5.4 சமுதாயச் சீர்திருத்தம்

சட்டம், சமூகம் முதலியவற்றில் நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கையே சமுதாயச் சீர்திருத்தம்.

5.4.1 குடும்ப வாழ்க்கை

சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஓர் ஆணும் பெண்ணும் வளர்ந்து உடலாலும் உள்ளத்தாலும் முழுநிலை பெற்ற பின்னர், காதல் கனிந்து திருமணம் செய்து கொள்ளுதலே இயல்பான திருமணமாகும். இத்திருமணத்திலும் குழந்தைத் திருமணம், வரதட்சணைத் திருமணம், பொருந்தாத் திருமணம் போன்ற பழக்கங்கள் புகுந்து சமுதாயத்தைச் சீர்குலைத்தன. இவற்றைக் கண்டு வருந்தி ‘வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்’ என்று பாடுகிறார் பாரதியார். (பெண்விடுதலைக் கும்மி - 5)

குழந்தை மணம்

குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தைப் பாரதியார் கடுமையாக எதிர்க்கிறார். ஆகையால்,


பால ருந்தும் மதலையர் தம்மையே
      பாதகக் கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடுகு லங்கெடல் நாடிய
      மூட மூடநிர் மூலப் புலையர்தாம்
கோல மாகமணத்திடைக் கூட்டும்இக்
      கொலையெனும் செயல் ஒன்றினை.

(பாரதியார் சுயசரிதை மணம்- 34)

என்று குழந்தைத் திருமணம், கொலை செய்வதைவிடக் கொடுமையானது எனக் கண்டிக்கிறார். அதனைச் செய்து வைப்பவர்கள் மிக இழிந்தவர்கள் என்றும் சினந்து கூறுகிறார்.

வரதட்சணைக் கொடுமை

பண்டைக் காலத்தில் வரன் (மணமகன்) தான் மணக்கப்போகும் வதுவிற்கு (மணமகளுக்கு) அவளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்குத் தட்சணையாகப் பொருள் (பணம்) கொடுப்பது வழக்கமாக இருந்தது. இது வரதட்சணை என்ற பெயர் கொண்டது. வரதட்சணை என்ற சொல்லுக்கு வரன் - மணமகன், தட்சணை என்பது பணம் எனப் பொருள்படும். பின்னாளில் மணமகள் மணமகனுக்குக் கொடுக்கும் சீதனப் பொருளாக இது மாறியது. இப்பழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. ‘பொன்னைக் கொடுத்துப் பெண்ணை எடுத்தல்’ என்பது தமிழ் மரபு. மாட்டை விலை கொடுத்து வாங்குவது போல் மணமகனை விலைகொடுத்து வாங்கும் அநாகரிகச் செயலைப் பாரதியார் வெறுக்கிறார். அன்பை அடிப்படையாகக் கொண்ட மண உறவுக்குப் பணத்தை அடிப்படையாக வைத்துப் பேசும் வழக்கத்தால் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே முதிர்கன்னிகளாக (முதிர்கன்னி - வயது முதிர்ந்தும் திருமணம் ஆகாத பெண்கள்) சமுதாயத்தில் வாழ்வதைக் காணமுடிகிறது அல்லவா?

இதைப் பற்றிப் பாரதியார் ‘மாப்பிள்ளை விலை’ என்ற தம் கட்டுரையில் எழுதுகிறார். அதில் வரதட்சணை வாங்குதல் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பெண் விடுதலை தேவை என்றும் குறிப்பிடுகின்றார்.

விதவைக் கொடுமை

மனைவியை இழந்த ஓர் ஆண் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் கணவனை இழந்தால் அவள் வாழ்நாள் முழுக்க விதவையாகவே உலக இன்பங்கள் மறந்து வாழ வேண்டும் என்ற மூடப்பழக்கத்தைப் பாரதியார் வன்மையாகக் கண்டிக்கின்றார். விதவைகள் நிலை பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில், அண்ணல் காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்குப் பாரதியாரின் நெஞ்சில் விதவைக் கொடுமை ஆழமாகப் பதிந்திருந்தது. விதவைகளைக் கொடுமைப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாகச் சாடுகிறார். விதவைக் கொடுமையை ஒழிக்க வீர இளைஞர்கள் விதவைகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார். விதவைத் திருமணமே விதவைக் கொடுமையை ஒழிக்கச் சிறந்தவழி என்கிறார்.

ஆண், பெண் கற்பு - நிலை

ஆணுக்குக் கற்புத் தேவையில்லை; பெண்ணுக்குத்தான் தேவை என்ற ஆண் ஆதிக்க நிலையை, பெண்ணடிமைத்தனத்தைப் பாரதியார் கடுமையாக எதிர்க்கிறார். எனவே,

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
      அப்போது பெண்மையும் கற்பழிந்தி டாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்
      நலமான கூரையும்தான் எரிந்திடாதோ?

(பாரதி அறுபத்தாறு - விடுதலைக்காதல் - 56)

என்று வினா எழுப்புகிறார். வீடு தீப்பற்றி எரிந்தால் வீட்டிலுள்ள கூரையும் தீப்பற்றி எரியாதா; ஓர் ஆண் கற்பிழந்தால் சமுதாயத்தில் தீங்கு நேராதா எனக் கேட்கிறார் பாரதியார்.

இக்காலத்தில் தோன்றி அச்சுறுத்தும் ‘எய்ட்ஸ்’ போன்ற நோய்களுக்கு ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நம் பண்பாட்டை மறந்த ஆண்களின் ஒழுக்கக்கேடே காரணமல்லவா? எனவே இருவருக்கும் கற்பு பொதுவானது என்ற நோக்கில், கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் (பெண் விடுதலைக் கும்மி - 5) என்று பாடினார்

5.4.2 சமுதாய ஒற்றுமை

சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையானது ஒற்றுமை. அதற்கு அடிப்படை மனிதநேயம். இவற்றைத் தம் பாடல்கள் மூலம் அறிவுறுத்தினார் பாரதியார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
      ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்

(வந்தே மாதரம் - 4)

எனப் பாரத சமுதாயத்தின் மேம்பாட்டுக்குத் தேவை ஒற்றுமையே என்று கூறுகின்றார். ஒற்றுமை தேவை என்பதை அறிய வேண்டும் என்று கூறாது ஞானம் வந்தால், (அதாவது அறிவுத் தெளிவு ஏற்பட்டால்) போதும் வேறு எதுவும் வேண்டாம் என வலியுறுத்துகிறார். இது நம் சிந்தனைக்கு விருந்தாகும்.

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்,

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
      யாவர்க்கும் அந்தநிலை பொதுவாகும்!
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
      முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.

(வந்தே மாதரம் - 5)

என வாழ்விலும் சாவிலும் கூட ஒற்றுமையுடன் இருப்போம் என்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இந்திய மக்கள் தொகை முப்பது கோடி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய ஒற்றுமைக்குப் பாரதியார் அணுகிய பாதையே சரியானது எனக் கூறலாம். ஒவ்வொரு மாநிலத்தின் தனிச் சிறப்புகளை மற்ற மாநிலத்தவர் போற்றிப் பாராட்ட வேண்டும், பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒற்றுமை ஓங்கும்; வேற்றுமை அகலும் என்கிறார்.

‘பாரத தேசம்’ என்ற பாடலில் சிங்க மராட்டியரின் கவிதைக்கு ஈடாகச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிப்போம்; வங்காளத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயத்தைப் பெருக்குவோம்; கங்கையாற்றுப் பகுதியில் விளையும் கோதுமைக்கு ஈடாக காவிரியாற்றுப் பகுதியில் விளையும் வெற்றிலையைக் கொடுப்போம் எனக் கூறுகின்றார்; மாநிலங்களுக்கு இடையேயான, மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தகர்த்துப் பாரத ஒற்றுமையை வலியுறுத்துகிறது இப்பாட்டு. மாநிலங்களுக்குரிய பொருண்மைகளைப் பாரத நாட்டின் உடைமைகளாக மாற்றுவதின் வழியே ஒரு தேசிய ஒற்றுமையை உருவாக்க வழிகாட்டும் வகையில் இப்பாட்டுப் பாடப்பெற்றது. இப்பாட்டின் ஏனைய பகுதிகளிலும், மொழிவாரியான மக்களுக்கு இடையே கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற ஒரு பரிவருத்தனை உறவுமுறை சித்தரிக்கப் பெறக் காணலாம்.

மனித நேயம்

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கள்பண் புஇலா தவர்

(திருக்குறள். 997)

என்பது திருக்குறள். கூர்மையான அறிவு இருந்தாலும் மனிதப் பண்பு இல்லாதவன் மரம் போன்றவனே என்பது இதன் கருத்து. எனவே ஒருவன் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதும், இரக்கம் காட்டுவதும், மற்றவர் துன்பம் கண்டு வருந்துவதும், இன்பம் கண்டு மகிழ்வதும் மனிதப் பண்புகளாகும். இவை அனைத்தும் அன்பின் அடிப்படையில் நடப்பவை. நேயம் என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள். மனிதன் மற்றவர்மீது செலுத்தும் அன்பு என்ற மனிதப்பண்பே மனித நேயம் எனப்படும். இதனைப் பாரதியார்,

பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப்
      பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

(உயிர்பெற்ற தமிழர் பாட்டு - 16)

எனக் கூறுகிறார். யார் ஒருவன் தன் அருகில் இருப்பவன் துன்பத்தைக் காணப் பொறுக்காது வருந்துகிறானோ, யார் ஒருவன் அடுத்தவர் துன்பம் போக்க உதவி செய்கிறானோ அவனே சிறந்த புண்ணியம் செய்தவன் என்பது அவர் கருத்து. ஆகையால்,

உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
      உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்

(உயிர்பெற்ற தமிழர்பாட்டு. 15)

என்று பாடுகிறார். தன்னைச் சார்ந்தவர்கள், தன்னாட்டினர், தன் ஊரினர் இவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதும் அவர்களுக்கு இன்பந்தரும் செயல்களைச் செய்வதுமே நல்ல தவமாகும் எனத் தவத்துக்கு மனிதநேய அடிப்படையில் புதுவிளக்கம் தருகிறார் பாரதியார்.