழலுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாவதுமான
போக்குகள், இன்றைய நாட்டுப்புறப் பாடல்களின் பொருள்,
வடிவம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி
வருகின்றன என்று கூறினால் மிகையாகாது.
|