2.0 பாடமுன்னுரை

நம்மைப் பெற்று, வளர்த்து உருவாக்கும் தாயின் மீது நாம் மிகுந்த பற்றுக் கொண்டிருப்போம் இல்லையா? தாய்க்கு ஒரு துன்பம் அல்லது ஆபத்து வந்தால், மிகவும் துடித்து விடுவோம்; துன்பப்படுவோம். அவள் துன்பத்தைப் போக்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை உடனே செய்வோம். அதைப்போல, நாம் பிறந்து வளர்ந்த, நமது தாய் நாட்டிற்கு ஒரு துன்பம் அல்லது ஆபத்து வந்தால் உடனே உதவ வேண்டும். இது நமது முதன்மையான கடமை. இதனையே பாரதியார் தமது தேசியப் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடம் பாரதியார் இந்திய நாட்டையும், அதன் விடுதலையையும் பற்றிப் பாடிய பாடல்களை விளக்குகிறது. பாரதியாரின் தேசியப் பாடல்கள் பாரதநாடு, தமிழ்நாடு, சுதந்திரம், தேசிய இயக்கப் பாடல்கள், தேசியத் தலைவர்கள், பிற நாடுகள் என்னும் தலைப்புகளின் கீழ், பல உள்தலைப்புகள் கொண்டு விளங்குகின்றன.