4.8 அறிவியல் அணுகுமுறை

பாடங்கள் இருமுறைகளில் கற்பிக்கப்படுகின்றன.

1. வாய்மொழியாகக் கற்பித்தல்
2. செய்முறை(Practical) மூலம் கற்பித்தல்

 

4.8.1 வாய்மொழியாகக் கற்பித்தல்

தொடக்கக் காலத்தில் பாடங்கள் வாய்மொழியாகவே கற்பிக்கப் பட்டன. அறிவியல் வளர வளர வாய்மொழியால் மட்டுமே அனைத்தையும் கற்பிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் மொழிக்கல்வி, வரலாறு போன்ற பாடங்கள் வாய் மொழியாகவும், கரும்பலகையில் எழுதியும் கற்பிக்கப்பட்டன. இவை போதாது என்ற நிலையில், இதற்கு அடுத்த கட்டமாகப் படங்கள் தேவைப்பட்டன. ஆகையால், ஆசிரியர் பாடத்திற்குத் தகுந்த படங்களைக் காட்டிக் கற்பித்தனர். இது மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. வாய்மொழிக் கல்விக்கு மேலாக மாணவர் மனத்தில் பாடத்தைப் பதியச் செய்யப் படங்கள் உதவின.

பாரதியார் புவியியல் பாடங்களைக் கற்பிக்கும் போது, பூமியின், படங்கள், கோளங்கள், வண்ணப் படங்கள் முதலிய துணைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பக்:382) அப்போதுதான் அந்தப் பாடங்கள் மாணவர்களின் மனத்தை விட்டு அகலாது நிற்கும். ஆனால் அறிவியல் துறை வளர்ந்தபோது மேலே கூறிய கற்பித்தல் முறைகளை விடச் செய்முறைவழிக் கற்பித்தல் இன்றியமையாததாகி விட்டது.

 

4.8.2 செய்முறை வழிக் கற்பித்தல்

 

இது பாடங்களை மாணவர்களுக்கு விளக்குவதற்காக, செய்து காட்டிக் கற்பிக்கும் முறையைக் குறிக்கும். ‘ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் (செய்முறை) மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும் அவசியமாகும்’. (பாரதியார் கட்டுரைகள், பக்:389) என்று பாரதியார் கூறுவது செய்முறை வழிக் கற்பதன் தேவையை உணர்த்துகிறது. பாடங்களை வாய்மொழியாகவும், வண்ணப் படங்கள் மூலமாகவும் கற்பிப்பதைவிடச் செய்முறை வழிக் கற்பிப்பது வலிமையானது; சக்தி வாய்ந்தது. இதில் மாணவர் ஆசிரியருடன் கலந்துரையாடிப் பங்கேற்கும் நிலையும், மாணவர்கள் தாமே செய்து பார்த்துப் படிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, கற்றலும் கற்பித்தலும் இந்த முறையில் சிறப்பாக நடைபெறும்.

வேதியியல் பாடத்தில் வேதியியல் மாற்றம், வேதியியல் சிதைவு ஆகியனவற்றைச் செய்முறை மூலம் கற்பித்தல் மிகவும் அவசியம் என்று பாரதியார் தம் கட்டுரையில் கூறுகிறார். பாடம் கற்பிக்கும் போது இயன்ற அளவு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை. (பாரதியார் கட்டுரைகள், பக்: 389, 390) இது தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியார் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.