4.7 உடற்கல்வி (Physical Education) |
|
உடற்கல்வி என்பது விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம்
உடல் ஆரோக்கியத்திற்காக அளிக்கப்படும் படிப்பைக் குறிக்கும். இதைச் ‘சரீரப்
பயிற்சி’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் பாரதி. (பாரதியார் கட்டுரைகள்,
பக்:393)
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ (Health is wealth) என்பது
பழமொழி. நோய் இல்லாமல் வாழ்வதற்கான வழிகளாகப் பாரதி கூறுவதைப் பாருங்கள்.
4.7.1. உடல் உழைப்பு
தன் வேலையைத் தானே செய்ய வேண்டும் (self-help) என்ற மகாத்மா
காந்தியின் கொள்கையை அனைவரும் கடைப்பிடித்தால் உடற்பயிற்சி யில்லாமல் உழைப்பின்
மூலம் நலமுடன் வாழலாம். கிணற்றில் நீர் இறைத்தல், தோட்டத் தொழில்கள் செய்தல்,
தன் துணிகளைத்தானே துவைத்தல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதால் உடற்பயிற்சி
பெறலாம் என்று கூறுகிறார் பாரதியார். (பாரதியார் கட்டுரைகள்,பக்: 393)
4.7.2 உடற்பயிற்சி
உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும்
செயல்களைக் குறிக்கும், உழைப்பின்
மூலம் பெறும் பயிற்சியோடு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும், உழைப்பின்
மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் பயிற்சி பெறும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட
ஒரு வேலையைச் செய்பவர்களுக்கு அந்த வேலையைச் செய்யும் உறுப்புகள் தவிர ஏனைய
உறுப்புகளுக்குப் போதுமான அளவு பயிற்சி கிடைக்காது, அந்தக் குறையைப் போக்க
உடற்பயிற்சி தேவைப்படுகிறது. அனைத்து உறுப்புகளும் நன்றாகச் செயல் பட்டால்தான்
ஆரோக்கியமாக வாழமுடியும். ஆகவே, உடற்பயிற்சி கொடுக்க இப்போது பல கருவிகள்
வந்துள்ளன.
அவற்றைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பு
மட்டும் போதாது என்பது அவரது எண்ணம். ஆரோக்கியமில்லாமல் படிப்பு மட்டும்
கொடுத்தால் படிப்பு வீணாகும். அற்ப ஆயுளில் இறக்க நேரிடும். சுவர் இருந்தால்
தானே சித்திரம் எழுத முடியும்? ஆகையால்
மாணவர்கள் உடற்கல்வி பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
|