5.1 தாயுமானவரும் இராமலிங்க அடிகளும் |
|

கம்பர்
காலத்திற்குப் பின்பு எண்ணங்களை
வெளியிடுவதில் பழைய முறைகளும் ஒரே
மாதிரியான வடிவங்களும் சலிப்பை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். பாரதியார்
காலத்திற்கு முன்பு வாழ்ந்த தாயுமானவர்,
இராமலிங்க அடிகள் ஆகியோர் சிறிதளவு
சமுதாயச் சிந்தனை உடைய பாடல்கள்
பாடியிருக்கின்றனர்.
தாயுமானவர்,

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே
|
என்றும்,

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
|
(பராபரக் கண்ணி, 65,221)
என்றும் பாடியிருப்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல்
பார்க்கும் பரந்த உள்ளம் வேண்டும் என்று
விரும்பியதை
உணர்த்துகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற
வேண்டுமென்று உள்ளன்புடன் வேண்டியதையும் காட்டுகின்றது.

இராமலிங்க
அடிகள்
வாடிய பயிரைக் கண்ட
போதெல்லாம் வாடினேன்.
என்று நீரின்றி வாடும்
அஃறிணைப் பொருளுக்காகவும் இரங்கிப் பாடுகிறார். அவர்கள் காலத்திலும் இந்தியா
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது. ஆனால்
அவர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடவில்லை. ஆன்மீக விடுதலையை நோக்கமாகக்
கொண்டே பாடியிருக்கின்றனர். அவர்களுடைய குறிக்கோள் நாட்டுக் காதல் அல்ல,
இறைக் காதல்.
தாயுமானவர் இறைவன் மீது கொண்ட பக்தியால்,

பத்தர் அருந்தும் பரமசுகம் யானருந்த
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே
|
(பராபரக்கண்ணி, 270)
என்று பாடுகிறார். சிவபெருமானின் திருவடி அடைய வேண்டும்,
சிவபக்தர்கள் பெறும் பேரின்பம் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம்.
இராமலிங்க அடிகள் பாடிய,

இனி ஏதுறுமோ என்செய்கேன்
எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
கனியே கருணைக் கடலே என்
கண்ணே ஒற்றிக் காவலனே
|
(திருவருட்பா -இரண்டாம் திருமுறை ,933)
(ஏன்று கொளாய் = ஏற்றுக் கொள்வாய்,
ஒற்றி =
திருவொற்றியூர்)
என்னும் பாடல் தமக்கு ஏது நிகழுமோ என்று அஞ்சித் தம்மை ஏற்றுக்
கொள்ளுமாறு இறைவனிடம் கேட்பதாக விளங்குகிறது.
|