தமிழில் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அந்நூலில் திருமால், முருகன், இந்திரன், வருணன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதையடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவபெருமானைப் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் பக்தியை மட்டும் பாடல் கருத்தாகக் கொண்டு முதலில் எழுந்த நூல்கள் நாயன்மார்கள் இயற்றிய தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் நூல்களேயாகும். பாரதியார் பாடாத துறையே இல்லை என்று சொல்லுமளவு தமிழ்நாடு, தமிழ் மொழி, பாரத நாடு, குயில், கிளி, தராசு முதலியன பற்றிப் பாடியுள்ளார். தெய்வப் பாடல்களில் அவர் என்ன கூறியிருக்கின்றார் என்று பார்க்கலாமா? பாரதியாரின் தெய்வப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கும் பாடல்களில் முதலாவது இடம்பெற்றிருப்பது விநாயகர் நான்மணிமாலை. இதையடுத்து, முருகன், வள்ளி, பராசக்தி (காளி, சக்தி, தேசமுத்துமாரி, கோமதி) இராமர், கண்ணன், திருமகள், கலைமகள், புத்தர், இயேசு கிறிஸ்து, அல்லா முதலிய தெய்வங்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இயற்கையையும் தெய்வமாகவே கொண்டு சிறப்பாகப் பாடியுள்ளார். சமுதாயம், அரசியல் முதலியவற்றில் பாரதியார் புரட்சிகரமான சீர்திருத்தவாதி. என்றாலும் தெய்வ நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது என்று கருதினார். வேத ஆகம சாஸ்திரங்களின் உண்மைக் கருத்துகளைத் தெளிவாக உணர்ந்த பாரதி, கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என எண்ணினார் ஆயினும் எல்லா மதங்களும் மனித நலத்தையே பேசுகின்றன என்பது அவரது உறுதியான கொள்கை. தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் ‘தெய்வ நம்பிக்கையும் வழிபாடும்’ என்பது கடவுள் மீது கொண்ட உறுதியால் அவரை வணங்கும் செயலைக் குறிப்பது. பாரத நாட்டில் தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் பண்டைக்காலம் தொட்டே காணப்படுகிறது. தமிழ் நாட்டில் பக்தியைப் பாடல் பொருளாகக் கொண்டு பாடியவர்கள் எல்லாம் தாங்கள் வழிபட்ட தெய்வத்தை மட்டுமே பாடினார்கள். சைவ சமயத்தைச் சார்ந்த நாயன்மார்கள் சிவபெருமான் மீதும், வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் திருமால் மீதும் பாடியிருப்பதை நோக்கும்போது, அவர்கள் பிற சமயத்திலுள்ள தெய்வங்கள் பற்றிப் பாடவில்லை என்பது தெரிகிறது. ஆனால் பாரதியார் இவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றார். அவர் வைதிகச் (வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமயம்) சமயத்தைச் சார்ந்தவர். ஆயினும் பிற சமயத் தெய்வங்களான புத்தர், இயேசு கிறிஸ்து, அல்லா ஆகியோரையும் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களிலோ, கட்டுரைகளிலோ ஓர் இடத்தில் கூடச் சமய வெறுப்புணர்வு இடம்பெறவில்லை. மக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஆணிவேராய் நிலை பெற்றிருந்தது. அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பொதுநோக்கு, பரந்த உள்ளம், சமயப் பொறை போன்றவை அவரிடம் காணப்பட்டன. எல்லாத் தெய்வங்களையும் பாரதி வணங்குகிறார். இந்த ஒப்பற்ற மேலான நிலை வேறு எந்தக் கவிஞனிடமும் தென்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இப்பாடம் இயற்கை வழிபாடு, இந்துசமயத் தெய்வங்கள், பிற சமயத் தெய்வங்கள், பாரதியாரின் வேண்டுதல் என்னும் நான்கு பகுப்பினுள் அடங்கும். |