3.7 தொகுப்புரை
(தமிழ் -4) பாடியவர் பாரதி. அவரைப் பலரும் பல கோணங்களில் பார்ப்பர். அவர் ஒரு விடுதலைக்கவி. சமூகச் சீர்திருத்தவாதி, புரட்சிக்கவி, தேசியக்கவி, பக்திக்கவி என்றெல்லாம் பாராட்டுவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரதி உலகக் கவி என்பதும் அவருடைய உலகளாவிய நோக்கு எத்தன்மையது என்பதையும் இப்பாடத்தில் படித்தீர்கள். விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைத் தம் உயிரைவிட மேலாகப் போற்றியவர் பாரதியார். நாட்டுச் சுதந்திரம், பெண்விடுதலை, பொருளாதார விடுதலை ஆகியவற்றை உலகளாவிய நோக்கில் பார்த்த பாரதியின் சிந்தனைகளை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். சமத்துவம் என்பது என்ன என்பதையும் மானுடர் தமக்குள் மாறுபாடில்லை; மதங்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை; ஆண், பெண்ணுக்குள் உயர்வு தாழ்வில்லை; யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். எல்லா மனிதருக்குள்ளும் எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருப்பது தெய்வம். இதை உணர்ந்தபின், எல்லோரும் சமம் என்று தெளிவு பெறுவீர்கள். அத்தெளிவின் பயனாக உலகத்து மக்களையெல்லாம் சகோதரர் என்று பாவிக்கும் எண்ணமும் அவர்தம் மகிழ்ச்சியில், துன்பத்தில் பங்கு கொள்ளும் சகோதரத்துவமும் தோன்றும். பாரதி, தம் வாழ்நாள் முழுவதும் இதற்காகவே வாழ்ந்ததும், அந்தக் கோட்பாடு உடைய உள்நாட்டு வெளிநாட்டுத் தலைவர்களைப் போற்றியதும் தெளிவாகப் புலப்பட்டிருக்கும். பாரதியின் உலகளாவிய நோக்கு என்பது உலகத்தார் அனைவர் மீதும் செலுத்தும் நேயமாகும். எனினும் மனிதநேயம் என்ற வட்டத்தில் மட்டுமே பாரதியை நிறுத்த இயலாது. ஏனென்றால் அவர் அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். அளப்பரிய அந்த அன்பு அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் அரவணைத்து நின்றது. பாரதியின் இந்த உலகளாவிய நோக்கு அற்புதமானது. நினைக்க நினைக்க வியப்பைத் தருவது!
|