| 5.1 வாழ்வும் வாழும் முறைமையும் :பாரதியின் நோக்கில் |
பாரதியார், வாழ்க்கை என எதனைக் கருதுகின்றார்? அவர் வாழ்க்கைக்குத் தரும் விளக்கம் யாது? முதலில், அவரது பாடல்களில் இவ் வினாக்களுக்கான விடையினைக் காண்போம்.
'ஸரஸ்வதி தேவியின் புகழ்' பாடும் தோத்திரப் பாடலில்,
"மான மற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ?"
என வினவுகிறார் பாரதியார். எனவே, அவரது கருத்தில் மண்ணில் மானவுணர்வோடு- மனிதப் பண்போடு - வாழும் வாழ்வே 'வாழ்வு' என்பதாகும். இங்ஙனம்அன்றி, 'வந்தான் வாழ்ந்தான் போனான்' என்னும் அளவில் ஒருவன் வாழ்வதற்குப் பெயர் 'வாழ்வு' அன்று; அது 'வீழ்வு'.
'பாப்பாப் பாட்டிலு'ம் வாழும் முறைமை பற்றிப் பாப்பாவுக்கு அறிவுறுத்தும் பாங்கில்,
"உயிர்களிடத்தில்அன்பு வேணும்; - தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமை யடி பாப்பா"
(பாப்பா பாட்டு : 61-64)
எனக் கூறி இருக்கிறார் பாரதியார். வாழும் முறைமை பற்றிப் பாடுவதில்அவருக்கு உள்ள ஆர்வத்தையும் முனைப்பையும் இவ்வரிகளின் வாயிலாக நாம் உணரலாம்.
5.1.1 வீணையைப் புழுதியில் எறிவார் உண்டோ?
மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவரிடத்திலும் ஓர் ஆற்றல் - ஒரு திறன்- அமைவது உண்டு. அத்திறனை மானுடத்தின்
மேன்மைக்காக, மாநிலத்தின் உயர்விற்காக, பயன்படுத்துவதே வாழ்வின்
நோக்கமாகும். தமக்குள் பொதிந்து இருக்கும் திறனை அறிந்து, தம் சுற்றத்தின் வளர்ச்சிக்காக
அர்ப்பணிப்பதில் தான் வாழ்வைப் பொருள் உடையதாக ஆக்க முடியும். அவ்வாறு இன்றி, கிடைத்த
திறனைப் புழுதி படிய விடுவது, வாழ்வை வீணடிப்பதாகும்.
தம் பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித்திட விரும்பினார் பாரதியார். வையகத்தைப் போற்றி வளர்த்திடத் தம் கவித்திறன் பயன்படாது போய்விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது அவருக்கு. உள்ளம் பதைக்கிறது; தம்மைப் படைத்த இறைவியிடமே முறை இடுகிறார்:
நலங்கெடப் புழுதியில் எறிவது உண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்;
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி; - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?"
நல்லதோர் வீணை (நல்லதோர் வீணை:1)
(புரிகுவையோ= செய்வாயோ?)
'நல்ல நாதம் தரும் வீணையின் இசைப் பயனை நுகராமல்,யாரேனும் அதைப் குப்பை மேட்டில் கொண்டு போய் போடுவாரோ? ஒளிவிடும் அறிவு என்னுள் உறைந்து கிடக்கிறது. அதுவும் நீ கொடுத்தது. மாநிலத்தின் இருள் அகற்ற வல்ல ஒளி அது. உள்ளே மறைந்து இருப்பதால் பயனற்றதாகக் கிடக்கிறது. அதை வெளிக் கொணரும் வல்லமை சேர்ந்தால் மாநிலம் இருள் அகன்று பயன் பெறும்.இல்லை எனில், பூமியில் என் வாழ்வு வெறும் நிலச்சுமை என முடிவுறும்.சிவசக்தி! எனக்கு அறிவு ஒளி் கொடுத்த நீ, அவ்வொளியினால் மாநிலம் பயன் பெறச் செய்வதற்கு வல்லமை கொடுக்க மாட்டாயா?'என்று நியாயம் கேட்கிறார் பாரதியார்.
நிலச் சுமையென வாழ்ந்திடும் ஒருவன் 'மனிதன்' என்று சொல்லப்படுவதற்கே தகுதி படைத்தவன் அல்லன்; மனிதன் என்றால், அவன் இந்த மாநிலம் பயனுற வாழ வேண்டும்; வாழ்வாங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.இல்லாவிட்டால், இந்த உலகில் அவன் ஆறறிவு படைத்த மனிதனாகப் பிறப்பெடுத்ததில் எந்தப் பொருளும் இல்லை.
5.1.2முறையாக வாழ வேண்டுவன
தன் உள்ளத்தின் அவல உணர்வுகளைக் கேள்விகளாக்கி தெய்வத்திடமே நியாயம் கேட்டபின், பாரதியார் மனம் அமைதி கொள்கிறது. தொடர்ந்துதம் நிலையினை மேம்படுத்த, தம் திறனுக்கு வல்லமை சேர்க்க, தமக்கு என்ன என்ன வேண்டும் என்று பட்டியல் இடுகிறார், கேளுங்கள் - அவர்பாட்டின் அடுத்த பகுதியினை!
"விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன், - நித்தம்
நலமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்,
தசையினைத் தீ ச் சுடினும் - சிவ
சக்தியைப் பாடு நல்லகம் கேட்டேன்,
அசைவறு மதி கேட்டேன்; - இவை
(நல்லதோர் வீணை : 2)
பாரதியார் சிவசக்தியிம் தமக்கு இவையெல்லாம் அருள வேண்டும் என்கிறார்:
1. விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்.
(விசையுறு பந்து = விரைந்து எகிறும் பந்து)
2. நசையறு மனம். (நசையறு = ஆசை இல்லாத)
3. நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர்.
(நித்தம் = நாள் தோறும்); நவம்= புதிது)
4. தசையினை தீச் சுடினும் சிவ சக்தியை பாடும் நல்லகம்.
(நல்லகம் = நல்ல மனம்)
5. அசைவறு மதி. (அசைவறு = நெறி தவறாத, சலனப்படாத)
நல்ல உடல் இயக்கம், ஆசை இல்லாத மனம். புதுமை நிலைக்கும் உயிர் (நாளுக்கு நாள் மாறாதிருக்கும் புத்துணர்வு) தெய்வ பக்தி, கலங்காத அறிவு -
இவை ஐந்தும் வாழ்வாங்கு வாழ விரும்பும் அனைவருக்கும் அவசியம் வேண்டுவன என்பது பாரதியின் குறிப்பு.