5.6 கல்வியும் அறிவியல் நோக்கும் |
 |
கல்வியின் சிறப்பினை உணர்ந்தவர் பாரதி. கல்வியினால் மக்களுக்கு
ஏற்படும் அறிவு வளர்ச்சியை எடுத்துரைத்தவர்; மேலும் சமுதாய முன்னேற்றத்திற்கு
அறிவியல் நோக்கு மிகவும் தேவை என்பதையும் அறிந்தவர். இவற்றை அவரது பாடல்கள்
மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கல்விபெற வாய்ப்பில்லாத மக்களின் நிலைகண்டு பாரதியார் வருந்துகிறார்.
சத்திரம், கோயில் முதலியவை கட்டுதலைவிட ஏழைக்குக் கல்வி புகட்டுதல் மேலானது என்கிறார்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல் |
(வெள்ளைத்தாமரை
- 9)
என்கிறார்.
வயிற்றுக்குச் சோறும், மனத்துக்கு உணர்வும், வாழ்வில் ஏற்றமும்
தருவது கல்வி அல்லவா?
5.6.1 ஆங்கிலக் கல்வியின் அவலம்
ஆங்கிலக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப் பெறும் கல்வி இந்திய நாட்டின்
இயல்புக்கு ஒத்ததாக இல்லை என்பது பாரதியார் கருத்து.

கணிதம்
பன்னிரண்டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்;
வணிகமும் பொருள்நூலும் பிதற்றுவார்;
வாழுநாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்... |
(சுயசரிதை
- 23)
(கார்கொள்
= கரிய மேகம் சூழ்ந்த; மீனிலை
= வானில் நட்சத்திரங்களின் நிலை)
எனக் கற்கும் கல்வியின் பொருள் இன்னது
எனத் தெரியாது அயல்மொழி என்ற மோகத்தில் சிக்கி நாட்டினர் உழல்வதை அவர்
இந்தப் பகுதியில் எடுத்துக் காட்டுகின்றார்.
கம்பன், காளிதாசன், திருவள்ளுவர் போன்ற உள்நாட்டுக்
கவிஞர்கள்; பாஸ்கரன், பாணினி போன்ற மேதைகள்; அசோகன், சிவாஜி மற்றும் சேர,
சோழ, பாண்டியர் போன்ற மன்னர்கள் ஆகியோரைப் பற்றி யாதும் அறிந்து கொள்ள
மாட்டார்கள்.
ஆங்கிலப் பயிற்சி பெறும் மாணவர்கள்;

முன்ன
நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளில் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன்
இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே |
(சுயசரிதை:
26)
(பெற்றி =
சிறந்த நிலை)
என்று ஆங்கில மோகம் கொண்டோரை நினைக்கையில் தன் உள்ளம்
எரிவதை உணர்த்துகிறார் பாரதியார்.
இப்படிக் கூறுவதால் ஆங்கில மொழிக்கு எதிரானவர் பாரதி என்று பொருள் கொள்ள
வேண்டாம். கல்வியைத்
தாய் மொழியில் பயிலும்
போது சிந்தனைத் தெளிவு உண்டாகும்; புதியன படைக்கத்
தோன்றும். புரியாத, அதிலும் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் மொழியை இந்த
மண்ணுக்குப் பயன்தராத வகையில் கற்பதால் பயனேதுமில்லை என்பதாலேயே பாரதி தவிப்பும்
எரிச்சலும் அடைகிறார்.
5.6.2 புதிய தேசியக் கல்வித்திட்டம்
ஆங்கிலக் கல்வியின்
விளைவால் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்பட்டது. இந்திய
நாட்டுத் தொழில்கள் நலிந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும்,
மக்கள் எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டும்
என்ற நோக்கில் கல்வித்திட்டம் வகுக்கப்பட்டது. கல்வியில் அனைவருக்கும்
சமவாய்ப்பு அளிக்க வேண்டும், தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே
அதன் நோக்கமாக இருந்தது.
பாரதியார் தாம் வாழ்ந்த காலத்திலேயே ஆங்கிலக் கல்வியின்
பயனற்ற தன்மையைக் கண்டு நமது நாட்டின் தன்மைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற புதிய
தேசிய கல்வித் திட்டத்தை வகுத்துத் தருகிறார். அதற்கான பயிற்று மொழியாகத்
(கற்றல் மொழி) தாய்மொழியான தமிழை வைத்துப் பாடத் திட்டத்தை அமைத்துக் கொடுக்கிறார்.
தேசியக் கல்வியோடு
ஒவ்வொருவரும் தாய்மொழிக் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.
அப்பாடத்திட்டத்தில் எழுத்து, படிப்பு, கணக்கு, சமூக வரலாறு, புவி இயல்,
சமய இயல், அரசியல், பொருளியல், அறிவியல் ஆகியவற்றோடு விவசாயம், தோட்டப் பயிற்சி,
வியாபாரம், உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டுக்கல்வி, பயணக்கல்வி முதலியனவும்
இடம்பெறுகின்றன. இவற்றுள் தொழிற்கல்வியின் தேவையினை வற்புறுத்துகிறார். மாணவன்
பள்ளிப் படிப்பு முடிந்ததும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தி, தன்னம்பிக்கை உணர்வை ஊட்ட வேண்டுமென்கிறார். இன்று கல்வியியலாளர்
பலரும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் கல்வித்திட்டமல்லவா இது? ஆனால் நடைமுறையில்
அதைச் செயல்படுத்த இயலாததாலேயே சமூகத்தில் இளைஞர்களின் வேலையில்லாதத் திண்டாட்டமும்
வன்முறையும் நாளும் நாளும் வளர்ந்து வருகின்றன. இனியாவது விழித்துக் கொண்டால்
பாரதியின் விருப்பம் நிறைவேறும்.
5.6.3 அறிவியல் நோக்கு
மக்களிடையே நிலவும் தேவையற்ற அச்சத்தையும், பொருளற்ற மூடநம்பிக்கைகளையும்
தகர்க்க, அறிவியல் நோக்கும் அறிவியல் நுட்ப அறிவும் தேவை என்பதை உணர்த்துகிறார்
பாரதியார். எனவே வெளிநாட்டினரின் அறிவியல் நுட்பங்களைப் பற்றிக் கூறும் நூல்களைத்
தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும், புதிய அறிவியல் நுட்பங்களைக் கூறும்
நூல்களை நாமே படைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகின்றார். அவருடைய அறிவியல்
பார்வை வேறொரு பாடத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
|