1.5 மந்திரச் சடங்குகள் (Magic Rituals)

நடைமுறை வாழ்வில் சில பயன்களைப் பெறுவதற்காகவும் எதிரிகளைப் பலவீனப்படுத்தவும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் போலச் செய்தல் என்னும் செயல்பாடே மந்திரம் எனப்படுகிறது. பண்டைக் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்து கொள்ளாத மனிதன் தன் மன ரீதியான அச்சத்தினைப் போக்கவும் இயற்கை ஆற்றலைக் கட்டுப்படுத்திப் பயன்பெறவும் உருவாக்கப்பட்டவையே மந்திரம் தொடர்பான சடங்குகள். இதனை மாந்திரீகம், பில்லி, சூன்யம், ஏவல் என்றும், இதனை நிகழ்த்துவோரைப் பூசாரி, மந்திரவாதி, சூன்யக்காரன் என்றும் கூறுவதுண்டு. நாட்டுப்புற மக்கள் இத்தகைய மந்திரச் செயல்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இவை தொடர்பான சடங்குகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மந்திரம் அதன் பயன்பாட்டு அடிப்படையில் தூய மந்திரம் (White Magic), தீய மந்திரம் (Black Magic) என்று வகைப்படுத்தப் படுவதுண்டு. தனிமனித நலனுக்கோ அல்லது ஒரு சமூக நலனுக்கோ பயன்படுத்தப்படுவது தூய மந்திரமாகும். தீய ஆவிகளை, தீங்கு விளைவிக்கும் சக்திகளை எதிரியின் மேல் ஏவி விடுதல், புதையல் எடுத்தல், பெண்களை வசியம் செய்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவது தீய மந்திரமாகும். பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை தீய மந்திரச் சடங்குகளில் அடங்கும். தூய மந்திரச் சடங்குகளாக இருந்தாலும் சரி, தீய மந்திரச் சடங்குகளாக இருந்தாலும் சரி பலியிடுதல் என்பது (சில சடங்குகளில் நரபலியும் கொடுக்கப்படுவதுண்டு) தவறாமல் இடம்பெறும். நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி காணலாம். மலையாள மாந்திரீகம் வலிமையுடையதாக நம்பப்படுவதுண்டு.

இதுவரை சடங்குகள் வகைப்படுத்தப்பட்டு அவை எந்த நோக்கத்திற்காக, எத்தகைய சூழலில், எந்தெந்த நிலைகளில் நிகழ்த்தப் படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது. இதன்வழி சடங்குகள் தனி மனித மன நிலையிலும், கூட்டு மன (Society) நிலையிலும் நிகழ்த்தப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.