3.5 நாட்டுப்புற மருத்துவர் |
மருத்துவர், மருத்துவச்சி, நாட்டு வைத்தியர் என்ற பெயர்களில் நாட்டுப்புற மருத்துவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். முதியோரும் மூலிகைகளின் பயன் அறிந்தோரும் நாட்டுப்புற மருத்துவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் மருத்துவ முறையைச் செவிவழியாகவும் மரபு வழியாகவும் பழக்கம் மற்றும் பயிற்சியினாலும் அறிந்து மேற்கொண்டு வருகின்றனர். |
![]() |
பகுதிநேர மருத்துவர், முழுநேர மருத்துவர் என இருவகையினராக இம்மருத்துவர்கள் காணப்படுகின்றனர். முழுநேர மருத்துவர்கள் பரம்பரை பரம்பரையாக, ‘சித்த வைத்திய சாலை’ 'சித்த மருத்துவ மனை' என்ற பெயரில் எலும்பு முறிவு, விசகடி, உடல் நோய்கள் போன்றவற்றிற்கு மருத்துவம் செய்து வருகின்றனர். பரம்பரை மருத்துவர்கள் சில மருந்துகளை. மருத்துவ முறைகளைப் பரம்பரைச் சொத்தாகக் கருதி மிகக் கமுக்கமாகப் (Secret) பாதுகாத்து வருகின்றனர். மூலிகை மருந்துகளையோ, மருத்துவ முறைகளையோ வெளிப்படையாகச் சொன்னால் பலிக்காது என்ற நம்பிக்கையும் இவர்களிடம் காணப்படுகிறது. |
![]() |
நாட்டுப்புற மருத்துவர்கள் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைக்கு உரியோராகவும் மனநல நிபுணர்களாகவும் எளிதில் தொடர்பு கொள்வோராகவும் விளங்குவது குறிப்பிடத் தக்கதாகும். இவர்களில் சிலர் எவ்வித ஊதியமும் இன்றித் தொண்டுள்ளத்தோடு மருத்துவம் செய்யும் போக்கினையும் நாட்டுப்புறங்களில் காணலாம். |
உற்றான்
அளவும் பிணியளவும் காலமும் |
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, அதாவது மருத்துவ நூலைக் கற்றவன் நோயுற்றவனுடைய வயது, நோயின் அளவு, நோயின் காலம் இவற்றை அறிந்து ஆராய்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப நாட்டுப்புற மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். |