பழமொழிகளும் கதைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவையாக
உள்ளன. சில பழமொழிகள் கதையை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். அந்தப்
பழமொழியை ஒருவர் பயன்படுத்தும் போது அதனைக் கேட்பவர் அந்தப் பழமொழிக்குப்
பின்னால் உள்ள கதையையும், மனதில் கொள்கிறார். பழமொழிக்
கதைகள் என்ற தனி நூலை சு. சண்முக சுந்தரம் (1998) வெளியிட்டுள்ளார்.
கதைகளிலிருந்து பழமொழிகள் தோன்றியிருக்கின்றன என்பதையும் கதையின் இறுதியில்
அதன் சாரத்தைப் பழமொழிபோல் சுருக்கிக் கொள்வதுண்டு என்பதையும் அறிந்து
கொள்ள முடிகிறது. கதையோடு தொடர்புடைய பழமொழிகளுக்கு இரண்டு சான்றுகள்
சு. சண்முகசுந்தரம் நூலிலிருந்து கீழே தரப்படுகின்றன.
5.5.1.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
இது ஒரு பழமொழி. வல்லவனுக்குக் கிடைக்கக்
கூடிய சிறு
துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாகச் சிறந்த
ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது இந்தப் பழமொழியின்
நேர் பொருள். இப்பொருளை உணர்த்துவதற்கான சூழல்களில்
இந்தப் பழமொழி பயன்படுத்தப்படும். இந்தப் பழமொழிக்குப்
பின்னால் உள்ள கதை வருமாறு.
இராமரும்
சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம்
முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு
வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக்
கொடுக்க வேண்டும்.
காட்சி
ஒரு
நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க.
ஒரு மரத்தடியில் சீதை இராமனது
மடியில் தலை சாய்ந்திருந்தாள்.
அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது
அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து
மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டு என்ற ஆசை
தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில்
அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று
துடித்தான்.
அவளது
மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி
மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள்.
இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில்
மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக்
கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண்
துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை
அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று
கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று
சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு
பழமொழி ஆயிற்று.
5.5.2
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை
‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’
இந்தப்
பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது.
தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும்
ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும்.
இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
“ஒருவர்
நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன்
தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு
தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து
கொள்வார்.
ஒரு
நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில்
கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான்
வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை - நெல் கொட்டப்
பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார்.
தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச்
சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன்
கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான்.
வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி
உடனே
மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை”
என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில்
இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று
சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே
என்று
குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத்
தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பழமொழிக் கதைகள்
வழக்கத்தில் உள்ளன. அவை பேச்சுகளை அர்த்தமுள்ளதாகவும்
ஆழமாகவும் ஆக்குகின்றன என்பதில் ஐயமில்லை. |