என்னும் அகநானூற்றுப்பாடல் தொடரில் பழமொழி என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக்
காண்க. இதே பெயரில் பழமொழி நானூறும் உருவாக்கப்பட்டுள்ளது. பழமொழி
நானூறு நூலைத் தொடர்ந்து தோன்றிய நீதி சதகங்களிலும், நாலடியார், இன்னாநாற்பது
முதலான நீதி நூல்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பர்
பாடிய பழமொழிப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும்
ஒரு பழமொழியைப் பயன்படுத்துகின்றார். இவையெல்லாம் நமக்கு கிடைக்கும்
பழமொழிகளின் வரலாற்றுப் பதிவுகள்.
•
பாதுகாப்பு
பழமொழிகளைச் சேகரித்து அவற்றை உள்ளது உள்ளபடி பாதுகாக்கவேண்டும் என்ற
உணர்வு முதன் முதலில் அயல் நாட்டிலிருந்து மதத்தைப் பரப்புவதற்கெனத்
தமிழகத்திற்கு வந்த பாதிரியார்களையே சாரும். மக்களைப் புரிந்து கொள்ளவும்
மக்களோடு நெருங்கிப் பழகவும் மிகுதியாக உதவக் கூடிய நாட்டுப்புற இலக்கிய
வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச் சேகரித்து அவற்றின்
ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு அவற்றை வெளியிட்டனர். பீட்டர்
பெர்சிவல் (Peter Percivel) 1842இல் 1873 பழமொழிகளைக் கொண்ட
பழமொழி அகராதியை ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளியிட்டார். இவரே தமிழில்
பழமொழிகளைத் தொகுத்து ’உள்ளது உள்ளபடி’ வெளியிட்டதில் முதன்மையானவர்.
ஜான் லாசரஸ் 1894இல் தமிழ்ப் பழமொழி
அகராதியைச் சுருக்கமான ஆங்கில விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில்
9417 பழமொழிகள் உள்ளன. ஹெர்மான் ஜென்ஸன்
1897இல் தமிழ்ப் பழமொழிகளின் வகைப்படுத்தப்பட்ட தொகுப்பு என்னும் நூலை
வெளியிட்டார். தமிழ்ப் பழமொழித் தொகுப்பாளர்களில் இவர் ஒருவரே அவை
வழங்கப்படும் சூழல் பற்றிய சிந்தனையோடு பழமொழிகளைத் தொகுத்தவர் என்று
தே.லூர்து குறிப்பிடுகிறார். மேலும் அயல் நாட்டினர் வெளியிட்ட பழமொழித்
தொகுப்புகளில் காணப்படும் குறைபாடுகளையும் இவர் சுட்டியுள்ளார்.
•
பதிப்புகள்
தமிழகத்திலிருந்து செல்வக் கேசவராய முதலியார் என்பவர் இணைப் பழமொழிகள்
(Parallel Proverbs) என்னும் தலைப்பில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ்
என்னும் மொழிபெயர்ப்புடன் 1903ஆம் ஆண்டு பழமொழித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான பழமொழித் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
கி.வா. ஜகந்நாதன் சுமார் இருபதாயிரம் பழமொழிகள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலங்களில் வெளிவந்த பழமொழித் தொகுப்புகள் அனைத்தும் முன்னர் வெளிவந்த
பழமொழித் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பழமொழிகளையும் கொண்டதாகவே
அமைந்துள்ளன. பழமொழி அல்லாத சில மரபுத் தொடர்களையும், கதைத் துணுக்குகளையும்,
இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளாகக் கருதி அவற்றைப் பழமொழித் தொகுப்புகளில்
சேர்த்துள்ள போக்கினைத் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை வெளிவந்த
அனைத்துத் தொகுப்புகளிலும் காண முடிகின்றது.
•
ஆய்வுகள்
தமிழ்ப் பழமொழிகளை ஆராய்ந்தவர்கள் மிகக் குறைவு. சாலை. இளந்திரையன்,
தே. லூர்து, வ. பெருமாள், நா. வானமாமலை போன்ற ஒருசிலரே தமிழ்ப் பழமொழிகளை
விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள். இவர்களுள் தே. லூர்து பழமொழிகளை
அவை வழங்கப்படும் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு நுணுக்கமாக ஆராய்ந்தார்.
மேலும் பழமொழிகளின் அமைப்புகளையும் இவர் ஆராய்ந்து பிற நாட்டுப் பழமொழிகளிலிருந்து
தமிழ்ப் பழமொழிகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் சுட்டியுள்ளார்.
நா.
வானமாமலை திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப்
பழமொழிகள் - ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையும்
குறிப்பிடத் தகுந்தது. இக்கட்டுரையில் திரிபுரி உழைக்கும் மக்களது
பழமொழிகளுக்கும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் மிக
நெருங்கிய ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.
|