2.1
பாரதிதாசனின் சமுதாயம் - ஒரு விளக்கம்
|
E
|
•
வறியவர் நலிவும் உடையவர்
கொள்ளையும்
வறுமைப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது தமிழ்ச் சமுதாயம்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே, மிகக் கீழே கோடிக்கணக்கான மக்கள் நைந்து
நலிந்தனர். சிலர் மட்டும் செல்வராய், நில உடைமை கொண்டவராய், குறுநில
மன்னராய்த் திகழ்ந்தனர். வறுமைச் சமூகத்தின் உழைப்பைச் சுரண்டிச் செல்வச்
சமூகம் கொழுத்தது. வறியோர் எலியாக முயலாகக் கிடந்தார்கள். அஞ்சிக்
கிடந்த அவர்களைப் புலிவேடம் போட்டு மேலும்
அச்சுறுத்தினார் முதலாளிமார்கள்.
|

நாலுபேர்
கைகளில் கருவி ஏந்திப்
பாறைகளைப் புரட்டுகின்ற காட்சி
|
அதோ நாலுபேர் வெயிலில் வேர்வை அருவிகள் பெருகக் கைகளில் கருவி ஏந்திப்
பாறைகளைப் புரட்டுகின்றனர் பாருங்கள். அவர்களின் குழிந்த வயிறு, ஒட்டிய
கன்னங்கள், உலர்ந்த விழிகளைப் பாருங்கள். ஆனால் அங்கே குடைபிடித்துக்
கொண்டு ஒருவர் கொழுத்த உடலோடு நிற்பதைக் காணுங்கள்! இந்தக் காட்சியைக்
காணும் கவிஞனின் உள்ளம் கொதிக்கின்றது. இந்தச்
சமுதாயம் மாற்றப்பட வேண்டுமெனக் கருதுகின்றார்.
|
கூழுக்குப்
பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும்
நீதியோ? - புவி
வாழ்வதுதான்
எந்தத் தேதியோ?
|
|
(சாய்ந்த தராசு: 5-7, முதல் தொகுதி)
|
|
•
சமத்துவம்
சாத்தியம்
உலகம் இப்படியே இருந்துவிடாது என்றும் அவர் கருதுகின்றார். ஏழை கோழையாக
இருக்கும் வரைதான் இந்த நிலை இருக்கும். அவன் தாழ்ந்து குனிந்து பணிந்து
வாழும் நிலையிலிருந்து நிமிரும் நிலை வரும். அப்படி நிமிர்ந்தால் ஒரே
நொடியில் உலகம் மாறிவிடாதா எனக் கேட்கின்றார். கையிலே திருவோடுதான்
உண்டு என்று கூறும் ஓடப்பர் ஒருபுறம்; செல்வநிலையின் உச்சியிலே இருக்கும்
உயரப்பர் மற்றொருபுறம். ஏழையப்பராக இருக்கும் ஓடப்பரும், உயரப்பரும்
ஒன்றாக முடியுமா? முடியும் என்கிறார் கவிஞர்.
|
ஓடப்ப ராயிருக்கும்
ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால்
ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார்
உணரப்பா நீ!
|
|
(உலகப்பன் பாட்டு: 37-40, முதல் தொகுதி)
|
|
அடி, உதை என்றாலே அஞ்சுவோர் கீழோர் அல்லவா? அந்த நிலையிலேதான் இவர்கள்
சுரண்டிச் சுருட்டி வைத்திருக்கும் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்து
கொள்வார்கள். இயந்திரத்தில் இட்டுப் பிழிந்தால்தானே கரும்பு சாறுதரும்?
உலகம் வழங்கும் உடைமை எல்லாம் பொது எனும் மனநிலை வரவேண்டுமென்று பாரதிதாசன்
கருதுகின்றார். பொருளாதார நிலையில் ஒரு சமத்துவம் நிலவும் சமுதாயத்தையே
அவர் காண விரும்பினார்.
|
•
வறுமையின் காரணம்
நெருப்பில் கூடக் கண்மூடித் தூங்கலாம்; வறுமை வசப்பட்டவன் தூங்க முடியாது
என்றார் திருவள்ளுவர். கல்லுக்குள் வாழும் தேரைக்குக் கூட உணவு கிடைத்துவிடுகிறது;
அருகம்புல்லுக்குக் கூட இயற்கை ஓர் ஆடையைச் சுற்றியிருக்கிறது. ஆனால்
ஏழை மாந்தர்தம் நிலை என்ன? |
கந்தை அணிந்தோம்
- இரு
கையே விரித்தெங்கள் மெய்யினைப்
போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக்
கிடந்தோம்
|
|
(தொழிலாளர் விண்ணப்பம்: 33-36, முதல்
தொகுதி)
|
|
என்று கூறும் அளவிற்கு அவர்கள் நிலை தாழ்ந்து போய்விட்டது. ஒரு மொந்தைக்
கூழைப் பலர் மொய்த்துக் குடித்தார்களாம். ஈக்கள் எறும்புகள் போல் எண்ணிக்கையில்
பெருகிக் கிடப்பதனால் மொய்த்துக் குடித்ததாகச் சொல்கிறார். இந்த நிலைக்குக்
காரணம் யாது? தலைவிதியா? அப்படிச் சொல்லித்தான் கடந்த காலத்தில் ஏமாற்றினார்கள்.
பாரதிதாசன் காணும் புதிய சமுதாயத்தில், பொதுவுடைமை மணம் பரப்பும் சமுதாயத்தில்
அது நடவாது.
|
|
பாரதிதாசன் பகுத்தறிவு வாய்ந்த சமூகம் காண விரும்பினார். முன்னோர்கள்
சொன்னதை ஆராயாமல், வேதவிதி என்றும், உலக வழக்கம் என்றும், சாத்திரங்கள்
சொல்லியிருக்கின்றன என்றும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்,
அறிவால் எதனையும் ஆராயும் நிலை வேண்டுமென்றார். கடவுள் பெயர் கூறியும்
மதங்களின் பெயர் கூறியும் ஏமாற்றும் வழக்கங்களைச் சாடி அறிவுமிக்க
ஒரு சமுதாயம் தோன்றுவதற்கு அவர் குரல் கொடுத்தார்.
|
2.1.1 யார் படைத்த உலகம்? |
உலகத்தை யார் படைத்தார்?
கடவுள் படைத்தார் என்று சமய உலகம் கூறுகின்றது. கடவுள் படைத்த உலகம்
சமமாக அல்லவா இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர். நடவு செய்பவனுக்கு
நான்கணாக் கூலி; உடல் உழைப்பு இல்லாதவனுக்குக் கடல்போலச் செல்வம்.
இதுதான் கடவுள் ஆணையா? இப்படிப்பட்ட காட்சிகளைக் காணும் நேர்மையான
மனிதர் யார்க்கும் நெஞ்சுக்
கொதிப்பு வராதா?
|
இரந்தும் உயிர்வாழ்தல்
வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
குறள்
1062
|
என்று திருவள்ளுவரும் கூறினார். பிச்சை எடுத்து வாழவேண்டியது சிலர்க்கு
இவ்வுலகில் தலைவிதி என்றால் அப்படி விதித்தவன் அழிந்து தொலையட்டுமே
என்று ஆற்ற முடியாத அளவு திருவள்ளுவர் கொதிக்கவில்லையா? அவரைப் போலவே
பாரதிதாசனும் கொதித்துப் பேசுகிறார். உலகம் தொழிலாளரால் உருவானது என்று
மனித அறிவு கற்பிக்க வேண்டும். காட்டை நாடாக்கினோமே! கழனி திருத்தி
உழவு செய்தோமே! நாடுகளைப் படைத்தோமே! அங்கு நான்கு திசைகளிலும் வீதிகள்
வகுத்தோமே! வீடுகள் கட்டினோமே! மலையைப் பிளந்தோமே! கடலைத்
தூர்த்தோமே! கப்பல்கள் செலுத்தினோமே! தொழிலாளராகிய நாங்கள் படைத்ததல்லவா
இந்த உலகம் என்று கேட்கின்றனராம் புரட்சிக்கவிஞர் கண்ட தொழிலாளர்கள்.
|
2.1.2 எல்லார்க்கும் எல்லாம்
|
உலகத்தின் நலங்கள்
எல்லாம் இயற்கையின் கொடை. அவற்றைப் பயன்தர உருச்சமைத்தனர் தொழிலாளத்
தோழர். எல்லோரும் அவற்றைத் துய்த்தல் வேண்டும். “உலகம் உண்ண உண்; உடுத்த
உடுப்பாய்” என்பது பாரதிதாசன் கூற விரும்பும் அறிவுரை. |
எல்லார்க்கும்
எல்லாம் என்று இருப்பதான
இடம்நோக்கி நடக்கின்றது
இந்த வையம்
|
|
(பாண்டியன் பரிசு 56:4)
|
|
என்று அவர் பாடுகின்றார். எல்லார்க்கும் எல்லாம் என்று கருதுகின்ற
உள்ளமே தாயுள்ளம் என்கிறார் அவர், வேறு ஒர் இடத்தில்:
|
தூயஉள்ளம்
அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம்
ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ
இன்பம்!
|
|
(உலக ஒற்றுமை: 13-15, முதல் தொகுதி)
|
|
என்று மக்களெல்லாம் ஒன்றாய்க் காணும் பேருள்ளத்தின் பண்பு கூறுகின்றார்.
உள்ளத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடின் அந்நாட்டில்
ஏற்றத் தாழ்வுகளும் போட்டி, பொறாமை, பகை எனும் உணர்வுகளும் தோன்றமாட்டா.
ஆனால் அப்படிப்பட்ட உலகை அடைவதுதான் எளிதா? கவிஞர்களின் இலட்சியக்
கனவாக அன்றோ விளங்குகின்றது அவ்வுலகு!
இராமலிங்க
வள்ளலார், ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் ஆகிய மூவரும் ஒன்றாய்க்
கூடி உலகியல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றார். பலரும் கூறியிருப்பினும்
பாரதிதாசனே பணக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் குரலில் பொது உடைமையை
ஒத்துக் கொள்ளுமாறு பாடியவர் ஆவார்.
|
இப்பொழுதே
நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
|
|
(தொழிலாளர் விண்ணப்பம்: 53-56, முதல்
தொகுதி)
|
|
என்று தொழிலாளர் சினங்கொண்டு கூறுவதாகப் பாடிய முதல்
கவிஞர் அவரே.
|
2.1.3
கொலைவாளினை எடு
|
புரட்சிக் கவிஞர் சமுதாயத்தில்
எப்பாடு பட்டேனும் சமநிலையைக் கொண்டுவந்து விட வேண்டுமென்று விரும்பினார்.
ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடக்கும் ஏழைகளின் நிலையை எடுத்துரைக்கும்
வன்மை மிக்க குரலாக அவர் குரல் வெளிப்பட்டது. தமிழனே! நீ புலிக்குணம்
உடையவன் என்று வரலாறு கூறுவது பொய்யாய்ப் போகலாமா? உனது அதிகாரத்தை
நிறுவக் கொலைவாளினை எடு என்கிறார். |
வலியோர்
சிலர் எளியோர்தமை
வதையே
புரிகுவதா
மகராசர்கள்
உலகாளுதல்
நிலையாம்
எனும் நினைவா?
உலகாள
உனதுதாய் மிக
உயிர்வாதை
அடைகிறாள்
உதவாதுஇனி
ஒருதாமதம்
உடனேவிழி
தமிழா!
|
|
(வாளினை எடடா! 1-8, முதல் தொகுதி)
|
|
பாட்டின் நடையில் ஒரு வீறு, வீரக்கொப்பளிப்புத் தெரிகிறது பாருங்கள்.
பன்னெடுங்காலமாக உலகச்சமத்துவத்தை வேண்டுகோள் முறையிலும், அறிவுறுத்தல்
முறையிலுமே சான்றோர்கள் உரைத்து வந்த நிலையைக் கவிஞர் மாற்றினார்.
இதில் என்ன கெஞ்சுவது? இனி எவர் மிஞ்சுவது? என அடங்காச் சினம் கொண்டெழுந்த
போர்க்குரலாக அவர் பொதுவுடைமைப்பாடு எண்ணம் பலருடைய குருதி நாளங்களிற்
புகுந்து புரட்சி வேகத்தை உண்டாக்கிவிட்டது. |
2.1.4 சமத்துவப் பாட்டு
|
பாரதிதாசன்
காணவிரும்பிய சமுதாயத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் நிலையாக
நீங்கிச் சமத்துவம் இடம்பெற வேண்டுமென்று கூறினார். இதற்கு அடிப்படையில்
பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் பேதைமை ஒழியவேண்டுமென்று கூறினார்.
மனிதர் எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை உடைத்துவிட்ட அயலாரின் சூழ்ச்சியை
அவர் கடுமையாகச் சாடினார். பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம்,
சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கூறி அறியாமைப் பள்ளத்தில் பலரைப் புதைத்துவிட்ட
சூழ்ச்சியைப் பாரதிதாசன் போல யாரும் வெளிப்படுத்தவுமில்லை; கண்டிக்கவுமில்லை.
யார் தாழ்ந்தவர்கள்? என்ற வினாவுக்கு உழைக்கின்றவர்களே தாழ்ந்தவர்கள்
என்று உண்டாக்கி விட்ட வருணப் பாகுபாட்டைப் புரட்சிக் கவிஞர் ‘சமத்துவப்பாட்டு’
என்ற தலைப்பில் கண்டித்து எழுதுகின்றார். |
பொய்மை
வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி
- சகியே
நம்மில் நாம்காண்போமடி!
|
|
(சமத்துவப்பாட்டு: 365-368. மூன்றாம் தொகுதி)
|
|
என்று கூறுவதைக் கேளுங்கள். பாரதிதாசன்
காண விரும்பிய சமுதாயத்தில், சாதி, மதம், தீண்டாமை, பிறப்பில் உயர்வு
தாழ்வு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. |