2.6. தேசிய இயக்கப் பாடல்கள்

பாரதியாரின் நாடி நரம்பெல்லாம் விடுதலை உணர்வு, நாட்டுப் பற்று முதலியவை ஊறிக் கிடந்தன. அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை எந்த வழிகளில் எல்லாம் நாட்டுப்பற்றை ஊட்டி விழிப்புறச் செய்ய வேண்டுமோ அந்த வழிகளை எல்லாம் இடைவிடாது விடா முயற்சியுடன் கையாண்டார்.

2.6.1 சத்ரபதி சிவாஜியின் வீர உரை

சத்ரபதி சிவாஜி மராட்டிய மன்னன். மகாராட்டிர சுயராஜியத்திற்கு அடிப்படைக் காரணமானவர். சிவாஜியின் வீரம், நடுவு நிலைமை முதலிய அருங்குணங்களை இந்தியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாரதி ஆசைப்பட்டார். சிவாஜியின் எழுச்சி பற்றி இந்தியர்கள் அறிய வேண்டுவது காலத்தின் தேவை என்று கருதினார். ஆகவே பாரதி, சத்ரபதி சிவாஜி தம் படைகளுக்குக் கூறியதாகப் பாடியுள்ளார்.

பலம் கொண்ட அந்நியர் நம்மை அடிமைப்படுத்தி நம் நாட்டை ஆண்டாலும் அது தம் உரிமைப் பொருள் என்பதை இந்திய மக்கள் மறவாதிருக்க வேண்டும் என்று நினைத்தார் பாரதியார். இதோ! மராட்டிய வீரர் சிவாஜி தம் படைகளைப் பார்த்துக் கூறியதாகப் பாடியிருப்பதைப் பாருங்கள்.

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
ஊன மொன்றறியா ஞான மெய்ப்பூமி

(தேசிய இயக்கப் பாடல்கள், சத்ரபதி சிவாஜி -24-27)

இந்திய நாடு எத்தகையது? பழமையானது, பெருமையுடையது, உலகம் என்ற பெண்ணின் திலகமாக விளங்குவது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாட்டின் புதல்வர் நீங்கள்! அவ்வாறிருக்கும்போது நாகரிகமற்ற அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதோ? பாரத நாட்டில் வாழ்ந்தவர்கள் மிகுந்த வீரம் உடையவர். வீமர், துரோணர் போன்ற வீரர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுடைய வீரம் உங்களிடம் உண்டு. அத்தகைய வீரம் கொண்ட நீங்கள் சோம்பிக்கிடப்பதோ? என்று தம் படைகளைப் பார்த்துக் கூறுவதாக உள்ளது.

பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக!

(சத்ரபதி சிவாஜி 172, 173)

எல்லா வளமும் நிறைந்த பாரத நாட்டில் அந்நியரை நம்பிப் பிழைக்க வேண்டியதில்லை. நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணத்துடன் இந்தியர் போராட வேண்டும் என்று பாரதியார் பாடுகிறார்.

2.6.2 தொண்டு செய்யும் அடிமை

ஆங்கிலேயருக்குத் தொண்டு செய்து அவர்களை அண்டி அடிமையாய் இருந்து வாழ்தலே மேன்மையானது என்ற எண்ணத்துடன் வாழும் மக்களைப் பாரதியார் அடிமை என்றே குறிப்பிடுகிறார். இந்தியாவை யார் ஆண்டால் என்ன என்ற எண்ணம் மக்களிடம் அரும்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாரதியார். அங்ஙனம் சிலரேனும் நினைத்திருந்தால் அவர்களை, அந்த எண்ணத்தைப் பழித்துக் காட்டும் வகையில்

தொண்டு செய்யும் அடிமை - உனக்குச்
     சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ ? - அதற்குப்
     பாத்திர மாவாயோ

(தொண்டு செய்யும் அடிமை - 1 )

(பண்ட = முன்பு)

என்று பாடுகிறார். அடிமை என்ற சொல்லைப் பல முறை பயன்படுத்திப் பாரத மக்களின் அடிமை உணர்வு நீங்கப் பாடுபட்டவர் பாரதியார்.

உள்நாட்டு அடிமைகள்

இந்தியர்கள் அந்நியரிடம் மட்டுமா அடிமைப்பட்டுக் கிடந்தனர்? இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, சமயப் பிரிவு, இனப்பிரிவு எனப் பல்வேறு வழக்கங்களுக்கும் சமுதாயப் பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவற்றுக்கும் விடுதலை வேண்டும் என்று கருதினார். இழிந்தவர் என்று யாரும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். எனவே தான்,

பறைய ருக்கு மிங்கு தீயர்
     புலைய ருக்கும் விடுதலை!
பரவ ரோடு குறவ ருக்கும்
     மறவ ருக்கும் விடுதலை . . .
ஏழை யென்றும் அடிமை யென்றும்
     எவனு மில்லை ஜாதியில்

(விடுதலை 1,2)

என்று பாடுகிறார்.