3.3 சித்த
மருத்துவம் (Siddha Medicine)
|
நாட்டுப்புற மருத்துவத்திலிருந்து வளர்ந்த இயற்கை மூலிகை மருத்துவ முறையாக
விளங்குவது சித்த மருத்துவம்
ஆகும். சித்த மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம் என்று கலைக்களஞ்சியம்
சுட்டுகிறது. தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை அனைத்துத்
தரப்பு மக்களாலும் பின்பற்றத் தக்கதாக, மிக எளிய மருத்துவ முறையாக விளங்கி
வருகிறது. மூலிகை மருத்துவமாக இது உள்ளதால் தீங்கற்றதாகவும், சிக்கனமானதாகவும்,
பக்க விளைவுகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. எனவே நாட்டுப்புற
மக்களால் பெரிதும் விரும்பப்படும் மருத்துவ முறையாகச் சித்த மருத்துவம்
விளங்குகிறது. நோய் உடலை மட்டுமல்ல மனத்தையும் சார்ந்தது என்பதை உணர்த்தியதும்
சித்த மருத்துவமே ஆகும்.
|
3.3.1 சித்தர்கள் |
சித்த மருத்துவ முறை சித்தர்களால் உருவாக்கப் பட்டதாகும். சித்த மருத்துவத்தை
உலகிற்கு அறிமுகப் படுத்தியோர் இச்சித்தர்களே. சித்த மருத்துவம் சிவபெருமானால்
சித்தர்களுக்கு அருளப்பட்டது என்றும் கூறப்படுவது உண்டு. சித்தி என்பது
அட்டமா சித்திகளைக் குறிக்கும். அதாவது எட்டு வகையான அதீத இயற்கை ஆற்றல்களைக்
குறிப்பதாகும். இத்தகைய அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.
பதினெண் சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகவும்,
அவர்களே சித்த மருத்துவத்தை அறிமுகப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள்
அதீத ஆற்றல் கொண்டவர்கள் என்றும், மூலிகைகளின் மூலம் இரும்பு, செம்பு,
போன்ற உலோகங்களை வெள்ளி, தங்கமாக்கும் திறன் பெற்றவர்கள் என்றும், ஆயுளை
நீட்டிக்கும் மந்திரம் அறிந்தவர்களென்றும் நம்பப்படுகின்றனர். ‘உடம்பார்
அழியின் உயிரார் அழிவர்’ என்ற தத்துவத்தை எடுத்துரைத்த திருமூலர்
முதல் சித்தராகக் கருதப்படுகிறார்.
|
ஓலைச் சுவடி
|
சித்தர்கள் சித்த மருத்துவ முறைகளைப் பாடல் வடிவில் மறைபொருளாக ஓலைச் சுவடிகளில்
எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இந்த ஓலைச் சுவடிகளைப் பின்பற்றியே இன்றும்
சித்த மருத்துவ முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தின்
தனித் தன்மைகளை இங்கு விளக்கமாகக் காண்போம்.
|
3.3.2
சித்த மருத்துவ முறைகள் |
சாதாரண மக்களாலும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்த எளிய மருத்துவ முறையே
சித்த மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் உண்டாவதற்கான காரணங்களைத்
தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, மனித உடல் வாதம்,
பித்தம், கபம் என்னும் மூன்று
நிலைகளால் ஆனது என்றும், இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக
இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன என்பதும்
சித்தர்களின் கருத்தாகும்.
|
இதனையே,
|
மிகினும்
குறையினும் நோய்செய்யும் மேலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள் : 941)
|
என்கிறார்
வள்ளுவர்.
|
மருத்துவ
நூலோர் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் ஆகிய
மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும்
என்பதே வள்ளுவரின் கருத்துமாகும். மேலும் அவர் மருந்து என்னும்
அதிகாரத்தில் (95) மருத்துவம் குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
|
வாதம்
|
சித்த
மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு
ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும்.
|
பித்தம்
|
பித்தம்
என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக
இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு
எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும்.
|
கபம்
|
கபம்
என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும்.
|
இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும்,
1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள்
கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும்
குறிப்பிடப்படுகின்றன.
|
3.3.3
சித்த மருத்துவச் சிகிச்சை முறை |
நாடித் துடிப்பின் மூலம் (Pulse Test) நோயின் தன்மையைக் கண்டறிவது
சித்த மருத்துவ முறையின் தனிச் சிறப்பாகும். நோயுற்றவர் ஆணாக இருந்தால்
அவரது வலது கையிலும் பெண்ணாக இருந்தால் இடது கையிலும் நாடித் துடிப்பைச்
சோதித்துப் பார்க்கும் வழக்கம் காணப்படுகிறது. நாடித் துடிப்பை வாத நாடி.
பித்த நாடி என்று பிரித்தறிந்து அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்வது சித்த
மருத்துவ முறையின் தன்மையாகும். சித்த மருந்துகள் சூரணமாகவும் (திடப்பொருள்),
கசாயமாகவும் (திரவப் பொருள்), மாத்திரைகளாகவும், மருந்து எண்ணெய்களாகவும்,
களிம்புகளாகவும் (வெளிப்பூச்சு மருந்து) நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன.
நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது சில வகையான உணவுப் பண்டங்களை உட்கொண்டால்
மருந்தின் வீரியம் குறையும். இதனால் சில உணவு வகைகள் விலக்கப்படும். இதனைப்
பத்தியம் என்பர். இத்தகைய சித்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
இதுவே சித்த மருத்துவத்தின் பலமும் பலனுமாகும். சிறந்த இம்மருத்துவ முறையை
நீங்களும் பின்பற்றலாமே!
|