2.0 பாட முன்னுரை
 

சமூகம் என்பது ஓர் அமைப்பு. அது யாராலும் உருவாக்கப்படாமல் தானே அமைவது. ஒரு சமூகம் உருவாக ஒத்த மனத்தினராக மனிதர் நெருங்கி வரவேண்டும். ஒரு பொதுமை கருதி ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். தத்தம் விருப்பு வெறுப்புகளை விட்டு ஒரு குறிக்கோளைக் கருதி ஒன்றிணைய வேண்டும். அதுவே சமூகம்; அதுவே சமுதாயம்.

விலங்குகளுக்குக் கூட்டமே உண்டு; சமூகம், சமுதாயம் என்ற அமைப்பு அவ்வுலகில் இல்லை. சமூகம் என்பதற்குத் திரண்டது என்பது பொருள். பாலில் வெண்ணெய் திரள்வது போல மாந்தரிடையே சமூகம் உருவாகும்.

சாதி சமய அடிப்படையிலான சமூகங்கள் உயர்ந்தன அல்ல; உயர்ந்த கருத்தின் அடிப்படையில் உருவாகும் சமூகங்கள் வையத்தை உய்விக்கும். இந்தியச் சமுதாயம் சிதறிக் கிடந்தது; மாநிலங்களாய்ப் பிரிந்து கிடந்தது; மதங்களால் போரிட்டுக் குலைந்தது. அடிமை இருளில் அறியாமைச் சேற்றில் புதைந்து கிடந்தது. அதனை ஒருமைப்படுத்த ‘விடுதலை’ என்னும் குறிக்கோள் தோன்றியது. இந்தியச் சமுதாயம் தோள்தட்டி ஆர்த்தது. விடுதலை பெற்றது. உரிமை வாழ்வு மலர்ந்தது.

உரிமை பெறு முன்பு இந்தச் சமூகம் எப்படி இருந்தது தெரியுமா? உப்புக் காய்ச்சுவதற்காகப் போராட ஓடுகிறது பாருங்கள் மக்கள் திரள்! உண்ணா நோன்பிருந்து நைகிறது பாருங்கள்! இப்படிப் போராடிக் கொண்டிருந்தது ஒரு சமூகம். அதன் மற்றொரு பகுதி எப்படி இருந்தது? இதோ பாரதியார் கூறுகிறார் கேளுங்கள்!
 

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த     
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்     
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்     
அஞ்சாத பொருளில்லை அவனியிலே     
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த     
மரத்தில் என்பார்; அந்தக் குளத்திலென்பார்     
துஞ்சுது முகட்டி லென்பார் மிகத்     
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

(பாரதியார் பாடல், பாரத ஜனங்களின் தற்கால நிலை: 1-8)
 

இப்படித்தான் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்தது நாடு. இதனை அகற்றத் தோன்றியவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இது, “மடமைச் சேறு எழுந்திரு வெளியே வா ஒளியை நோக்கிய உன் பயணம் தொடங்கு,” என்று அறிவுறுத்திய பாவேந்தரல்லரோ அவர்?