2.3 சாதி விடுதலை |
 |
சாதி விடுதலை என்பது சில பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும்
இந்திய சமூகத்தின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்ற நிலையைக் குறிக்கும்.
இந்தியாவில் பல்வேறு சாதிப் பிரிவுகள் காணப்பட்டன. வெகு காலத்திற்கு
முன்பு அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தொழிலின்
அடிப்படையில் காணப்பட்டன. நாட்கள் செல்லச் செல்லப் பல்வேறு தொழில்கள் தோன்றின.
ஒரு தொழில் செய்வதன் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட பெயர் நாளடைவில்
அத்தொழில் செய்யாவிடினும்
நிலைத்து நின்றது. இத்தகைய சாதிப்பிரிவால் மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தது.
சாதிச் சண்டைகள் மிகுந்திருந்தன. இந்தப் பலவீனமே ஆங்கிலேயருக்குப் பலமாக
அமைந்தது. இத்தனை சாதிப் பிரிவுகள் உள்ள நாட்டில் இவர்கள் எப்படி ஒன்றுபடுவார்கள்
என்று இந்தியர்களை மலிவாக எடைபோட்டனர்.
சமூகச் சீர்திருத்த
எண்ணம் கொண்ட பாரதியார், இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மைக்குக் காரணம்
சாதி சமய வேறுபாடுகள் என்று உணர்ந்தார். அந்த உணர்வுகளை மக்கள் விட்டுவிட்டால்
நாட்டில் ஒற்றுமை ஓங்கும் என்பதறிந்தார். அதற்காகவே, அந்தணர், அந்தணர் அல்லாதவர்
ஆகிய எல்லோரும் ஒன்றே என்ற கருத்தில்,
ஜாதி மதங்களைப் பாரோம் . . . . . . .
வேதிய ராயினு மொன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினு மொன்றே!
|
(வந்தே மாதரம் - 1)

.
. . . ........................ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
|
(விடுதலை! விடுதலை! விடுதலை! - 2)
என்று சாதி சமயம் அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்தார்.
தமிழ் நாட்டின் தென் மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் ஜமீனைச்
சேர்ந்த கழுகுமலை என்ற ஊரில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு
விட்டது. அப்போது உற்சவ நேரம். வீதியில் தேரில் சுவாமியை அழைத்து வருவது
அங்கு மரபு. ஆனால் தகராறு காரணமாகத் தேரை விடக்கூடாது என்று மறித்தார்கள்.
அச்சமயம் கழுகுமலையின் கண்காணிப்பாளராக இருந்த வேங்கடராயர் கலகம் நடந்த இடத்தைப்
பார்வையிடச் சென்றார், ’இவன் யாரடா, பார்ப்பான் வழக்குத் தீர்க்க வந்தவன்’
என்று சொல்லி யாரோ அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். இந்தச் சம்பவம்
பாரதியின் நெஞ்சை வேதனைக்கு உள்ளாக்கியது. சாதிச் சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்,
சாதி விடுதலை மிகவும் அவசியம் என்று அவர் கருத இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாயிற்று.
ஆகையால் இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் மக்கள் தம் வேறுபாடுகளைக்
களைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று பாரதி பாடிய பாடலைப் பாருங்கள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
|
(பாரத நாடு, வந்தே மாதரம் - 1)
(தாழ்வு = மதிப்புக்குறைவு)
இந்தியர்கள் தமக்குள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வழக்கிட்டுக்
கொண்டிருந்ததைக் கண்ட பாரதியார்.

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
|
(பாப்பாப் பாட்டு - 15)
(தாழ்ச்சி = குறைவு)
என்று குழந்தையைப் பார்த்துப் பாடுகிறார்.
2.3.1 தீண்டாமை
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத்
தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்த அவலத்தைச் சுட்டிக் காட்டவே பாரதியார்
‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் சமூகச் சீர்திருத்தக் கதை எழுதினார். அதன் முகவுரையில்
பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி, ஓர் உயிர். தொழில் வெவ்வேறாக
இருக்கலாம். ஆயினும் உயர்வு தாழ்வு கூடாது என்றார். ஆறில் ஒரு பங்கு என்னும்
நூலை உழவுத் தொழில் புரியும் பள்ளர், பறையர் முதலிய வைசிய சகோதரர்களுக்கு
அர்ப்பணம் செய்கிறேன் என்று எழுதினார். (பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும்,
பக் : 98) பறையன், பள்ளன் என மரியாதைக் குறைவாகச் சமுதாயத்தில் கூறப்பட்ட
சொற்களைப் பறையர், பள்ளர் என மரியாதையுடன் உயர்த்திக்
கூறியவர் பாரதியே. பறையன் என்று கூறுவது இன்று சட்ட விரோதம். பாரதி கண்ட
கனவு நனவாகியது. அவர்கள் இன்று விடுதலை பெற்று விட்டார்கள். இன்னும் சில
தளைகள் அவர்கள் நீங்கி முழு விடுதலை அடைய வேண்டும். அதுவே பாரதி கண்ட இலட்சியக்
கனவு.

தென் ஆப்ரிக்காவில்
‘இன ஒதுக்கல்’ கொள்கை மூலம் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டி,
நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை எல்லாம் அந்நிய நாடுகளில் பிறர் இந்தியருக்குச்
செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார் பாரதியார். இப்படி பாரதியைத் தவிர வேறு
யார் கூற முடியும்? விடுதலை பெற வேண்டுமாயின், சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவராகக்
கருதும் மனப்போக்கை இந்து மக்கள் மாற்றினாலன்றி விடுதலை கிடைக்காது என்று
மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். (பாரதியாரும் சமூகச்
சீர்திருத்தமும், பக்.103)
எல்லோருக்கும் விடுதலை
பாரதியார் விடுதலை
பற்றிப் பாடும்போது, ‘விடுதலை! விடுதலை! இங்குப் பறையருக்கும் விடுதலை!’
என்று முதலில் பறையரைப் பற்றிப் பாடுவது அந்தச் சாதி மக்கள் சமுதாயத்தில்
பட்ட துன்பத்தைப் புலப்படுத்துகிறது. மேலும் அப்பாடலில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு
அடங்கிக் கிடந்த தீயர், புலையர், பரவர், மறவர், குறவர் ஆகிய அனைவருக்கும்
விடுதலை என்று ஆணையிடுகிறார். அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். பாரதியின் நம்பிக்கை
நம்மையும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
எல்லோருக்கும் எல்லாமும்
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் ‘பாரத
சமுதாயம்’ என்ற பாடலில்,

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
|
(பாரத சமுதாயம் - 4)
என்ற சமத்துவ சமூக நீதியைப் பாரதியார் காட்டுகிறார்.
பிரெஞ்சுப் புரட்சியின்
விளைவாக எழுந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முப்பெரும்
முழக்கத்தை எவ்வாறு செயல்படுத்தலாம்? சாதிப் பிரிவை ஒழித்தால் செயல்படுத்தலாம்.
இந்த எண்ணம்,

தகரென்று கொட்டு முரசே! பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்
|
(முரசு - 18)
(தகர் = அழி)
என்னும் பாடலில் சாதிப் பிரிவைத் தகர்த்து எறிய ஆணையிடும் குரலாய்
ஒலிக்கிறது.
‘போகின்ற பாரதம்’ என்ற பாடலில்,

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
(போகின்ற பாரதம் - 4)
என்ற பாடலடி சாதி உணர்வு கூடாது என்று வலியுறுத்துவதைக் காட்டுகிறது.
2.3.2 சாதி ஒழிப்பு
சாதி ஒழிப்பு என்பது சாதிப் பிரிவை இல்லாமல் ஆக்கும் செயலைக்
குறிக்கும். சாதிப்பிரிவை ஒழிக்க உதவும் ஆயுதம் எது? கல்வி. கல்வி என்னும்
ஆயுதத்தால் வீழ்த்தலாம். பாரதியார் இதை,

வாழி, கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநி கர்ச
மானமாக வாழ்வமே!
|
(தேசியப் பாடல்கள், விடுதலை -2)
(எய்தி = அடைந்து)
என்ற பாடலடிகளில் உணர்த்தியிருக்கிறார்.
பாரதியின் நடுவு நிலைமை
பாரதியார் தம்
சாதியினரான அந்தணர்களிடம் உள்ள தவறைச் சுட்டிக் காட்டத்
தயங்கவில்லை.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இன்னாளி லேபொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார் |
(மறவன்
பாட்டு - 5)
(ஏது = எதுவும்,
பார்ப்பார் = அந்தணர்)
என்ற பாடல் பாரதியின் நடுவு நிலைமைப் பண்பைக் காட்டுகிறது.
கனகலிங்கம்

தாழ்ந்தகுலத்தில்
பிறந்த இரா.கனகலிங்கத்தைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொண்டார். இங்ஙனம்
சாதிப்பிரிவை ஒழிக்கும் செயலில் தாமே முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டினார்
பாரதி.
சாத்திரமா? சதியா?
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் சாத்திரத்தைக்
கண்டிக்கும் வகையில் அது சாத்திரமல்ல ‘சதி’ என்றார்.

சூத்திர னுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரஞ் சொல்லிடுமாயின் அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம் |
(உயிர்
பெற்ற தமிழர் பாட்டு-ஸ்மிருதிகள்-13)
(சூத்திரர் = அந்தணர் அல்லாதோர்,
பார்ப்பு =
அந்தணர்)
இவ்வாறு சாதிப் பிரிவுகளை நீக்கிச் சமூக நீதிக்கு வழிகாட்டினார்
பாரதியார்.
|