3.1 நாட்டுப்புற மருத்துவம்

தன்னிகரில்லாத் தமிழ் மருத்துவம் நாட்டுப்புற மருத்துவமாகும். இது நாட்டுப்புற மக்களின் அறிவில் உதித்து, அனுபவத்தில் தழைத்து, வாழையடி வாழையாக, வாய்மொழியாக வாழ்ந்துவரும் மருத்துவ முறையாகும். பரம்பரையாகவோ அனுபவத்தின் மூலமாகவோ கற்ற மருத்துவ முறைகளைப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) ஆகும். அறிவியல் அடிப்படை ஏதுமின்றிச் சில குறிப்பிட்ட இனத்தாராலோ (Caste) மரபு வழி மருத்துவர்களாலோ பரம்பரையாகப் பின்பற்றப் பட்டுவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் என்றும், நாட்டுப்புற மக்கள் தமக்குள்ள நோய்களைத் தீர்க்கக் கையாளும் எளிய மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் என்றும், இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய மக்களின் பட்டறிவிலிருந்து தோன்றியது நாட்டுப்புற மருத்துவம் என்றும், நாட்டுப்புற மருத்துவம் குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேற்கூறிய கருத்துகளின் வழி ‘இயற்கை சார்ந்த பட்டறிவின் துணை கொண்டு நாட்டுப்புற மக்களால் எளிய முறையில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம்’ என விளங்கிக் கொள்ளலாம்.

3.1.1 நாட்டுப்புற மருத்துவத்தின் தொன்மை

நாட்டுப்புற மருத்துவம் மிகத் தொன்மையானதாகும். மனித இனம் தோன்றிய அன்றே இம்மருத்துவமும் தோன்றிவிட்டது என்றே கூறலாம். ஆதி காலந்தொட்டே ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனித சமூகம் தனக்கென ஒரு தனித்த மருத்துவ முறையைக் கைக்கொண்டு அதனை ஒரு சமூக நிறுவனமாகக் (Social Institution) கருதி நடைமுறைப் படுத்தி வந்திருக்கின்றது. இயற்கை மூலிகைகளின் வளம் அறியப்பட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக அவை உரிய முறையில் பயன்படுத்தப் பட்டும் வந்துள்ளன. தாயின் கருப்பையில் உருவான நாள் தொட்டு, பிறப்புத் தொடங்கி இறப்பு வரை மனித வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக இந்நாட்டுப்புற மருத்துவம் விளங்கி வருகிறது என்பதை நாம் அறிவோம். மிகப் பழமையான இம்மருத்துவ முறையை இன்றளவும் தொடர்ந்து மக்கள் பின்பற்றி வருவது நாட்டுப்புற மருத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறலாம். செவி வழியாகப் பரவியும் ஓலைச் சுவடிகள், ஏட்டு இலக்கியங்கள் வாய்மொழி வழக்காறுகள் போன்றவற்றில் பதிவு செய்து செயல்முறைப் படுத்தப்பட்டும் நாட்டுப்புற மருத்துவம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.