5.5 மகளிர் விளையாட்டுகள் 

மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலானவை அக விளையாட்டுகளாகவும் அறிவுத்திறன் சார்ந்தவையாகவும் உள்ளன. கிராமப்புறப் பெண்கள், குறிப்பாக இளவயதுப் பெண்கள் அதிகமாக வெளியிடங்களுக்குச் செல்வதில்லை. அவர்களுக்கு வீட்டுக் கண்காணிப்பும் சமுதாயக் கட்டுப்பாடும் மிகுதி. அதனால் வீ்ட்டிற்குள்ளேயே ஆடும் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். மகளிர் விளையாட்டுகள் அவர்கள் விரும்பிய நேரத்தில் (பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம்) எப்பொழுது வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளும் கட்டுப்பாடற்ற சுதந்திரத் தன்மை உடையவையாகவே உள்ளன.

5.5.1 அக விளையாட்டுகள்

மகளிரின் அக விளையாட்டுகளாகப் பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை போன்றவை ஆடப்படுகின்றன. பல்லாங்குழி விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்று பார்ப்போம்.

பல்லாங்குழி  

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது.

இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிர்எதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.

பல்லாங்குழி

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தாயம் 

தாயம் ஒரு வரைபட விளையாட்டு ஆகும். கட்டம் வரைந்து கொண்டு மரம் அல்லது வெண்கலத்தாலான கட்டைகளை உருட்டியோ, சோழிகளைக் கொண்டோ தாயம் விளையாடப்படும். ஆடவர், மகளிர் இருவரும் இவ்விளையாட்டை ஆடுவர். இவ்விளையாட்டைக் குறைந்தது இருவர் ஆட வேண்டும். தாயக் கட்டையை உருட்டும் போது ஓர் எண் மட்டும் விழுந்தால் அது தாயம் எனப்படும். தாயம் விழுந்தால்தான் விளையாட்டைத் தொடங்க முடியும். தாயம் விழுந்த பின் பெருக்கல் குறிகள் உள்ள இடத்தில் காயை வைத்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். ஐந்து காய்கள் வரை பயன்படுத்தப்படும். வரைபடத்தில் மையத்தில் உள்ள பெருக்கல் குறியில் யார் காயைச் சென்று சேர்க்கின்றாரோ அவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். தாயம், பகடை, பரம பதம் ஆகிய விளையாட்டுகள் ஒரே தன்மை உடையவையாகும்.

விளையாட்டுப் பாடல்களை உருவாக்குவோரும் சிறுவர் சிறுமியர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி நெறிப்படுத்துவோரும் மகளிராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

5.5.2 புற விளையாட்டுகள் 

கும்மியும் கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப் பெண்களிடையே காணப்படும் புற விளையாட்டுகள் ஆகும். இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக உள்ளன.

கும்மி

பெண்கள் வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும் விளையாட்டு கும்மி ஆகும்.

நாட்டுப்புறப் பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத் தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால் பாடப்படும் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப்படுகிறது. கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம் எனப் பலவாறு கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே பெருவழக்காக உள்ளது.

கும்மி, திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால் விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும் போதும் கும்மி கொட்டுதல் உண்டு.

குலவையிட்டுக் கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும் கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும் கூறாகவும் அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக் கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.

கும்மி விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள் பார்வையாளர்களாக மாறுவதும் பார்வையாளர்கள் கும்மி கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.

கைகளை உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக் கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.

அம்மன் கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப் பாடுவதுண்டு.

தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

(ரெக்கத்திலே = இடத்திலே)

வயது வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப் பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து வருகின்றன

மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின் அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும் மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன எனலாம்.

கும்மி

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக