காங்கிரஸ் இயக்கத்தில்
பெரும்
பங்கு பெற்றிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி, சேரன்மாதேவி குருகுலத்தில்
பார்ப்பனப் பிள்ளைகளுக்கும், பார்ப்பனர்
அல்லாத பிள்ளைகளுக்கும் தனிப்பந்தி வைத்து உணவிடுவதை அறிந்தார்.
அதற்கு ஆதரவளித்த தேசபக்தர் வ.வே.சு. ஐயரின் செயலைப் பெரியார்
கண்டித்தார். காங்கிரஸ் இயக்கத்தவர் வருணாசிரமத்தையும் சாதிப்
பாகுபாட்டையும் கண்டிக்காத செயலை வெறுத்த பெரியார் காங்கிரசை
விட்டு வெளியேறினார். பெரியாரின் முயற்சியில் சுயமரியாதைச் சங்கம்
தோன்றியது. பெரியார் தோற்றுவித்த 'குடி அரசு' இதழ் சாதி மத எதிர்ப்பு,
கடவுள் எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக
வெளிப்படுத்தியது. பாரதிதாசன் இந்த இதழால்
கவரப்பட்டார். சுயமரியாதை வீரரானார். 1938-இல் குடி அரசு ஏட்டில் பெரியார்,
"தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர்
சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு
வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும்
சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை
ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜன சமூகத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற
ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற
வேண்டுமானால், பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி
என்றுதான் கூறவேண்டும் . . . "
என்று எழுதியுள்ளதைக்
கவிஞரின் மகனார் மன்னர் மன்னன் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
நெருப்பில் துடித்திடும்
மக்கட் கெல்லாம் நல்ல காப்பு - நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும்
குளிர் தோப்பு.
என்று
சுயமரியாதைப் பெருமையைப் பாரதிதாசன் பாடுவார்.
|