3.0 பாட முன்னுரை

‘நாட்டுப்புறவியல் மரபுகள்’ என்னும் தொகுதியில் மூன்றாவது பாடமாக ‘நாட்டுப்புற மருத்துவம்’ இடம் பெறுகிறது. நாட்டுப்புறவியல் கல்விப் புலத்தில் ‘பொருள்சார் பண்பாடு’ (Material Culture) என்ற பிரிவில் நாட்டுப்புற மருத்துவம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த பழமொழி. நோயற்ற வாழ்வு பெற மனிதனிடம் தோன்றிய சிந்தனை வெளிப்பாடே நாட்டுப்புற மருத்துவமாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது. மனிதன் உடல்நலம் பேண ஆரம்பித்த காலந்தொட்டு இன்றுவரை எளிய முறையில் நம்பிக்கையோடு இம்மருத்துவம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்துவரும் நாட்டுப்புற மருத்துவ முறைகள், அவற்றால் தீர்க்கப்படும் நோய்கள், மருத்துவம் குறித்த நாட்டுப்புற வழக்காறுகள், மருத்துவம் சார்ந்த நம்பிக்கைகள், நாட்டுப்புற மருத்துவத்தின் நிலைபேற்றிற்கான காரணங்கள் ஆகியவை இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.