2.5 பாரத விடுதலை

பாரத நாட்டின் விடுதலையைப் பற்றிப் பாடிய கவிஞர்களுள் பாரதியார் முதன்மையானவர். தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தம் உணர்ச்சிகரமான பாட்டுகளால், தட்டி எழுப்பிய பெருமை பாரதிக்கு உண்டு’ என்பார்கள். வேறு பலரும் விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பாடினர். ஆனால் பாரதி, நாட்டின் ஒற்றுமை, அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாடினார். அத்துடன், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே தீர்க்க தரிசனமாக


 

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்

(சுதந்திரப் பள்ளு - பல்லவி)

என்று விடுதலை பெற்றுவிட்டதாகக் கனவு கண்டு ஆனந்தக் கூத்தாடினார் அமரகவி பாரதியார்.

2.5.1 விடுதலை வேட்கை

இந்தியா, ஆங்கிலேயராகிய அந்நியரிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்பது பாரதியாரின் தணியாத ஆசை. அதற்காக, இந்திய மக்களை எந்த வகையில் எல்லாம் விழிப்புணர்ச்சி அடையச் செய்ய வேண்டுமோ, அந்த வகையில் எல்லாம் உணர்ச்சிகரமான பல விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடினார். முதலில், விடுதலை என்ற உணர்வு எந்தவகையில் இந்திய மக்களின் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது என்பதைத் தம் பாடல்களில் வெளிப்படுத்துகிறார். இந்திய மக்களுக்கு வேண்டியது விடுதலையே அன்றி வேறொன்றும் இல்லை என்பதனை,

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
     வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
     அறிவைச் செலுத்து வாரோ?

(சுதந்திரப் பெருமை - 1 )

என்ற பாடலில் குறிப்பிடுகிறார். கிடைப்பதற்கு அரிய அமுதத்தை உண்ண விரும்புவோருக்கு அறிவை மங்கச் செய்யும் கள்ளைக் கொடுத்தால் உண்பார்களா? விடுதலை வேட்கை உடைய இந்தியர்கள், விடுதலையைத் தவிர, வேறு எதற்கும் உடன்பட மாட்டார்கள் என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவிக்கிறார். ஏன் என்றால், விடுதலை வேட்கை எனும் இந்தப் பயிரைத் தண்ணீரை விட்டு வளர்க்கவில்லை; தியாகிகளின் கண்ணீரை விட்டே வளர்த்தோம்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்

(சுதந்திரப் பயிர் - 1)

எனவே, விடுதலையைப் பற்றிய எங்கள் தாகம் என்றைக்கும் தணியாது. எங்கள் சுதந்திர தாகம் என்றைக்கு அடங்கும்? என்றைக்கு என் பாரதத் தாய் அடிமை விலங்குகளைத் தகர்த்து எறிந்து விடுதலை பெறுவாள்? - என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதனை,

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
      என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

(சுதந்திர தாகம்- 1)

என்ற பாடலின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் பாரதியார்.

2.5.2 விடுதலை ! விடுதலை !!

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார் மகாகவி பாரதியார், விடுதலையைப் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தினார். இந்த உணர்வுகளினால் உந்தப்பட்டிருந்த, இந்திய மக்கள், விடுதலை பெற்றால், எத்தகைய உணர்ச்சியைப் பெறுவார்கள்? என்பதைத் தம் கற்பனை மூலம் மிகச் சிறப்பாகப் பாடுகிறார். அவர்

விடுதலை ! விடுதலை ! விடுதலை !
பறைய ருக்கும் இங்கு தீயர்,
      புலைய ருக்கும் விடுதலை,
பரவ ரோடு குறவ ருக்கும்
      மறவ ருக்கும் விடுதலை!

(விடுதலை- 1)

என்று விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் உரியது விடுதலை என்று வெளிப்படுத்துகிறார் பாரதி.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பது மட்டும் அல்ல பாரதி விரும்பியது; இந்திய மக்களே தங்களுக்குள் சாதி, சமய, இன வேறுபாட்டால் ஒருவருக்கொருவர் அடிமையாய் இருந்தனர். இந்த வழக்கத்தில் இருந்தும் விடுதலை பெறவேண்டுமென்று பாடுகிறார்.

விடுதலை பெற்றபின், சுதந்திர இந்தியா எத்தகைய மாற்றத்தைப் பெற வேண்டுமென்று அவர் கண்ட கனவையும் வெளிப்படுத்துகிறார்.

சுதந்திரத்தைத் தேவியாக உருவகித்து, எத்தனைத் துயரமடைந்தாலும் உன்னைத் தொழ மறக்கமாட்டேன் என அவர் பாடுவது இந்தியா சுதந்திரம் அடைந்தே தீரும் என அவர் திண்ணமாக நம்பியதைக் காட்டுகிறது. அவருடைய விடுதலை வேட்கை அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது. எனவே,

சுதந்திர தேவி! நின்னைத்
      தொழுதிடல் மறக்கிலேனே

(சுதந்திர தேவியின் துதி - 1)

என்று பாடுகிறார்.

ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டும்; உயர்ந்த சாதி, இழிந்த சாதி; ஆண், பெண் என்ற ஏற்ற தாழ்வு ஒழிய வேண்டும்; மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வு வேண்டும் என்று பாரதி விரும்பினார். அந்த விருப்பத்தை அடைந்து விட்டதாகவே பாடி மகிழ்ந்தார்.

ஏழை என்றும் அடிமை என்றும்
      எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
      இந்தியாவில் இல்லையே!

(விடுதலை-2)

மாதர் தம்மை இழிவு செய்யும்
      மடமை யைக்கொ ளுத்துவோம்

(விடுதலை - 3)

எவ்வளவு நம்பிக்கையாகப் பாடியுள்ளார் பாருங்கள்! இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இவையெல்லாம் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். எனவே, இந்தியா விடுதலை பெற்று விட்டதாகவும், இந்திய மக்களைப் பற்றிய அவரது ஆசைகள் எல்லாம் நிறைவேறிவிட்டதாகவும் எண்ணிப் பெருமிதத்துடன் பாடுகிறார் பாரதியார்.

விடுதலை அடைந்து விட்டோம். அது சாதாரண சுதந்திரம் அல்ல. மகிழ்ச்சி தரும் ஆனந்த சுதந்திரம். அதை அடைந்து விட்டோம். எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம் என்று எவ்வளவு தன்னம்பிக்கையாக, தீர்க்கதரிசனமாகப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.