2.5 சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்

மக்கள் தெய்வங்களுக்குச் செய்யும் சடங்குகளும், வழிபாட்டு நெறிகளும் வழிபாட்டு முறை எனப்படும். சிறுதெய்வ வழிபாடுகள் எந்தவித மதக் கோட்பாடுகளுக்கும் உள்ளடங்காமல் ஆகம விதிகளுக்கு உட்படாமல் சம்பிரதாய (காலங் காலமாகச் செய்யப் பட்டுவரும்) வழிபாட்டு முறைகளைப் பின்பற்றாமல் கிராம மக்கள் விரும்பிய வண்ணம் நிகழ்த்தப் படுகின்றன. சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தெய்வங்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். ஒவ்வொரு தெய்வமும் தனக்கெனத் தனித்த வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும்.

சிறுதெய்வ வழிபாடுகளில் தெய்வங்களை அலங்கரித்தல், பூசை செய்தல், படையல் போடுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல், ஆடியும் பாடியும் துதித்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாக அமைகின்றன.

2.5.1 பெரிய கும்பிடு

ஊர்த் தெய்வங்களுக்குக் கிராம மக்கள் எடுக்கும் திருவிழா பெரிய கும்பிடு எனப்படும். பெரிய கும்பிடை அடிப்படையாகக் கொண்டே சடங்குகளும், நேர்த்திக் கடன்களும் மேற்கொள்ளப் படுகின்றன. கிராமங்களில் பஞ்சம், வறட்சி, நோய்த் தொற்று போன்றவை ஏற்பட்டால் பெரிய கும்பிடு நடத்தப்படுகிறது.

சிறு தெய்வங்களுக்கான வழிபாடு ஆண்டிற்கு ஒரு முறையோ, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையோ, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ நடைபெறும். இது பெரிய கும்பிடு, சாமி கும்பிடு, ஊர்த் திருவிழா, கொடை விழா, பெரிய நோம்பி என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும்.

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பெரிய கும்பிடு வழிபாட்டு நடைமுறைகளைக் கீழ்க்காணுமாறு பகுத்துரைக்கலாம்.

பெரிய கும்பிடு வழிபாட்டு முறைகள்

ஆயத்த நிலைச் செயல்பாடுகள்

வழிபாட்டு நிலைச் செயல்பாடுகள் * நிறைவு நிலைச் செயல்பாடுகள்

சாமி உத்தரவு கேட்டல் கரகமெடுத்தல் பள்ளயம் பிரித்தல்
சாமி சாட்டுதல் சிலையெடுத்தல் சாமிப் பெட்டியைக் கோயிலில் வைத்தல்
காப்புக் கட்டுதல் சாமிப் பெட்டி தூக்குதல்
கம்பம் நடுதல் சக்திக்கெடாய் வெட்டுதல் வரவுசெலவு பார்த்தல்
முளைப்பாரி போடுதல் பொங்கல் வைத்தல்
வரிவசூல் செய்தல் நேர்த்திக் கடன் செலுத்துதல்
வேப்பிலைத் தோரணம் கட்டுதல் முளைப்பாரி எடுத்தல்

மஞ்சள் நீராடுதல்
சிலை அழிப்பு
கலை நிகழ்ச்சிகள்

(பள்ளயம் பிரித்தல் = கோயில் வழிபாட்டிற்கு வரி கொடுத்தோருக்குச் செய்யும் மரியாதை)

பெரிய கும்பிடிற்காகச் செய்யப்படும் தொடக்க நிலைச் செயல்பாடுகள்.

பெரிய கும்பிடில் வழிபாட்டு நிலையில் நடைபெறும் சடங்குச் செயல்பாடுகள்.

* பெரிய கும்பிடில் சடங்கு முடிந்த நிலையில் நிறைவாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்.

இந்தப் படிநிலைகள் சிறுதெய்வ வழிபாடுகளில் தவறாது அமையும்.

2.5.2 வழிபாட்டுச் சடங்குகள்

வழிபாட்டுச் சடங்குகள் சிலவற்றை இங்கு விளக்கிக் காண்போம்.

சக்திக் கரகமெடுத்தல்

கரகத்தில் சாமியை எழச்செய்து கோயிலில் கொண்டுவந்து வைக்கும் சடங்கே ‘சக்திக் கரகம் எடுத்தல்’ எனப்படும். இதன் பின்னரே வழிபாடுகளும் சடங்குகளும் நடைபெறும். சிறுதெய்வங்களுக்குப் பெரும்பாலும் நிலையான தெய்வச் சிலைகளோ வேறு வகையான படிமங்களோ அமைக்கப் படுவதில்லை. கோயில் என்ற பெயரில் மேடை மட்டுமே இருக்கும். பெரிய கும்பிடு நடைபெறும் காலத்தில் தெய்வத்திற்குச் சக்திக் கரகம் எடுக்கப்படும். பூசைகள் நிகழ்த்துவதன் மூலம் அக்கரகத்தில் தெய்வம் எழுந்தருளும். அதுவே தெய்வமாகவும் வணங்கப்படும். மக்கள் அளிக்கும் படையலையும் சடங்குகளையும் அத்தெய்வம் ஏற்றுக் கொள்ளும்.

சாமிப்பெட்டி தூக்குதல்

தெய்வத்திற்குரிய ஆபரணங்கள், உடைகள், பூசைமணி, தாம்பூலம் போன்ற பொருட்கள் ஒரு பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும். இதுவே, சாமிப்பெட்டி எனப்படும். இது பிரம்புப் பெட்டியாகவோ அல்லது மரப் பெட்டியாகவோ இருக்கும். இப்பெட்டி தெய்வமாகவே மக்களால் வணங்கப்படும். பெரிய கும்பிடின் போது பெட்டிக்கும் பூசைகள் செய்யப்படும். பெட்டியில் உள்ள பொருள்களைக் கொண்டு சாமி அலங்கரிக்கப்படும். பெட்டி தூக்கும் உரிமையும் பாதுகாக்கும் உரிமையும் மரபு வழியாக மக்களுக்கு வழங்கப்படும்.

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பலியிடுதல்

சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடலும் மாமிசப் படையலும் முக்கிய இடம் வகிக்கின்றன. பலியிடல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஒரு சடங்கு முறையாகும். ஓர் உயிரைக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் காப்பாற்றப் படுகிறது; பாதுகாக்கப்படுகிறது; வளம் பெறுகிறது என்ற நம்பிக்கையே பலியிடலுக்கு அடிப்படையாக அமைகிறது. பலியிடலின் வாயிலாக இயற்கையையும் தெய்வங்களையும் திருப்திப் படுத்தவும் வசப்படுத்தவும் முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். தெய்வங்களுக்கு ஆட்டுக் கிடாய் பலியிடப் பட்டதையும் குருதி கலந்த உணவு படைக்கப் பட்டதையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சிறு தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி, எருமை போன்றவை பலியிடப் படுகின்றன. இப்பலிப் பொருட்களெல்லாம் ஆண் இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கு என்ன காரணமென்று உங்களால் உணர முடிகிறதா? ‘பெண்ணினம் உற்பத்திக்கும் பெருக்கத்திற்கும் அவசியம்’ என்பதால் பலியிடப்படுவது இல்லை என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

2.5.3 நேர்த்திக் கடன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

‘எது நடந்தாலும் அது தெய்வங்களின் மூலமே நடைபெறுகிறது’ என்று நம்பும் வழக்கம் கிராம மக்களிடம் மிகுதியாக இருந்து வருகிறது. இதனால் பலவிதமான வேண்டுதலை இறைவன் முன் வைக்கி்ன்றனர். அவ்வேண்டுதல் நிறைவேறினால் அதற்குப் பிரதிபலனாக நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

நம்பிக்கைகளுக்கும், நேர்த்திக் கடன்களுக்கும் மிகுந்த தொடர்புண்டு. தெய்வங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நேர்த்திக் கடன்களும் அளிக்கப்படுகின்றன.

1) உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்

2) பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்

3) உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்

என்றவாறு நேர்த்திக் கடன்களைப் பலவாறு பகுத்துக் காணமுடியும்.

நேர்த்திக் கடன்

ஆண் தெய்வம்

பெண் தெய்வம்

கால்நடை அளித்தல்

பலியிடுதல்

பலியிடுதல்

மாவிளக்கு எடுத்தல்

குருதி கொடுத்தல்

ஆயிரங்கண் பானை எடுத்தல்

காவடி எடுத்தல்

மடிப்பிச்சை ஏந்துதல்

பால்குடம் எடுத்தல்

அங்கமளித்தல்

அலகு குத்துதல்

தீச்சட்டி எடுத்தல்

அரிவாளின் மேல் நடத்தல்

சேத்தாண்டி வேடமிடுதல்

ஆணிச் செருப்பு அணிதல்

முளைப்பாரி எடுத்தல்

மார்பில் கத்தி போடுதல்

பூக்குழி இறங்குதல்

உருள்தண்டம்

தொட்டில் கட்டுதல்

 

ஆண் தெய்வங்களுக்கான நேர்த்திக் கடன்கள் வன்மைத் தன்மை உடையதாகவும், பெண் தெய்வத்திற்கான நேர்த்திக் கடன்கள், மென்மைத் தன்மை உடையதாகவும் அமைந்திருப்பதை இப்பட்டியலின் வழி உணரலாம்.