2.3 தமிழ்நாடும் பாரதமும்

பாரதியார் தாம் தமிழ்நாட்டினர் என்பதிலும், இந்தியர் என்பதிலும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறார். தமிழ் நாடு எத்தகையது? வேதம் நிறைந்தது, வீரம் செறிந்தது. காவிரி, வைகை போன்ற நீர்வளமிக்க ஆறுகளைக் கொண்டது. கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற புலவர்களைக் கொண்டது. மாமுனிவர்கள் வாழ்ந்தது. மேலும்,

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

(செந்தமிழ்நாடு - 10)

என உலக அரங்கில் புகழ் பரப்பிச் செழித்த நாடு எனத் தமிழ்நாட்டைப் பாராட்டுகின்றார். பிறந்த நாட்டைத் ‘தாய்நாடு’ என்று சொல்லும் மரபை மாற்றித் ‘தந்தையர் நாடு’ எனப் போற்றுகின்றார்;

                         -எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ்நாடு - 1)

தமிழ்நாட்டைப் போற்றிப் பரவும் அதே வேளையில்,

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

(வாழிய செந்தமிழ் - 1,2)

என்ற வாழ்த்துத் தொடரில் தமிழ், தமிழர், பாரதம் என்று வரிசைப்படுத்தி வாழ்த்தும் பாங்கு கருதத்தக்கது.