4.6
கலையும் கலைஞர்களும்
|
பண்பாட்டு அடையாளங்களான நிகழ்த்து கலைகளின் ஆன்மா அழிந்துபடாமல் பாதுகாத்து
வரும் பெருமைக்கு உரியவர்கள் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களே. கலைஞர்கள்
இன்றிக் கலைகள் இல்லை. கலைஞர்களை இழந்ததால்தான் பல கலைகள் கால வெள்ளத்தில்
அழிந்து போய்விட்டன; அழிந்தும் வருகின்றன.
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது ; அதில் ஆணும், பெண்ணும் சேராவிட்டால்
அழகிருக்காது
என்னும் பாடலுக்கேற்ப ஆண், பெண் கலைஞர்கள் இணைந்து தமிழ்க்கலை மரபைப் பாதுகாத்து
வருகின்றனர்.
|
தொழில்
முறையாக நிகழ்த்தப் பெறும் கலைகளில் மட்டுமே
கலைஞர்கள் என்ற பிரிவினர் இடம்பெறுகின்றனர். பிற கலைகளில்
ஆடும் விருப்பமுள்ள யாவரும் கலந்து கொண்டு ஆடலாம், பாடலாம்.
ஆடுவோர் பார்வையாளர்களாக மாறுவதையும் பார்வையாளர்கள்
ஆடுவோராக மாறுவதையும் பல கலைகளில் காணமுடியும். இங்கு
எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. பல கலைகள் இத்தகைய சுதந்திரப்
போக்கையே கொண்டவையாகும்.
|
4.6.1
கலையும் இனத்தாரும் |
கலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையே. ஆயினும் அவை வளரும் வகையிலும்
வளர்க்கப்படும் முறையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாட்டுப்புற நிகழ்த்து
கலைகள் அனைத்து இன மக்களாலும் நிகழ்த்திக் காட்டப் படுகின்றன என்றாலும்
குறிப்பிட்ட சில கலைகள், குறிப்பிட்ட இன மக்களாலேயே ஆடிப் பாதுகாக்கப்
பட்டு வருகின்றன. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனத்தாரால் ஆடிப் பாதுகாக்கப்
பட்டு வரும் கலைகள் இனச்சார்புக் கலைகள் என
வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் குறிப்பிட்ட இனத்தாரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டு
வரும் கலைகள் பல உள்ளன என்பது இங்கு அறியத் தக்கதாகும்.
|
இனச்சார்புக்
கலைகள்
|
கலைகள்
|
நிகழ்த்தும்
இனத்தார் |
1. |
கணியான்
கூத்து |
-
கணியான் |
2. |
தோற்பாவைக்
கூத்து |
-
மராட்டியர் |
3. |
தேவராட்டம் |
-
கம்பளத்து நாயக்கர் |
4. |
சேவையாட்டம் |
-
கம்பளத்து நாயக்கர் |
5. |
தப்பாட்டம் |
-
பறையர்,அருந்ததியர் |
6. |
தீபகேலி
கோலாட்டம். |
-
சௌராஷ்டிரர். |
|
|
குறிப்பிட்ட
இனத்தாரால் நிகழ்த்தப்பட்டு வரும் இக்கலைகள்
தனித்துவம் கொண்டவையாகவும் அவ்வினத்தாரின் சடங்கு மற்றும்
வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுபவையாகவும் விளங்குகின்றன.
|
நிகழ்த்து
கலைகள் மட்டுமன்றி, நாட்டுப்புற இசைக் கருவிகள்
பலவும் குறிப்பிட்ட இனத்தார்களால் மரபு ரீதியாக இசைக்கப்பட்டு
வருகின்றன.
|
4.6.2
ஆண் கலைஞர்கள் |
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் தொண்ணூறு விழுக்காட்டுக் கலைகள் ஆண் கலைஞர்களாலேயே
நிகழ்த்தப்படுகின்றன. நிகழ்த்து கலைகள் வலுவான, அதிவேகமான ஆட்ட முறைகளையும்
உரக்கப் பாடும் இசைத் தன்மையும் கொண்டவையாக உள்ளதால் ஆண்களே இவற்றில் பயிற்சி
கொண்டு நிகழ்த்திக் காட்ட முடிகிறது. இதனாலேயே தெருக்கூத்து,
கணியான் கூத்து போன்ற கலைகளில்
பெண்களுக்குப் பதில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடவும் நடிக்கவும் செய்கின்றனர்.
பெண்களாகவே மாறி உணர்ந்து நடித்து மக்களின் பாராட்டையும் பெறுகின்றனர்.
|
கலைஞர்கள்
நிகழ்த்து சூழலில் தங்களின் சுக துக்கங்களை மறந்த,
நிகழ்த்துதலில் முழுக் கவனம் செலுத்திக் கலைகளுக்குப் பெருமை
சேர்க்கின்றனர்; பார்வையாளர்களின் நன்மதிப்பையும் பெறுகின்றனர்.
|
4.6.3
பெண் கலைஞர்கள் |
நாட்டுப்புற
நிகழ்கலைகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கான
கலைகளும் பெண்களின் பங்கேற்பும் மிகக்குறைவு என்றுதான்
கூறவேண்டும். அவ்வாறு பங்கேற்றாலும் அவர்கள் தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
|
கலைகள் சடங்கு மற்றும் வழிபாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டு வந்தமையால் கலைகளின்
புனிதத்துவம் கருதிப் பெண்கள் கலைகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற
கருத்தும் நிலவுகிறது. மேலும், பெண்களின் உடற்கூறு, பெண்மைத் தன்மை, வீட்டு
வேலைப்பளு, ஊர்விட்டு ஊர் சென்றுவர வேண்டிய நிலை, பாதுகாப்பு முதலியவற்றைக்
கருதி பெண்கள் கலைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.
|
வழிபாட்டு
நிகழ்வுகளில் நிகழ்த்தப்பட்டு வந்த கலைகள்
தொழில்முறைக் கலைகளாக மாற்றம் பெற்றுவரும் இன்றைய
நிலையில், கலைகளில் பெண்களின் பங்கேற்பு சற்று அதிகரித்து
வருகிறது. பெண்கள் பங்குபெறும் கலைகள் மக்களிடம் அதிக
வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு
வந்த பல கலைகளில் (தப்பாட்டம், ஒயிலாட்டம், சக்கையாட்டம்,
தேவராட்டம், தெருக்கூத்து) பெண்கள் பயிற்சி பெற்றுத் (குறிப்பாகக்
கல்லூரிப் பெண்கள்) திறமையாக நிகழ்த்திக் காட்டி வருகின்றனர்.
இந்நிலை நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின்
வளர்ச்சி நிலையைப்
புலப்படுத்துவதாக உள்ளது எனலாம்.
|
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளை வளர்த்தெடுப்பதில் குறிப்பிட்ட
இனத்தார் ஈடுபட்டுவருவதையும் கலைஞர்களின் பங்களிப்பினையும்
அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் முனைப்பையும் மேற்கூறிய
கருத்துகள் எடுத்துரைக்கின்றன.
|