2.2 பாரத மக்கள்

பாரதம், பல நூற்றாண்டுகளாக, பலவிதமான உள்நாட்டுப் போர்களாலும், வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டது. பாரத நாட்டில் பல சமயத்தவர், பல மொழி பேசுபவர், பல இனத்தவர் வாழ்ந்தனர். இதனால், மக்களிடையே வேறுபாடுகளும், கசப்பு உணர்வுகளும் பூசல்களும் ஏற்பட்டன. இச்சூழலைப் பயன்படுத்தி, டச்சுக்காரர்களும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியரும், பின்னர் ஆங்கிலேயரும், இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். பின்னால் வந்த ஆங்கிலேயர் 400 ஆண்டுகளுக்கு மேல், இந்தியா முழுவதையும் ஆட்சி செலுத்தினர்.

ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த பாரதத்தை, விடுதலை அடையச் செய்யப் போராடியவர்களுள் பாரதியும் ஒருவர். இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாமையால்தான் அந்நியர், இந்திய நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர், ஆட்சி செலுத்தினர்; எனவே, இந்தியர்களிடம் ஒற்றுமை இருந்தால் தான், அந்நியர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெறும் என்று பாரதி உணர்ந்தார். எனவே, மக்கள் ஒற்றுமையை வற்புறுத்திப் பாடினார்.

2.2.1 ஆயிரம் உண்டு இங்கு சாதி

பாரதம் பல மொழிகள் பேசும், பல இன மக்களை உடைய ஒரு நாடு. இவ்வாறு பன்முகப்பட்ட ஒரு நாட்டில் இருந்து அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டும். அப்பொழுது தான் வெற்றிபெற முடியும். இதனை நன்கு உணர்ந்தவர் பாரதியார். எனவே, இந்திய தேச ஒற்றுமைக்காகப் பல பாடல்களைப் பாடினார். மக்களுக்கு ஒற்றுமை உணர்வை ஊட்ட

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
     ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
     ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்?

(பாரத தேசம், வந்தே மாதரம் - 4)

‘பாரத தேசம்’ என்ற தலைப்பில், பாடிய பாடலில், பாரத மக்கள், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு உறவு கொள்ளவேண்டும், எவ்வாறு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மிகச் சிறப்பான கவிதை ஒன்றின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்தப் பாடலை இதோ கேளுங்கள்.

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
     பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சிந்து நதியின்மிசை நிலவினிலே
     சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
     தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
     காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
     காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்!

(பாரத தேசம் பல்லவி -5,6,7)

(மிடி = துன்பம்)

இந்தப் பாடலில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?

இந்தியாவுக்குப் பெருமை தரும் நதிகளில் ஒன்று சிந்து. அந்த நதியில் கேரளநாட்டு அழகான பெண்களுடன், இனிமையான தெலுங்கு மொழியில் பாடல்கள் பாடி, தோணிகள் (படகுகள்) ஓட்டி விளையாடுவோம்; இந்தியாவின் பெருமைக்குரிய இன்னொரு நதி கங்கை. இது இந்தியாவின் வட பகுதியில் உள்ளது. அதைப் போல், தென்பகுதியில் சிறப்பு வாய்ந்த நதி காவிரி. இரண்டு நதிகளும் பாயும் பகுதியில் உள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ளவேண்டும். கங்கைச் சமவெளியில் விளைவது கோதுமை, காவிரி நதிக்கரையில் வளர்வது வெற்றிலை-இரண்டையும் பண்ட மாற்றம் செய்வோம் என்கிறார் பாரதியார்.

ஒருவர் காசியிலிருந்து பேசுவதைக் காஞ்சிபுரத்தில் உள்ளவர் கேட்கும் வகையில் ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டுமென்று தொலைநோக்குப் பார்வையுடன் தொழில்வளம் குறித்துப் பாடியிருக்கிறார் பாரதி.

இதற்கு மேலாக, நாட்டிலுள்ள நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறார்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
     மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

(பாரததேசம் - 2)

ஒற்றுமை இருந்தால்தான், அந்நியராகிய ஆங்கிலேயரை வெளியேற்ற முடியும் என்று கருதினார்.

இந்தியாவில் பல சாதிப் பிரிவுகள் உண்டு. அதைப் பயன்படுத்தி அந்நியர்கள், இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து விடக்கூடாது தம் ஆட்சியை நிலைக்க வைத்துவிடக்கூடாது என்று அஞ்சினார். தம் அச்சத்தை,

 

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில்
     அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

(பாரத நாடு - வந்தே மாதரம் - 3)

என்று வினவுகிறார். மேலும், நாங்கள், பாரதமாதாவாகிய ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள்; இங்கு வேறுபாடுகள் இல்லை என்கிறார். இதனை,

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
     ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
     வேறு குலத்தின ராயினும் ஒன்றே

(பாரத நாடு - வந்தே மாதரம் - 1)

என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தி, இந்தியாவின் ஒற்றுமையை உணர்த்துகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை - ஒருமைப்பாட்டை வெளியிடும் மற்றுமோர் அருமையான பாடல், ‘எங்கள் தாய்’.
முப்பது கோடி முகமுடையாள், உயிர்
     மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
     சிந்தனை ஒன்றுடையாள்.

( எங்கள் தாய் - 3)

(மொய்ம்பு = வலிமை)

இந்தியாவில், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பதினான்கு. இவற்றைத் தவிர வேறு பல மொழிகளும் பேசப்படுகின்றன. எனவே, பாரதியார், பதினெட்டு மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தாலும், எல்லோரும் ஒரே சிந்தனை உடையவர்கள் என்று அறிவித்தார். மொழியால் வேறுபட்டாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என்று உணர்த்துகின்றார். இந்த வேறுபாடுகளை நினைத்து ஆங்கிலேயர் நம்மை வேறுபடுத்திப் பிரிக்க இயலாது என்று கருதி, மக்களின் வேற்றுமையுணர்வை நீக்க இங்ஙனம் பாடியிருக்க வேண்டும். இதனை இன்னும் நேரடியாகவே ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலில் கூறுகிறார்.

 

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்.

(பாரத சமுதாயம் - 14)

இவ்வாறு, இந்தியாவின் ஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்களைப் பாடினார். அவரது தேசிய உணர்வுக்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

2.2.2 ‘அஞ்சி அஞ்சிச் சாவார்’

வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கூறிய பாரதியார், அவர்களின் மன இயல்புகளையும் செயல்களையும் சுட்டிக்காட்டி, அவற்றிலிருந்து அவர்கள் திருந்த வேண்டும் என்றும் கூறுகிறார். அப்பொழுதுதான் பாரதம் முன்னேறும் என்று கருதினார்.

அச்சம்

மனதில் உறுதி வேண்டும்; அச்சம் தவிர்க்க வேண்டும்; அச்சம் இல்லாமல் இருந்தால்தான் எந்த ஒரு செயலையும் தைரியத்துடனும், சிறப்புடனும் செய்ய முடியும் என்று கருதினார் பாரதியார். எனவே, அச்சத்தால் அவதியுறும் மக்களைப் பார்த்து

 

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
     நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
     அஞ்சாத பொருளில்லை அவனியிலே.

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை-4)

என்று மிகவும் வருந்துகிறார்.

இத்தகைய மக்கள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

மூடநம்பிக்கை

பேய்கள் பற்றிய மூடநம்பிக்கை இந்திய மக்களிடம் இருக்கிறது. கிராமப்புறங்களில் இன்றும் இந்த நம்பிக்கை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேர இருட்டில் மரங்கள் காற்றினால் அசைந்தால் கூட, பேய் மரத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது-அது தான் அசைக்கிறது என்றும், குளத்திலுள்ள நீரில் ஏதாவது அசைவு ஏற்பட்டாலும், பேய் குளித்துக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்வார்கள். பகல் நேரத்தில், அதோ தெரிகிறதே, மலை, அதன் உச்சியில் பேய் தூங்கிக் கொண்டிருக்கும்; இரவில் இறங்கி வரும் என்று கூறுவார்கள். இதைத்தான் பாரதியார், வேடிக்கையாக,

 

வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
     மரத்தில் என்பார் - அந்தக்குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
     துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை - 1)

(துஞ்சுது = தூங்குகிறது, முகடு = மலை உச்சி)

என்று குறிப்பிடுகிறார்.

பேய்களுக்கு மட்டுமா அஞ்சுகிறார்கள்? மந்திரம், சூனியம் போன்றவைகளைக் கண்டும் அஞ்சுகிறார்களே என்று வருந்துகிறார். மந்திரவாதிகள் என்ற பெயரைக் கேட்ட உடனேயே எப்படி அஞ்சுகிறார்கள், என்பதனை,

மந்திர வாதி என்பார் - சொன்ன
     மாத்திரத்திலே மனக் கிலி பிடிப்பார்

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை - 2)

என்று குறிப்பிடுகிறார். சிப்பாய்கள் எதிரே வந்தால் அவர்களைக் கண்டும் அஞ்சுவார்கள். துப்பாக்கியுடன் ஒரு சிப்பாய் வந்தால், அவ்வளவுதான். பயந்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்வார்கள். இத்தகைய கோழைகளை, எதைக் கண்டும் அஞ்சி அஞ்சி வாழும் மக்களை வைத்து எவ்வாறு, அந்நிய ஆட்சியை எதிர்க்க முடியும்? இந்த அறியாமையைக் கொண்டே நம்மை அவன் அடிமைப்படுத்துவான். எனவே இவர்களுக்கு மன உறுதியை வரவழைக்கவேண்டும் என்று கருதினார் பாரதி. அதனால், இத்தகைய கோழைகளைப் பார்த்து, உங்களால் இந்தப் பாரத தேசத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை; இங்கிருந்து போய்விடுங்கள் அல்லது உங்கள் அச்சத்தை, கோழைத்தனத்தைப் போக்குங்கள் என்று அவர்களை உசுப்புகின்றார் (எழுப்புகின்றார்).

2.2.3 போகின்ற பாரதம்

சாதிப்பாகுபாடும், சாதியச் சிந்தனையும் பிற்போக்கானவை. கோழைத்தனம், பிற்போக்கு சக்தி, அச்சம், அறியாமை, பொய் சொல்லுதல் முதலியனவும் பிற்போக்குக் கூறுகள். இவற்றை நீக்கினால் தான், பாரத மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். விடுதலை பெறும். இந்தியாவில் நல்ல குடிமக்களாக வாழ்வார்கள் என்று கருதினார் பாரதியார். இதனை, நயமாகவும் எளிமையாகவும் தம் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வலிமை யற்ற தோளினாய் போ போ போ
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ

நன்று கூறினால் அஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்

சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ.
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்- 1)

ஒரு தடவைக்கு இருமுறை அல்ல மூன்று முறை போ போ போ என்று கூறுகிறார் இல்லையா? அதற்குக் காரணம் என்ன? அந்த அளவுக்கு அத்தகைய செயல்களைப் பாரதியார் வெறுக்கிறார். மேற்குறிப்பிட்ட வகையைச் சார்ந்தவர்களை வெறுக்கிறார். சரி, பின் எத்தகையோரை விரும்புகிறார்? மேற்குறிப்பிட்ட பண்புகளுக்கு எதிரான பண்புகள் உடையவர்களையே பாரதியார் விரும்புகிறார்.

2.2.4 வருகின்ற பாரதம்!

முன்னைய பகுதியில், தம் விருப்பத்திற்கு அல்லது எண்ணத்திற்கு மாறானவர்களைப் போ போ என்று வெறுத்து ஒதுக்கிய பாரதியார், அவர் விரும்பத்தக்க இயல்பு கொண்டோரை வா வா என அழைக்கிறார்.

சாதி, சமய பாகுபாடு பார்க்காத பார்வை, எதைக்கண்டும் அஞ்சாத திடமான பார்வை, தெளிவான சிந்தனை உடைய பார்வை ஆகிய பண்புகள் பொருந்திய பாரதத்தின் இளைய தலைமுறையினரை அழைக்கிறார் பாரதியார்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா.

களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசிறக்க வந்தனை வா வா வா.

(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் - 5,7)
 


 

தெளிந்த சிந்தனை கொண்டவர்களால்தான் புதுயுகம் படைக்க இயலும். அத்தகையோரே நாட்டுக்குத் தேவை என்று எண்ணி இவ்வாறு பாடுகிறார். இத்தகைய சிறப்பு இயல்புகளை உடைய பாரத மக்களை எதற்காக அழைக்கிறார்? விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியை ஈட்டித் தரும்படி, ‘வெற்றி கொண்ட கையினாய் வா வா வா’ என அழைக்கிறார் பாரதி.