3.0 பாட முன்னுரை
 

ஆண், பெண் என்ற இருபால்களும் உலக வாழ்வின் இயக்கத்திற்கு இன்றியமையாதன. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்வின் நிறைவிலேயே வையம் சிறக்கின்றது. வண்டிக்கு இருபுறம் அமைந்த சக்கரங்கள்; மனித உடம்பிற்கு இரண்டு கால்கள்; வானவெளிக்குக் கதிர் நிலவு என இரண்டு சுடர்கள், இப்படிச் சமமாக அமைந்த இரட்டைப் பொருள்களாக வாழ்க்கைக்கு ஆண் பெண் அமைகின்றனர். ஆனால் உலகம் காலகாலமாகப் பெண்ணை ஆணுக்குச் சமமாக நடத்தியதா? இல்லை. ஆணாதிக்கப் பிடியில் பெண் உரிமை இழந்தாள். சமைப்பது, பிள்ளை பெறுவது என்பனவே அவள் கடமைகள். கணவனின் கொடுமைகளையெல்லாம் அவள் தாங்கினாள். பெண் சித்திரவதைப்பட்டாள்; ஆமையாய், ஊமையாய் வாழ்ந்தாள்.


காட்சி

அவளுக்கு எதிராகவே சாத்திரங்கள், புராணங்கள் எல்லாம் எழுந்தன. ‘வரதட்சணை’ என்ற கொடுமையில் அவள் திருமணப்பந்தலை அணுக முடியாதவளாக இருந்தாள். நம் புதிய உலகின் சட்டங்களும் தொடக்கத்தில் அவளுக்குச் சொத்துரிமை தரவில்லை. ஆண் குழந்தை என்றால் அகமகிழும் சமுதாயம் பெண்குழந்தையைக் கருவிலேயே கண்டு அழிக்கத் தொடங்கியது. அறிவு வளராத சிற்றூர்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலுக்குப் பதிலாக எருக்கம் பாலிட்டுக் கொலை செய்யப்பட்டது. இந்தக் கொடுமைகளை எதிர்த்துச் சீர்திருத்தக் குரல் முழங்கியவர் சிலர். அந்தச் சிலரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பெரும்பங்குண்டு. தமிழ்ச் சமுதாயத்தில் இன்று பெண் தலைநிமிர்ந்து இருப்பதற்கு அவர் எழுதுகோல் தலைகுனிந்து பணியாற்றியதே பெரிய காரணமாகும். அவர் கண்ட பெண்ணுலகம் எத்தகையது என்பதைக் காண்போமா?