பாட்டின் திறத்தால் வையத்தைப் பாலித்திட நினைத்தவர் பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், கணநேரமும் சோராதிருத்தல் என்று தன் வாழ்வின் இலட்சியத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தாழ்வு அடைந்து, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, பாழ்பட்டு நின்ற சூழல். நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமின்றி மக்கள், எதைக்கண்டும் அஞ்சிய காலம்; இத்தகைய சூழலில் பாரதி பிறந்து வளர்ந்தார். அவர் வளர்ந்த சூழலிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு கவிஞனாக உருப்பெற்றார். புதுநெறி காட்டிய பேராளனாகத் திகழ்ந்தார். பாரதியின் சமகாலத்துப் புலவர்களை நோக்கும்போது, பாரதியின் தனித்துவம் புலனாகும். ஒரு யுகக் கவிஞனாக அவர் வளர்ந்ததும் வாழ்ந்ததும் தெளிவாகும்.
எந்த ஒரு படைப்பாளரும் பிறந்த நாட்டிற்கு மட்டும் சொந்தமாக மாட்டார். அவர் உலகச் சொத்தாகக் கருதத் தக்கவர். எந்த நாட்டில், எந்தக் காலத்தில், எந்தச் சமயத்தில் எந்த மொழியில் அவர் தம் படைப்பை அளித்திருந்தாலும் அவர் மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால் அவர் அனைவர்க்கும் சொந்தமானவர். அப்படிப்பட்டவர்களிலே ஒருவராகத் திகழ்பவர் பாரதி.
பாரதியை வேதாந்தக் கவியென்பார் ஒரு சிலர்; சமுதாயச் சீர்திருத்தக் கவியென்பார் வேறுசிலர்; தேசியக் கவியென்பார் மற்றும் சிலர்; பக்திக் கவியென்பார் மேலும் சிலர்; புரட்சிக்கவியென்று போற்றுவர் சிலர். இவையனைத்தும் பாரதி என்பது உண்மைதான். ஆயினும் எந்தக் குறுகிய வட்டத்திற்குள்ளும் பாரதி என்ற கவிஞனை அடைக்க இயலாது; அவர் காற்றைப் போல் சுதந்திரமானவர்; கடலைப்போல் ஆழமானவர்; விரிந்த மனம் கொண்டவர். அனைத்துலக மக்களையும் அரவணைத்துச் செல்லும் அற்புத உள்ளம் கொண்டவர். அதனாலேயே அவர் உலகக்கவியாக உருவானார்; மகாகவி எனப் போற்றப்பட்டார். அவரது உலகளாவிய நோக்கை இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது. |