3.4. பிற சமயத் தெய்வங்கள்

இது வைதிகச் சமயமல்லாத புத்த சமயம், கிறித்துவ சமயம், இசுலாமிய சமயம் போன்றவற்றைக் குறிக்கும். பாரதி பிற சமயங்களையும் மதிக்கத் தெரிந்தவர். அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களைத் தம் சகோதரர்களாகக் கருதுகிறார். ஆகவே, அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் பாடுகிறார்.

3.4.1 புத்தர்


ஆசையே துன்பத்திற்குக் காரணம் என உலகிற்குப் போதித்தவர் புத்தர்.பாரதி தாம் கண்ட கனவில். புத்தரின் அருள் ஒளி தம் மீது பாய்ந்ததாக ஆரிய தரிசனம் என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

3.4.2 இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான். அவருடைய தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவாரோ அது போல் பாரதியின் பாடல் விளங்குகிறது. இயேசுவைப் பற்றி அவர்
பாடிய,

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்

நாசம் இன்றி நமைநித்தம் காப்பார்
நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!

(இயேசு கிறிஸ்து - 1)

என்னும் பாடல், ‘நான்’ என்ற அகந்தையை மனிதர்கள் அழித்தால் இயேசு போல் மகிமை பெறலாம் என்று காட்டுகிறது.

3.4.3 அல்லா

பாரதி எல்லா மதங்களையும்
மதிப்பவர் என்ற நிலையில் அல்லாவைப் பாடுகிறார். கல்லார்க்கும், பொல்லார்க்கும், எல்லார்க்கும் அருள்புரியும் அல்லாவின் எளிமையைப் பாடுவதன் மூலம் அந்தச் சமயத்தின் எளிமைத் தன்மையைப் பிறருக்குக் காட்டுகிறார் (அல்லா).

பாரதி தெய்வப் பாடல்களை விநாயகர் நான்மணிமாலையில் தொடங்கி ‘அல்லா’வில் கொண்டு முடிக்கிறார். பாரதியார் கடவுளைப் பற்றிய நோக்கில் ஒரு பொது மனிதனாகவே விளங்குகிறார்.