"எதுவும் தன் விருப்பப்படி செய்து
அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத் தான் பொறுப்பாளியாக
இருப்பது தான் விடுதலை" (பாரதியார் கட்டுரைகள், பக்:99) |
தீரத்திலே, படைவீரத்திலே, நெஞ்சில் ஈரத்திலே, (ஈரம் - இரக்கம்)
உபகாரத்திலே உயர்ந்த நாடு என்றெல்லாம் பாரதியார் மிகவும் போற்றிப் பாடிய
பாரத நாடு முன்னாளில் எப்படி இருந்தது? இன்று காண்பது போல் ஒன்றுபட்ட இந்தியாவாக
இருந்ததா? இல்லை. நாடு சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை அரசர்களும்,
குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். இந்தியா ஒரு தலைமையின் கீழ் இயங்கவில்லை.
மேலும் மக்களிடையே காணப்பட்ட பல்வகையான வேறுபாடுகளின் காரணமாக
ஒற்றுமையின்மை நிலவியது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் வெளிநாட்டினர்.
வாணிகம் செய்ய வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலும் தலையிட்டனர். ஆட்சியையும்
கைப்பற்றினர். இவ்வாறு இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டது.
இங்ஙனம் அடிமைப்பட்ட இந்தியாவின் அடிமைத்தனத்தை எண்ணி வருந்தி,
அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பலரும் போராடினார்கள். அந்த விடுதலைப்
போராட்டத்தில் பாரதியாரும் தம்மை இணைத்துக் கொண்டார். மேலும் தம் உணர்வுகளைத்
தாம் இயற்றிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவை பற்றிய செய்திகள் இந்தப்
பாடத்தில் இடம் பெறுகின்றன.
|