2.4 சமய விடுதலை |
 |
இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட
நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையைக் குறிப்பது சமய விடுதலை.
சமயங்கள் எல்லாம் மனிதனை ஒன்றுபடுத்தவே தோன்றின. ஆனால் சமயத்தின் பெயரால்
மனிதர்கள் வேறுபட்டு, ஒற்றுமையின்றி இருந்தனர். பாரதி இதைக் கண்டு வருந்தினார்.
பாரத நாட்டு மக்களிடம் காணப்பட்ட சமயக் காழ்ப்பு (வெறுப்பு) உணர்ச்சி நீங்கப்
பாடுபட்டார். எல்லோரும் தம் வேற்றுமைகளை நீக்கி ஒன்றுபட்டு வாழ்வதற்கான வழியைத்
தேடினார்.
அந்த வழி அறிவென்று கண்டார்.
2.4.1 அறிவே தெய்வம்
பாரதியார் கொள்கைப்படி
பார்த்தால் ‘சமயம்’ என்பது மக்களுக்குக் கடவுள் உணர்வை ஊட்டி அவர்களைக் கடவுள்
நெறியில் நிறுத்துவது. மக்களிடம் காணப்படும் பொறாமை, ஆசை, அறியாமை முதலியவற்றை
நீக்கி அன்பு, அருள், அறம் முதலிய நற்குணங்களைத் தருவது, மக்களைத் தெய்வத்
தன்மைப் பெறச் செய்வது என்பனவாகும். ஆகவே, தெய்வம் பல சொல்லி வாழும் மனிதர்களைப்
பார்த்து, அறிவைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் பாரதி உண்மையும்
தெய்வமென்று காட்டுகிறார். உண்மை அறிவின் ஒரு பகுதி அல்லவா? ஆகவே,

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள்! - எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்று
ஓதி அறியீரோ?
|
(அறிவே தெய்வம் - 2)
(மதியிலி = அறிவு இல்லாதவர்,
ஓதி = சொல்லி)
என்று அறிவே தெய்வம் என்று உணர்த்துகிறார். அறிவின் வழி நடந்தால்
பிணக்கும், போரும் இல்லாமல் வாழலாமே!
தெய்வம் ஒன்று
உலகில் உள்ள மக்கள்
அனைவரும் வணங்கும் தெய்வம் ஒன்றே. நெருப்பை வணங்கும் அந்தணர், மேற்குத் திசையை
நோக்கி வணங்கும் இஸ்லாமியர், சிலுவையின் முன் நின்று இயேசுவை வணங்கும் கிறித்துவர்
ஆகியோர் கும்பிடும் தெய்வம் ஒன்றே. அது எல்லாப் பொருளிலும் கலந்து நிற்கிறது.
ஒவ்வொரு மதத்தவரும் குறிப்பிடும் இறைவன் பெயர்தான் வேறுபட்டுள்ளது என்று
மக்களை நல்வழிப்படுத்தும் வகையில்,

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக் குள்ளே தெய்வமொன்று இதில்
பற்பலச் சண்டைகள் வேண்டாம் |
(முரசு
- 13)
என்று சண்டையில்லாமல் வேற்றுமை நீங்கி வாழ முழக்கமிடுகிறார்.
எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் பாரதத் தாயின் வயிற்றில்
பிறந்தவர்களே. அவர்கள் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர்கள். எனவே, சமய உணர்வை
நீக்கி எல்லோரும் ‘பாரதத் தாயின் மக்கள்’ என்ற பரந்த மனப்பான்மையை வளர்க்க
ஆசைப்பட்டார்.
எல்லோரும் ஒன்று
சமய வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய மக்களைப் பிரித்தாளும்
சூழ்ச்சி செய்தனர் ஆங்கிலேயர். வங்காளப் பிரிவு இந்துக்களும் இசுலாமியர்களும்
வேற்றுமை பாராட்ட வித்திட்டது. சமய வேறுபாடின்றி இந்தியர்கள் ஒன்று பட்டு
நின்றால் பாரதநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை இந்திய
மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என்று எண்ணினார் பாரதியார்.
சாதிச் சண்டையும், சமயச் சண்டையும் இந்திய மக்களிடம் இருக்கும்
வரை தம்மை வெளியேற்ற முடியாது என வெள்ளையர்கள் எண்ணினர். இந்த எண்ணத்தை இந்திய
மக்களுக்குத் தெரிவிக்கக் கருதிய பாரதியார்,

ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டைப் போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! கண்முன்
நிற்கொ ணாது போடா!
|
(தொண்டு செய்யும் அடிமை - 2)
(நிற்கொணாது = நிற்காமல்)
என ஒரு வெள்ளைக்காரன் இந்தியக் குடிமகனைப் பார்த்து ஏளனமாகக்
கேட்பது போல் நாடக அமைப்பில் உரையாடல் அமைத்து இருப்பது சுவையான கற்பனை.
அதற்கு விடைதருவார் போல

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?
|
(வந்தே மாதரம் 1,3)
என அமைத்திருப்பது பாரதியின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.
பாரதியாரின் சமயக் கொள்கை
பாரதியாரின் சமயக் கொள்கை குறித்து அவரது மாணாக்கர் ரா.கனகலிங்கம்,

‘சமய உணர்ச்சியைக் கொண்டே, பக்தியாகிய சக்தி
ஆயுதத்தைச் சுழற்றிக் கொண்டே, வேற்றுமை உணர்ச்சிகளை
வெட்டிக் களைந்து சமதர்ம விதையை ஆழமாக விதைத்துச்
சிறந்த நற்பயனை விளைவித்துக் கொள்ளலாம் என்பது
பாரதியார் கனவு’ (பாரதியார் இதயம், பக், 51)
என்று கூறியிருக்கிறார்.
பாரதியார் எந்தவொரு
சமயத்தையும் பெரிதெனக் கொள்ளாமல் வேற்றுமைகளுக்குள்ளே ஒற்றுமை காண முற்பட்டார்.
‘ஸ ரி க ம ப த நி’ என்ற ஏழும் வெவ்வேறான எழுத்துகள். ஆயின் அவற்றை
இராகமாகப் பாடும்போது மனத்தை ஈர்க்கும் இனிய ஓசை கேட்கிறது அல்லவா? அதுபோல்
எல்லாச் சமயங்களிலுமுள்ள சிறந்த கருத்துகளை மக்கள் உணர வேண்டும். அப்போதுதான்
இந்தியர் இசைந்து வாழலாம் என்று நம்பினார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது
இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா?
செயல் வீரர்
பாரதியார் சொல் வீரராக இல்லாமல் செயல் வீரராக இருந்தார்.
பிற சமயத்தவரோடு எவ்விதம் பழக வேண்டும், அந்தச் சமயங்களை எவ்விதம் மதிக்க
வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியது மட்டுமன்றி மற்றவர்களுக்குத் தாமே வழி
காட்டினார் வாழ்ந்தும் காட்டினார். இயேசுவையும், அல்லாவையும் இதயங்கனிந்து
பாடித் துதித்தார். இந்த மகத்தான சமயப் புரட்சியைத் துவக்கிய பெருமை பாரதிக்கு
உண்டு. தாயுமானவரும் வள்ளலாரும் நடந்த பாதையில் பாரதி தம் அடிச்சுவடுகளைப்
பதித்துச் செல்கிறார்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
|
(முரசு - 12)
என்று எம்மதமும் சம்மதமாகக் கொண்டு வாழ்ந்தார். பெயர்கள்
வடிவங்கள் பலவானாலும் அவை ஒரே தெய்வத்தைக் குறிப்பிடுகின்றன என்று நம்பினார்.
ஆகையால் வேற்றுமை உணர்வின்றி எல்லா மதத்தின் கடவுளையும் பாடித் துதித்தார்.
இவ்வாறு பாரத மக்கள் சமய உணர்விலிருந்து விடுதலை பெற உழைத்தார்
பாரதி. அவர் கனவு கண்ட ‘சமதர்மக்கொள்கை’ இந்தியாவில் வளர்ந்து பரவினால் அங்கே
பேணுகின்றோம் என்கின்ற பெருமைக்கும் பீழையுறுகின்றோம் (சார்ந்திருக்கின்றோம்)
என்ற சிறுமைக்கும் இடமிருக்காது அல்லவா?
ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்நியரிடமிருந்து பெறும் விடுதலை
மட்டுமல்ல. முதலில் தம் நாட்டிற்குள் காணப்படும் தேவையற்ற கட்டுப்பாட்டுக்குள்
முடங்கிக் கிடக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். அவற்றிலிருந்து
விடுபட்டால் அந்நியரிடமிருந்து எளிதில் விடுதலை பெறலாம். இந்த நோக்கில் முதலில்
பெண் விடுதலை, சாதி விடுதலை, சமய விடுதலை முதலியனவற்றைக் கூறி, இறுதியில்
அரசியல்
விடுதலையை வற்புறுத்துகின்றார் பாரதியார்.
|